Breaking News

'பேரறிவாளன் குற்றவாளி அல்ல....!' - விசாரணை ஏஜென்சி தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்ம முடிச்சுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் குற்றவாளியே அல்ல, என விசாரணை ஏஜென்சி வெளியிட்ட தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், கடந்த 1999ம் ஆண்டு முதல் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக் கிறார் பேரறிவாளன். இவரது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற பேரறிவாளனின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ' இந்த வழக்கு எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரலாம். எனவே எனக்குள்ள சில கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்' என்ற முன்னுரையோடு தடா நீதிமன்றம் மற்றும் எம்.டி.எம்.ஏ எனப்படும் பல்நோக்கு விசாரணை முகமை (ஜெயின் கமிஷன் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது) ஆகியவற்றுக்கு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தார் பேரறிவாளன்.

27.1.14 அன்று முதன்முதலாக ஆர்.டி.ஐ மூலம் விண்ணப்பித்தார். இந்த மனுவில், அவர் கேட்டிருந்த மிக முக்கியமான கேள்வி, தடா நீதிமன்றத்தில் மூடிய அறைக்குள் விசாரணை நடத்தப்பட்டது. இப்படி நடத்துவதற்கு உத்தரவிட்டது யார்? அந்த உத்தரவின் நகல் வேண்டும்' என்பதுதான். இதே கேள்வியை எம்.டி.எம்.ஏவிடமும் கேட்டிருந்தார். இதற்கான பதிலை தடா நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அலுவலர் அனுப்பாததால், 27.1.14 அன்று மேல்முறையீடும் செய்தார்.

அதன்பிறகு நடந்த கடிதப் போக்குவரத்துகள் அலட்சியத்தின் உச்சகட்டம் என்கிறார்கள் இந்த வழக்கை கவனித்து வருபவர்கள். பேரறிவாளனின் கேள்விகளுக்கு பதில் அனுப்பிவிட்டதாக தடா நீதிமன்றத்தின் பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்திருந்தார். வேலூர் சிறையின் முகவரிக்கு அந்தக் கடிதம் வந்திருந்தால், பேரறிவாளனின் கைகளுக்கு கிடைத்திருக்கும். அந்தக் கடிதமும், மூடிய அறைக்குள் விசாரணை நடத்த உத்தரவிட்டதற்கான நகலும் தொலைந்து போய்விட்டது என சிறை நிர்வாகம் கூறிவிட்டது. 

இதனால் அதிர்ந்துபோன பேரறிவாளன், மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல்முறையீடுக்கு விண்ணப்பித்தார். இதையடுத்து, தொலைந்து போன உத்தரவின் நகல் எங்கே பதுங்கியுள்ளது? என்பதைக் கண்டுபிடித்து பேரறிவாளனிடம் ஒப்படைக்குமாறு, கடந்த 11.3.16 அன்று தலைமைச் செயலாளர் ஞானதேசிகனுக்கு உத்தரவிட்டுள்ளார் மாநில முதன்மை தகவல் ஆணையர் ராமானுஜம் (கடித எண்: SA 36782/sc/c/2014) 

இதுபற்றி நம்மிடம் பேசிய வழக்கறிஞர்.சிவக்குமார், " தடா நீதிமன்றம் அனுப்பிய பதில் மனு அடங்கிய கடிதத்தை யார் பதுக்கியது என்று தெரியவில்லை. தவிர, தடா நீதிமன்றத்தின் 3/92 வழக்கில் பேரறிவாளன் குற்றவாளி என்பதால் அவருக்கு நகல் அனுப்பப்பட வேண்டும் என தகவல் ஆணையமும் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில், பல்நோக்கு விசாரணை முகமையிடம்(MDMA), 'அகண்ட சதி எனக் குறிப்பிட்ட இந்த வழக்கில், மூடிய அறைக்குள் ஏன் விசாரணை நடத்தப்பட்டது?' என்ற கேள்வியைக் கேட்டபோது, ' நீங்கள் அதில் குற்றவாளி அல்ல. அதனால் உங்களுக்கு விவரங்களைத் தர முடியாது' எனக் கூறியுள்ளது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

அப்படியானால், மூடிய அறைக்குள் விசாரணை நடத்தியதின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதை தடா நீதிமன்றத்தின் கடிதம்தான் விளக்கும். பேரறிவாளனை திட்டமிட்டு சதி வழக்கில் சிக்க வைத்ததன் பின்னணியும் அதில் அம்பலமாகும். 25 ஆண்டுகளாக முடிவடையாமல் நீடிக்கும் வழக்கின் விடைகளுக்கு மிகப் பெரிய தேடுதலாகவும் அவை இருக்கும். தலைமைச் செயலாளர் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்ற உத்தரவு மகிழ்ச்சி தருகிறது. தடா நீதிமன்றம் அனுப்பிய கடிதத்திற்காகக் காத்திருக்கிறோம்" என்றார் நிதானமாக.

பேரறிவாளன் விவகாரத்தின் அடுத்தடுத்த திருப்பங்களை ஆர்வமாகக் கவனித்து வருகிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். 
 - ஆ.விஜயானந்த்