Breaking News

புலிகள் அனைவரையும் நாடு கடத்தி விடுங்கள்! மு.தம்பிராசா

முன்னாள் போராளிகளை நாடு கடத்தி விடுங்கள் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , தற்போது வடக்கு கிழக்கில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படுகின்றார்கள். இதனால் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இலங்கை அரசாங்கம் முன்னாள் போராளிகள் மீண்டும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என அஞ்சினால் அவர்களை ஐரோப்பியா நாடுகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டு நாடு கடத்தி விடுங்கள்.

அதனை விடுத்து மீண்டும் மீண்டும் அவர்களை கைது செய்து அவர்களை வாழ் நாள் முழுவதும் அச்சத்தில் வாழ வைக்காதீர்கள் . இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கிளிநொச்சியில் அத்து மீறி இராணுவ முகாமுக்கு நுழைந்ததாக தெற்கில் பலவிதமான கருத்துக்களை பலரும் கூறி வருகின்றார்கள். அவர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பதற்காக நேற்றைய தினம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தி இருந்தார். அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வேறு கேள்விகள் கேட்க முற்பட்ட வேளை அவற்றுக்கு பதிலளிக்க முடியாது என கூறுகின்றார்.

அத்துடன் வடக்கு கிழக்கில் தொடரும் கைதுகள் கடத்தல்கள் குறித்து கருத்து கூறவில்லை. தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் பேசும் மக்களுமே காரணமாவார்கள். அதனால் தமிழர்கள் தொடர்பில் நிச்சயமாக இந்த அரசாங்கம் கரிசனை கொள்ள வேண்டும். தற்போது வடக்கு கிழக்கில் தொடரும் கைதுகள் கடத்தல்கள் என்பன கடந்த அரசாங்க காலத்தில் நடைபெற்றது போலவே நடக்கின்றது.

இந்த அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கம் என்றால் ஒரு சம்பவம் தொடர்பில் ஒருவரை விசாரிக்க வேண்டும் எனில் இந்த விடயம் தொடர்பில் உம்மிடம் விசாரிக்க வேண்டும் என கூறி அவரை விசாரணைக்கு அழைக்க வேண்டும். அதனை விடுத்து முன்னைய அரசாங்கம் போன்று காரணம் கூறாது கைது செய்வதும் வீதியில் சென்று கொண்டு இருப்பவரை கடத்தும் செயற்பாடுகளை இந்த அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும். அதனை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளும் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தார்