புலிகள் மீண்டும் நாட்டில் – மகிந்த எச்சரிக்கை - THAMILKINGDOM புலிகள் மீண்டும் நாட்டில் – மகிந்த எச்சரிக்கை - THAMILKINGDOM
 • Latest News

  புலிகள் மீண்டும் நாட்டில் – மகிந்த எச்சரிக்கை

  விடுதலைப் புலிகளும், இஸ்லாமிய பயங்கரவாதமும் நாட்டில் தலைதூக்கி வருவதாக  முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

  உடஹமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற பொதுமக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  “நாம் ஏற்படுத்திக் கொடுத்த மாற்றம், உருவாக்கிய ஜனநாயகம் அனைத்தும் இன்று சீரழிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி மாற்றம் நாட்டை பாதாளத்திற்குக் கொண்டு செல்லும் என்று நாம் தொடர்ச்சியாக தெரிவித்து வந்தமை இன்று உண்மையாகி விட்டது.

  ஒரு புறம் மேற்கத்தேய நாடுகளின் உதவியுடன், வடக்கு, கிழக்கு பகுதிகளை தனி அலகுகளாக்கவும், புலிகளை மீண்டும் உருவாக்கவும் தமிழர் தரப்பு முயற்சித்து வருகின்றது. இன்னொருபுறம் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியும், அவர்களின் அடிப்படைவாதக் கொள்கையையும் நாட்டில் பயங்கரவாத சூழலை உருவாக்கி வருகிறது.

  இந்த அச்சுறுத்தல் பல காலமாகவே இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னரும் நாட்டை பிளவுபடுத்தும் நோக்கம் சர்வதேச தரப்பினால் முன்னெடுக்கப்பட்டது.அதேபோல் அரசியல் ரீதியிலும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இந்த விவகாரங்கள் தொடர்பில் நாம் ஆரம்பத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட்டோம்.

  நாம் போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நாட்டை அபிவிருத்தியின் பக்கம் திருப்பி குறுகிய காலத்தினுள் சிறந்த நாடாக மாற்றினோம். வடக்கையும், தெற்கையும் ஒரே மாதிரி கையாண்டு மக்களையும் ஒன்றிணைத்தோம்.அதேபோல் நாட்டின் தேசிய பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டோம். வடக்கில் காணப்பட்ட அச்சுறுத்தலான சூழல், அதேபோல் அனைத்துலகத் தரப்பினால் இலக்கு வைக்கப்பட்டமை தொடர்பிலும் அதிக அக்கறை கொண்டு செயற்பட்டோம்.

  அவ்வாறான நிலையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் ஒரே நோக்கத்தில் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் இன ஒற்றுமையையும் கவனத்தில் கொள்ளாது வெறுமனே அதிகார மாற்றத்தை மட்டும் ஏற்படுத்தியுள்ளனர். அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவித்து வருகின்றனர்.

  இஸ்லாமிய பயங்கரவாதம், புலிப்பயங்கரவாதம் ஆகியவை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இந்த மாற்றதையா மக்கள் விரும்பினர் என்று கேட்கும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அதிக அக்கறை கொள்ளவேண்டும். பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டின் மீதான அழுத்தங்களை குறைக்க வேண்டும்.

  அதை விடுத்து வெறுமனே பணத்தையோ அல்லது அதிகாரத்தை தக்க வைக்கும் வகையில் மாத்திரம் செயற்படுவது மோசமான ஆட்சியாகவே அமையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புலிகள் மீண்டும் நாட்டில் – மகிந்த எச்சரிக்கை Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top