Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 39

மண்ணால் கல்லறை போன்று உருவாக்கப்பட்ட பதினொரு மண் அமைப்புக்களில் தடிகள் நடப்பட்டு
அதில் அறையப்பட்ட தகரத் துண்டுகளில் பெண்பிள்ளைகளின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. அவை கடந்த வருடம் மாவீரர் வாரத்தின் போது மல்லாவி மருத்துவமனையில் முதலுதவிப் பயிற்சி பெற்றுவிட்டுத் திரும்பி அம்புலன்ஸ் வாகனமொன்றில் வந்து கொண்டிருந்தபோது இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் உயிரிழந்த ஐயங்கன் குளம் பாடசாலை மாணவிகளின் நினைவுச் சின்னங்கள் என்பதை சுந்தரம் புரிந்து கொண்டான்.

அதேவேளையில் மடுவில் ஆழ ஊடுருவும் படையினரால் தமிழ்த்தினப் போட்டிகளில் கலந்துவிட்டுத் திரும்பிய பாடசாலை மாணவ, மாணவியர் கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டதும், அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் கதறி அழுததும் அவன் நினைவில் வந்து போயின. விடுதலைப்புலிகளிடம் எங்காவது ஒரு பலத்த அடி வாங்கினால் அதற்குப் பதிலாக ஏதுமறியாத அப்பாவி மாணவ மாணவியரைப் பலியெடுப்பதை இலங்கைப் படையினர் தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர் என்பதன் வலிமையான சாட்சியங்களாகவே அந்த நினைவுச் சின்னங்கள் நிமிர்ந்து நின்றன. 

எறித்துக்கொண்டிருந்த பத்துமணிச் சித்திரை வெயிலை விட அந்த நினைவுச் சின்னங்கள் அவன் உடலையும் மனதையும் பல மடங்கு வெப்பத்தால் கொதிக்க வைத்தன. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். சற்றுத் தொலைவில் நாவுண்ணி மரங்களில் பல வர்ணங்களில் மலர்கள் மலர்ந்து கிடந்தன. அவன் அவற்றின் அருகில் போய் சிவப்பு வர்ண மலர்களை மட்டும் தெரிந்தெடுத்து பிடுங்கிக் கொண்டான். கை நிறைய மலர்களைக் கொண்டுவந்து அவற்றின் முன்னால் போட்டுவிட்டு அஞ்சலி செலுத்தினான். அவன் மனம் அந்த மாணவிகளுக்காக கதறி அழுத போதும் கண்களில் நீர் மட்டும் வர மறுத்துவிட்டது. ஆனால் அவை இரண்டும் இரத்தமாய்ச் சிவந்துபோயிருந்தன. அந்த இடத்தைவிட்டு அகல முடியாதபடி ஏதோ ஒருவித உணர்வு இழுத்துப்பிடித்த போதும், அதில் நெடுநேரம் நிற்பதில் எவ்வித பயனும் இல்லை என்பதை உணர்ந்தவனாக சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

குளக்கட்டைத் தாண்டி மருத்துவனை, பாடசாலை என்பவை அமைந்திருந்த இடத்துக்கு வந்தபோது வீதியில் சிறிது சன நடமாட்டம் தென்பட்டது. மருத்துவமனை விறாந்தை மக்களால் நிரம்பி வழிந்தது. பாடசாலையும் ஏதோ ஒரு சோகத்தில் மூழ்கியிருப்பது போன்று அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அவன் அருகில் தென்பட்ட ஒரு தேனீர்க் கடையில் இறங்கி வயிறு நிறைய தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் சைக்கிளில் ஏறிக்கொண்டான். காடும், கிரவல் வெளியும் கொண்ட அந்தப் பாதையில் வெயில் நேரம் சைக்கிள் ஓடுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மீண்டும் ஒரு காட்டாறு குறுக்கிட்ட வளைவில் நின்று மருதமர நிழலில் களைப்பாறிவிட்டுப் புறப்பட்டான்.

அவன் சவாரிச் செல்வராஜா வீட்டை நெருங்கிய போது பன்னிரண்டு மணியை நெருங்கிவிட்டது. அவன் சைக்கிளைவிட்டு இறங்கி, காயா தடிகளால் அமைக்கப்பட்டிருந்த கடப்படியில் நின்று, “மாமா, மாமா..”, எனக் கூப்பிட்டான். அந்தப் பழைய கொலனி வீட்டுக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த செல்வராஜா வெளியே வந்து, “சுந்தரமே.. வா.. தம்பி” என அழைத்தவாறே முற்றத்துக்கு வந்து கடப்புத் தடிகளைக் கழற்றினார். அவரைக் கண்டதும் சுந்தரம் திகைத்தே போய்விட்டான்.

திரண்ட தோள்களும் விம்மிப்புடைத்த மார்பும் வலிமையான கரங்களும் நிமிர்ந்த நடையும் கொண்ட அவரின் நெடிய உருவம் இடிந்து போய்விட்டிருந்தது. அவரின் ஆஜானுபாகுவான தேகம் மெலிந்து முன்புறமாக வளைந்துவிட்டது. பாதி நரைத்துப் போய்விட்ட தாடி தாறுமாறாக வளர்ந்திருந்தது. அவரின் அந்த நிமிர்ந்த நடைகூடத் தளர்ந்துவிட்டது. “என்ன யோசிக்கிறாய்?.. சைக்கிளை அந்த வேப்பமரத்தடியிலை விட்டிட்டு வா.. உள்ள போவம்”, என்றார் அவர். அவர் ஒரு மரக்கதிரையை இழுத்துப் போட்டு சுந்தரத்தை அமரும்படி கூறிவிட்டு தான் ஒரு பின்னல் பாதி அறுந்து போயிருந்த கதிரையில் அமர்ந்து கொண்டார். பின்பு சுக நயங்களை விசாரித்துவிட்டு, பரமசிவத்தின் குடும்பத்தின் இடப்பெயர்வு பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

செல்வராஜாவின் மனைவி மோர் கொண்டுவந்து கொடுத்தாள். பிஞ்சுமிளகாய், வெங்காயம், உப்பு என்பன போட்டு தயாரித்த அந்த மோர்க்கரையல் வெயிலுக்குள்ளால் வந்த அவனுக்கு அமுதமாகச் சுவைத்தது. ஆனால் செல்வராஜாவின் மனைவியும் அவரைப் போலவே உருக்குலைந்து போயிருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை. சுந்தரம் மோர் குடித்து முடியுமட்டும் அமைதியாக இருந்த செல்வராஜர் கதைக்க ஆரம்பித்தார். 

“தம்பி.. ஐயாவுக்கு நான் ஒரு ஆயிரம் ரூபா குடுக்கவேணும் அடுத்தடுத்து எனக்கு தலையிலை இடி விழுந்ததிலை ஒண்டும் செய்யேலாமல் போச்சுது. எண்டாலும் நீங்கள் இப்பிடி இடம்பெயர்ந்து கஷ்டப்படையுக்கை நான் எப்பிடியும் ஒரு மாதத்திலை கொண்டு வந்து தந்திடுறனெண்டு ஐயாவிட்டைச் சொல்லு” அவரின் நிலைமையை உணர்ந்து கொண்ட சுந்தரம், “நான் அதுக்கெண்டு வரேல்ல மாமா”, என்று ஒரு பொய்யை சொல்லிவைத்தான். பின்பு அவன் ஒரு வித தயக்கத்துடன், “அடிக்கடி விழுந்த இடியெண்டால்…?” எனக் கேட்டுவிட்டு இடைநிறுத்தினான்.

செல்வராஜா ஒரு விரக்தி கலந்த சிரிப்புடன் “போன மாவீரர் வாரத்திலை ஐயங்கன்குளத்லை ஆமி வைச்ச கிளைமோரிலை செத்ததிலை என்ரை கடைக்குட்டிப் புஸ்பமும் ஒரு ஆள்.. வரையுக்கை அந்த நினைவிடம் கண்டிருப்பாய்”, என்றுவிட்டு இடைநிறுத்தினார். அவரின் கண்கள் கலங்கிவிட்டன. சுந்தரம் தான் வரும்போது வழியில் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த பதினொரு மாணவிகளில் செல்வராஜாவின் மகளும் ஒருத்தி என்பதை அவன் புரிந்து கொண்டான். அவர் தோளில் கிடந்த துவாயால் கண்களைத் துடைத்துவிட்டு மேலும் தொடர்ந்தார்,

“தங்கச்சியார் செத்ததையே கொஞ்சநாள் யோசிச்சுக்கொண்டிருந்த மூண்டாவது மகனும் ஒரு நாள் சொல்லாமல் பறையாமல் இயக்கத்துக்குப் போட்டான். மூத்த இரண்டு பொடியளும் போராளியள் எண்டு உனக்குத் தெரியும் தானே?” சுந்தரம் எதுவுமே பேசவில்லை. அவன் அவர் ஒரு போராளி குடும்பம் என ஏற்கனவே அறிந்திருந்தான். “மூண்டாவது இயக்கத்துக்குப் போய் ஒரு மாதத்திலை மூத்தவன் வீரச்சாவடைஞ்சு வித்துடலாய் வீட்டுக்கு கொண்டுவந்தாங்கள்”, எனச் சொன்னபோது செல்வராஜாவின் குரல் தளதளத்தது.

பின்பு அவர் ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, “மூத்த மேளின்ரை புருஷன் கொக்காவிலிலை ட்றக்ரரிலை விறகு ஏத்திக்கொண்டு வரயுக்கை கிபிரடியிலை காயப்பட்டுப் போனார். ஒரு கிழமை ஆஸ்பத்திரியிலை உயிருக்குப் போராடி அவரும் கடைசியிலை செத்துப்போனார்”, என்றுவிட்டு “இவ்வளவையும் எப்படியடா தம்பி தாங்க முடியும்?” எனக் கேட்டார். சுந்தரம் கல்லாய் சமைந்து போனான். சவாரி செல்வராஜா என்று பெயர் பெற்ற அந்த மனிதர் ஏன் இப்படி உருக்குலைந்து போனார் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.

இடிக்கு மேல் இடி விழுந்தால் என்னதான் செய்ய முடியும்? சிறிது நேர மௌனத்தின் பின்பு அவர், “நாங்கள் மட்டுமா, எங்களப் போலை எத்தினை குடும்பங்கள் துன்பத்தைச் சுமக்குதுகள். எந்த ஒரு நல்ல விஷயத்தையும் விலை குடுக்காமல் பெறமுடியாதெண்டு எனக்கு வடிவாய்த் தெரியும். ஆனால் எதிர்பாராத இழப்புக்கள் வரயுக்கை மனம் தாங்குதில்லை”, என ஒரு பெரூமூச்சுடன் கூறி முடித்தார். செல்வராஜா ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டவராக வேறு விஷயங்களைப் பேசினாலும் சுந்தரத்தால் அவர் கூறிய இழப்புக்கள் பற்றிய நினைவிலிருந்து விடுபட முடியவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்கள் இப்படியே இழுத்துக் கொண்டிருக்க வேண்டுமா என்ற கேள்வி மீண்டும் மீண்டும் எழுந்து அவனை உலுப்பிக் கொண்டிருந்தது.

அவனின் மனம் ஏதோ குழப்பங்களால் தவித்துக்கொண்டிருந்தது. அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் போதே செல்வராஜாவின் மனைவி இருவரையும் மதி உணவுக்கு அழைத்தாள். அவள் கொடுத்த வெண்கலச் செம்பு நிறைந்த தண்ணீரில் கையைக் கழுவிவிட்டு சமையலறைக்குள் சென்று அருகருகே நிலத்தில் அமர்ந்து கொண்டனர். அவள் வாழையிலையில் தண்ணீர் தெளித்துவிட்டு உணவு பரிமாற ஆரம்பித்தாள். பச்சைப் பெருமாள் நெல்லரிசிச் சோறு, முருங்கை இலை வறை, முருங்கைக் காயில் பால் கறி, சுண்டம் கத்தரிக்காய்ப் பிரட்டல் குழம்பு, மிளகாய் பொரியல், தயிர். ஊறுகாய் என சாப்பாடு சுந்தரத்துக்கு அமுதமாய் சுவைத்தது.

விரத நாட்களில் கூட பரமசிவம் வீட்டில் இப்படியான சிக்கனமான ஆனால் சுவையான உணவை அவன் ருசித்ததில்லை. சாப்பிட்டு முடிந்து சிறிது நேரத்தில் சுந்தரம் புறப்படத் தயாரான போது, செல்வராசா தடுத்துவிட்டார். வெள்ளாங்குளம் வீதியில் பிற்பகல் மூன்று மணிக்கே யானை உலாவத் தொடங்கிவிடுமெனவும், தனியே போவது ஆபத்தெனவும், அடுத்த நாள் காலையில் புறப்பட்டுப் போகும்படியும் கூறிவிட்டார். சுந்தரத்துக்கும் அவர் கூறியது சரியாகப்படவே, தனது பயணத்தை அவன் மறுநாளைக்கு ஒத்திவைத்துவிட்டான். மாலை ஐந்து மணியளவில் செல்வராஜாவின் மூத்த மகள் ஒரு சைக்கிளில் வந்திறங்கினாள். செல்வராசா சுந்தரத்திடம் “இது தான் என்ரை மூத்தவள்”, இவளின்ர புருஷன் தான் கொக்காவிலிலை கிபிரடியிலை செத்தவன். பொருண்மியம், புருஷன் செத்தபிறகு இவளுக்கு ஒரு வேலை போட்டுக் குடுத்திருக்கிறாங்கள். ஏதோ இரண்டு பிள்ளையளையும் வைச்சு சமாளிக்கிறாள்”, என அவளை அறிமுகப்படுத்தினார்.

இன்னும் இளமை குன்றிவிடாத அவளின் முகம் பொட்டிழந்து வெறுமையாகக் கிடப்பதைப் பார்க்கும் போது அவனுள் ஒரு வித கவலை இழையோடத்தான் செய்தது. அவள் அவனை நோக்கி மெல்லியதாகப் புன்னகைத்தபடி உள்ளே சென்றாள். அவளின் புன்னகையில் கூட ஒரு பெரும் இழப்பின் சோகம் அப்பிக் கிடப்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்று இரவு அவனால் தூங்கவே முடியவில்லை. செல்வராஜா குடும்பம் போன்று எத்தனை குடும்பங்கள் இழப்புக்கள் மேல் இழப்புக்களை அனுபவிக்கின்றன. இவற்றுக்கெல்லாம் முடிவேயில்லையா? என்ற கேள்வி எழுந்த போது விடுதலை என்பதை விட வேறு எதையும் அதற்கான பதிலாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.

விடுதலை தான் ஒரே வழியென்றால் அதை அடைய தன் பங்கு என்ன? என இன்னொரு கேள்வி அவனுள் எழத் தவறவில்லை. அதற்கான பதில் தன்னுள் இருப்பதை அவன் உணர்ந்து கொண்ட போது சகல குழப்பங்களும் தீர்வது போன்ற ஒரு நிம்மதி தோன்றியது. அந்த நிம்மதியில் அவனையறியாமல் அவன் தூங்கிப் போய்விட்டான்.

-தமிழ்லீடருக்காக அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 38