Breaking News

சுவாமிநாதனுக்கே உபதேசிக்க வேண்டிய துர்ப்பாக்கியம்

முருகப் பெருமானுக்கு சுவாமிநாதன் என்றொரு பெயர் உண்டு. சுவாமிநாதன் என்பது தந்தைக்கு உபதேசம் செய்தவன் என்ற பொருள் தருவது.

ஒருமுறை பிரம்ம தேவரை முருகப்பெருமான் சிறைப்படுத்துகிறார். பிரணவத்தின் பொருள் தெரியாததால் அப்படியயாரு தண்டனை அந்த நேரத்தில் விதிக்கப்பட்டது. படைத்தல் கடவுளாகிய பிரம்மதேவர் கட்டாயம் பிரணவத்தின் பொருளை அறிந்திருக்க வேண்டும். எனினும் அதை அவர் அறியாத காரணத்தால் சிறைப்படுத்தினார் முருகன். 

பிரம்மதேவரை பாலன் முருகன் சிறைப்படுத்தியுள்ளார் என்ற செய்தி சிவபெருமானுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ச்சியடைந்த சிவப்பரம்பொருள் முருகனை அழைத்து முருகா! நீ அப்படிச்செய்யக் கூடாது. பிரம்மதேவரை விடுதலை செய் என்கிறார். 

அதற்கு சுவாமி! என்னிடம் திறப்பு இல்லை என்று முருகன் கூறவில்லை.  மாறாக தந்தையே பிரணவத்தின் பொருள் பிரம்மதேவருக்கு தெரியவில்லை அதனால்தான் சிறை வைத்தேன் என்றார் முருகன். இப்போது சிவன் அதிர்ந்து போகிறார். முருகா! எனக்கும் பிரணவத்தின் பொருள் தெரியாது அந் தப்பொருளை எனக்கு உபதேசித்து அருள் என்றார் சிவன்.  தந்தையே பிரணவத்தின் பொருளையான் உங்களுக்கு உபதேசிப்பதாக இருந்தால், நான் குருவாகவும் நீங்கள் சிஷ்யனாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

முருகனின் நிபந்தனையை ஏற்றுக் கொண்ட தந்தை சிவன் தன் தனயன் பாலமுருகனிடம் பிரணவத்திற்கான பொருளை கேட்டறிகிறார். இவ்வாறு தந்தைக்கு உபதேசம் செய்ததால் முருகனுக்கு சுவாமிநாதன் என்ற பெயர் ஏற்படலாயிற்று.  அட! சுவாமிநாதன் என்றால் அதற்கு இப்படி ஒரு விளக்கமும் காரணமும் உண்டா என்று நீங்கள் கண்இமையை மேல் எழுப்புவது தெரிகிறது. 

ஆம்! இதுதான் தமிழின் பெருமை. ஒரு பெயருக்குக் கூட எத்துணை பொருள்; எத்துணை தந்துவம் என்று பார்க்கிறீர்களா? இதற்கு மேலாக மகனிடமும் தந்தை கற்றுக்கொள்ள வேண்டி இருக்கலாம் என்ற உயர்தத்துவத்தை எடுத்தியம் புவதும் சுவாமிநாதன் என்ற பெயர் உணர்த்தும் பொருள்.  குழந்தை, சிறுவர் என்றில்லாமல் யார் யார் எல்லாம் அறிவியலில் உயர்ந்து நிற்கின்றனரோ அவர்களிடம் எல்லாம் கற்றுத்தேற வேண்டும்.

பெரியவர்களுக்கு எல்லாம் தெரியும்; சிறியவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைப்பது மடமை என்ற உண்மை உணர்த்துகின்ற சம்பவம்தான் தந்தைக்கு உபதேசம் செய்கின்ற காட்சி. தன் தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமிநாதன் என்று முருகன் பெற்ற பெயர் பெருமைக்குரியது. இருந்தும் சுவாமிநாதன் என்ற பெயர் உடையவருக்கு உபதேசம் செய்ய வேண்டி இருப்பதுதான் எங்கள் துரதிர்ஷ்டம்.

அட! பொருத்துவீடு தொடர்பில் சுவாமிநாதனுக்கே உபதேசம் செய்ய வேண்டியுள்ளது. என்ன செய்வது எல்லாம் எங்கள் தலைவிதி.

-வலம்புரி