புதிய அரசாங்கம் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கை வீணாகாது - ராஜித - THAMILKINGDOM புதிய அரசாங்கம் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கை வீணாகாது - ராஜித - THAMILKINGDOM
 • Latest News

  புதிய அரசாங்கம் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கை வீணாகாது - ராஜித

  ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவோம். சமஷ்டி என்ற கோட்பாட்டில் நாட்டை பிளவுபடுத்த முடியாது. புதிய ஆட்சியின் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கை ஒருபோதும் வீணாகாது என அமைச்சரவை ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

  அதிகாரப்பகிர்வு என்பது அவசியமான ஒன்றாகும். இத்தனை காலமாக அதிகாரபகிர்வு விடயத்தில் அரசாங்கம் இழுத்தடிப்புகளை மேற்கொண்டமை நாட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இப்போதும் இந்த விடயத்தில் இழுத்தடிப்பு செய்தால் தொடர்ந்தும் நாட்டில் சிக்கல்கள் தான் ஏற்படும். எனவே பொருத்தமான வகையில் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவது எமது பிரதான நோக்கமாகும்.

  அதேபோல் இந்த சிக்கல்களை தீர்ப்பதில் புதிய அரசியலமைப்பு திருத்தத்தை உருவாக்குவதா அல்லது இருக்கும் அரசியலமைப்பை திருத்துவதா என நாம் ஆராய்ந்து வருகின்றோம். இந்த விடயத்தில் மக்கள் கருத்தை ஆராய வேண்டியதும் அவசியமானது. இப்போது வரையில் சிவில் அமைப்புகளினதும் மக்களினதும் கருத்துக்களை ஆராயும் நடவைக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  எவ்வாறாயினும் நாட்டிற்கு பொருந்தக்கூடிய வகையில் பலமான மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதே ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நோக்கமாகும்.

  கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்கள் எம்மை நம்பி வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தை நம்பியே மக்களிடம் வாக்குறுதி வழங்கியது. அந்த நம்பிக்கையை நாம் ஒருபோதும் வீணாக்க மாட்டோம். மக்களை ஏமாற்றி நாட்டை பிளவுபடுத்த நாம் ஒருபோதும் தயாரில்லை. ஆகவே இந்த நாட்டுக்கு பொருத்தமான வகையில் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு என்ற நிலைப்பாட்டில் இருந்து நாம் செயற்படுவோம்.

  அதிகாரப்பகிர்வு என்பது நாட்டை பிளவுபடுத்தும் வகையில் அல்லது பிரிவினையை பலப்படுத்தும் வகையில் அமைந்துவிடக்கூடாது. அதேபோல் ஒற்றையாட்சி மட்டுமே இந்த நாட்டை பிளவுபடுத்தாது முன்னெடுத்து செல்லும் ஒரே வழிமுறையாகும். அந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இப்போது அதியுச்ச அதிகாரப் பகிர்வை கேட்பவர்கள் பின்னர் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட இடமளிக்காத வகையில் நாம் செயற்படுவோம் என்றார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: புதிய அரசாங்கம் மீது தமிழ் மக்கள் வைத்த நம்பிக்கை வீணாகாது - ராஜித Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top