Breaking News

கார்த்திகைப் பூவுடன் ஆரம்பமான மலர்க் கண்காட்சி (படங்கள்)

 கார்திகை மாதம் தமிழர்கள் தம் கல்லறை வீரர்களுக்கு
வணக்கம் செலுத்தும் சிறப்பு மாதம் . ஈழ விடுதலைப் போராட்டத்தின் பின்புதான் இவ்வணக்கம் செலுத்தப்படும் பண்பாடு புதிய பரிணாமத்தை பெற்றுக்கொண்டது. ஆனால், தொன்று தொட்டு தமிழர்கள் இடையே படையல் வழிபாடு இருந்து வந்தது.

கார்திகை மாதத்தில் “கார்த்திகை விளக்கீடு” என இறந்தவர்களுக்கு வாழைப்பழத்திலான ரொட்டியினைச் செய்து படைத்து ,தீபங்களை வீடுகள், தொழில் நிறுவனங்கள், வீதிகள் தோறும் ஏற்றி வழிபாடுவார்கள். அதே வேளை ஆலயங்களில்“ சொக்கப்பானை” என இவ் நிகழ்வு இடம் பெறும். 

இது இந்துகளின் வணக்க நிகழ்வாக அமைந்தது. இதே போன்று கிறிஸ்தவர்கள் கார்த்திகை மாதம் மரித்தோர்களை நினைவுகூர்ந்து அவர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடையும்பொருட்டு இறைவேண்டல் செய்து திருப்பலி ஒப்புக்கொடுப்பர். இறந்தவர்களின் நினைவாக 1990 களில்இருந்து ஈழத்தில் கார்த்திகை மாதம் மரநடுகை மாதமாக இருந்துவருகின்றது.

அதற்கு அமைவாக வட மாகாணசபையினால் மர நடுகை மாதத்தை முன்னிட்டு, மாபெரும் மலர்க் கண்காட்சி இன்று (நவ-5வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வட மாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், வட மாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் பங்கேற்ற இம்மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் (கிட்டு பூங்கா) இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது.







கண்காட்சி கூடத்தினை வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் தாவர உற்பத்தியாளர்கள் பங்கேற்கும் இக்கண்காட்சியில் நல்லின பழ மரக்கன்றுகள், நிழல் மரக்கன்றுகள், வெட்டு மரக்கன்றுகள், அலங்காரத் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட இருப்பதோடு விற்பனையும் செய்யப்பட்டன. 

இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய இக்கண்காட்சி 11.11.2015 (புதன்கிழமை) வரை ஒரு வார காலத்துக்குத் தினமும் காலை 9 மணியில் இருந்து மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது.தினமும் இக்கண்காட்சியைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.