Breaking News

யாழில் இளைஞன் கடத்தல் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் வெள்ளை வானில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடத்திச் செல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மனைவி யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளார்.

இந்த முறைப்பாட்டை இன்று வெள்ளிக்கிழமை செய்யவுள்ளதாக கடத்தப்பட்ட இளைஞனின் மனைவி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நுணாவில் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த தமிழ் இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். பின்னர் அவர் பூசா தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

குறித்த தமிழ் இளைஞரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே கடத்திச் சென்று பின்னர் கைது செய்ததை சாவகச்சேரி பொலிஸார்  உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் இச்செயற்பாடு மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டியிருக்கும் கடத்தப்பட்டவரின் மனைவி, இதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யவுள்ளார்.

இதேவேளை தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இதனை உறுதிப்படுத்த பொலிஸார் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.