Breaking News

முன்னாள் போராளிகள் இனி கைது செய்யப்படமாட்டார்கள்!

அரசாங்கத்துடன் நாங்கள் கதைத்ததன் விளைவாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளை, பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மீண்டும் கைது செய்தல் இனிமேல் நடக்காது என நம்புகின்றோம்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற சந்திப்பொன்றை முடித்த பின்னர் வெளியில் வந்த சுமந்திரன் எம்.பி, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நாங்கள் அரசாங்கத்தைச் சந்தித்தமையால் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் எந்த கைதுகளும் இடம்பெறவில்லை. சந்தேககத்தில் பேரில் ஒருவர் கைது செய்யப்படலாம். ஆனால் அதற்குரிய காரணம், கைது செய்யப்படுவர்களின் உறவினர்களுக்கு எழுத்து வடிவில் வழங்கப்பட வேண்டும். மீண்டும் இங்கு கடத்தல்கள் இடம்பெறுவதை ஏற்கமுடியாது’ என்றார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் நாகலிங்கன் வேதநாயகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடலொன்றின் போது கருத்து தெரிவித்த வனஜீவராசிகள் அமைச்சர் அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம, ‘இராணுவத்தினர் ஹோட்டல்களை நடத்தவது தொடர்பான பிரச்சினை இலங்கை முழுவதிலும் உள்ளது. அது தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்ட பின்னர் தீர்வு காணப்படும்’ என்றார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

‘சுண்டிக்குளம் பகுதி தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான இடவரைபு 3 மாதகாலத்துக்குள் வரையப்படும். அதன் பின்னர் பொதுமக்களின் காணிகள் மற்றும் அவர்களது விவசாய காணிகள் தொடர்பில் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களிடம் வழங்கப்படும். அதுவரையில் அதிகாரிகள் காணி சுவீகரிப்பு என மக்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்.

சுண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம், அந்த இடத்தில் தேவையானதா இல்லையா, முன்னர் அங்கு இருந்ததா? என ஜனாதிபதி, பிரதமர் தீர்மானிப்பார்கள். அது தொடர்பில் நான் கருத்துக் கூறமுடியாது. இராணுவத்தினர் ஹோட்டல் நடத்தும் பிரச்சினை அங்கு மட்டுமல்ல காங்கேசன்துறை தொடக்கம் தென்னிலங்கை வரையில் உள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் கொள்கை வரைபு செய்ததின் பின்னர் அதற்கான தீர்வு எடுக்கப்படும்’ என்றார்.