கூட்டமைப்பு உறுப்பினருக்கு சலக்கடுப்பு; 320 பரப்பு காணி பறிபோனது!
நிலஅளவைத் திணைக்களத்தினால் கடற்படையினருக்கு
காணி அளிவீடு செய்யும் நடவடிக்கை தொடர்பில் தெரிந்திருந்தும் கூட்டமைப்பினர் அக்கறை செலுத்தாமை காரணமாக முல்லைத்தீவில் 320 பரப்பு காணி கடற்படையினர் வசமான பரிதாபம் நேற்று நிகழ்ந்திருக்கிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
பொதுத்தேவைக்காக காணிகளை சுவீகரிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையின் கீழ் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் காணிகள் சுவீகரிக்கப்படுகின்ற நடவடிக்கைகள் வடக்கில் இடம்பெற்றுவருகின்றன.
காணி அமைச்சின் பணிப்பிற்கமைய நில அளவைத் திணைக்களத்தினர் காணிகளை அளவீடு செய்து சட்டப்படி இராணுவத்தினருக்கோ கடற்படையினருக்கோ சொத்தாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு கட்டமாக கடந்த சில நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நில அளவைத் திணைக்களத்தினர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்றும் இன்றும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நான்கு நடவடிக்கைகளில் மூன்று நடவடிக்கைகள் எதிர்ப்புக்களால் கைவிடப்பட்டிருக்கின்றன. ஆனாலும் செம்மலைப் பகுதியில் எந்தவித எதிர்ப்புக்களும் வெளியிடப்படாத நிலையில் 20 ஏக்கர் தென்னம் தோட்டப்பகுதியில் கடற்படையினரின் முகாம் அமைந்திருந்த காணி சுவீகரிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் மறைமுக ஆதரவு இருந்துள்ளமை தொடர்பில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்கள் ஏற்கனவே கிராம அலுவலர்களுக்கு தெரியவந்திருக்கின்ற நிலையில் சம்பவம் தொடர்பில் கூட்டமைப்பினரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் சுதந்திரபுரம் பகுதியில் இராணுவத்தினருக்கு என காணி அளவீடு செய்ய நில அளவைத் திணைக்களத்தினர் சென்ற போது அங்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தியும் மக்களும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கின்றது.
அதேநேரத்தில் செம்மலையில் கடற்படையினருக்கு காணி அளவீடு நடைபெற்றிருக்கிறது.
சம்பவம் குறித்து ஏற்கனவே அறிந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், மாகாணசபை உறுப்பினர்கள் அன்ரனி ஜெகநாதன், ரவிகரன் ஆகியோர் அக்கறை எடுத்து செயற்படாமல் இருந்தமையால் அங்கு 20 ஏக்கர் காணி பறிபோயிருக்கிறது. செம்மலை காணி சுவீகரிப்புத் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தனிப்பட்ட காரணத்தை தெரிவித்து அங்கு செல்வதைத் தவிர்த்திருக்கிறார். அதேபோல மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அரச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளச்சென்றிருக்கிறார்.
அன்ரனி ஜெகநாதனை தொடர்புகொண்டு கேட்டபோது தனக்கு சலக்கடுப்பு என்பதால் செல்லமுடியாது என்று தெரிவித்திருக்கிறார். இதேவேளை இன்று சிலாவத்தை சந்திப்பகுதியில் கடற்படையினருக்காக காணி அபகரிப்பு நடைபெற்றபோது மக்கள் ஒரு சிலரே சென்று எதிர்ப்புத்தெரிவித்திருக்கின்றனர். அங்கு நின்றிருக்கவேண்டிய ரவிகரனும், அன்ரனி ஜெகநாதனும் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு போஸ்குடுக்கச் சென்றுவிட்டனர் என்று சிலாவத்தைப் பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை நாளை நாயாற்றுப் பகுதியிலும் சுதந்திரபுரம் பகுதியிலும் காணி அபகரிப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








