தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச்செயலாளர் வி.எஸ்.சிவகரன், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகளினால் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள அவரது அச்சகத்தில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அத்துடன், சிவகரனை கைது செய்ய வந்த அதிகாரிகள் துண்டு ஆவணமொன்றை வழங்கியுள்ளனர்.
குறித்த துண்டில், 'பாதுகாப்பு அமைச்சின் கீழ், அவசரகால ஒழுங்கு விதிகள் சட்டத்தின் கீழ், அல்லது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படும் அத்தாட்சி பத்திரம்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவகரனை கைதுசெய்ததற்கான காரணம் எதையும் அதிகாரிகள் சொல்லவில்லை. கைதுசெய்யப்பட்ட சிவகரன், வவுனியா பயங்கரவாத விசாரனை பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவர் கடந்தகாலங்களில் தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளையும் கொழும்பு நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்து வந்திருந்தார் என்பதோடு கடந்த தேர்தல் காலத்தில் த.தே.கூ ட்டமைப்பு தலைமை நோக்கியும் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார் என்பதும் நோக்கத்தக்கது.