Breaking News

தனி நாடாகிறது பிரித்தானியா-கமரோன் பதவி விலகிகின்றார்(காணொளி)

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா
நிலைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) முழு பிரித்தானிய மக்களும் உற்சாகமாக வாக்களித்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு மக்களின் ஆதரவு அதிகம் கிடைத்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

43 வருடங்களுக்கு பின்னர் பிரித்தானியாவின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக நேற்று (வியாழக்கிழமை) பிரித்தானிய மக்கள் தமது வாக்குகளை அளித்திருந்த நிலையில், பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக 52 வீதமான மக்களும் பிரித்தானியா தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக 48 வீதமான மக்களும் தமது வாக்குகளை அளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவளித்து பரப்புரை நிகழ்த்தி வந்த பிரித்தானிய UKIP கட்சி தலைவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “ஜூன் 23 ஆம் திகதி பிரித்தானியாவின் சுதந்திரதினம் என்றே கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.




ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்பது பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக இருக்குமானால் எதிர்வரும் மாதங்களில் பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் பாரிய மாற்றங்களும் தாக்கங்களும் உணரப்படும் என பல்வேறு ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டு வந்தனர்.

இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பின்போது டேவிட் கேமரன் , ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பிரிட்டன் தொடர்ந்து இருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகினால், அதற்கு பொருளாதார மற்றும் பாதுகாப்பு விளைவுகள் இருக்கும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள இங்கிலாந்தும் , வேல்ஸும் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்தன; லண்டன், ஸ்காட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறக்கூடாது என்று வாக்களித்தன.


இந்த முடிவுகளின் பிரகாரம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக ஒரு கோடியே 74 இலட்சத்து 10 ஆயிரத்து 742 பேர் வாக்களித்துள்ளனர்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஆதரவாக ஒரு கோடியே 61 இலட்சத்து 41 ஆயிரத்து 241 பேர் வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதற்கு ஆதரவாக வட அயர்லாந்து, லண்டன் மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள மக்கள் வாக்களித்துள்ளனர்.

வட அயர்லாந்தில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா, நீடிப்பதற்கு ஆதரவாக 55 தசம் 8 வீதமான மக்கள் ஆதரவு வழங்கியுள்ளதுடன், இந்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 40 ஆயிரத்து 437 ஆக பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக வாக்களித்தோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 49 ஆயிரத்து 442 ஆக அமைந்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை 44 தசம் 2 வீதமாக பதிவாகியுள்ளது.

வட அயர்லாந்தில் 62 தசம் 9 வீதமான மக்கள் தமது வாக்குரிமையை இந்த சர்வஜென வாக்கெடுப்பில் பயன்படுத்தியுள்ளனர்.

இதேவேளை ஸ்கொட்லாந்தில் 16 இலட்சத்து 61 ஆயிரத்து 191 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அத்துடன் 10 இலட்சத்து 18 ஆயிரத்து 322 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவாக தமது வாக்கினை பதிவுசெய்துள்ளனர்.

ஸ்கொட்லாந்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 67 தசம் 2 வீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

எனினும் இங்கிலாந்தின் வட பிராந்தியம் மற்றும் வேல்ஸ்சிலுள்ள மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு ஆதரவளித்துள்ளனர்.

இங்கிலாந்தில் ஒரு கோடியே 51 இலட்சத்து 88 ஆயிரத்து 406 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என கோரி, தமது வாக்கை பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை ஒரு கோடியே 32 இலட்சத்து 66 ஆயிரத்து 996 பேர் , ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இங்கிலாந்தில் அதிக வாக்களிப்பு வீதம் பதிவாகியுள்ளதுடன், மொத்த வாக்காளர்களில் 73 வீதமான மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தியுள்ளனர்.

அத்துடன் வேல்ஸ்சில் எட்டு இலட்சத்து 54 ஆயிரத்து 572 பேர் பிரித்தானியா வெளியேறுவதற்கு ஆதரவாகவும், 7 இலட்சத்து 72 ஆயிரத்து 347 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிப்பதற்கு ஆதரவாகவும் தமது வாக்கினை பதிவுசெய்துள்ளனர்.

வேல்ஸ்சில் 71 தசம் 7 வீதமான மக்கள் சர்வஜென வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், பிரித்தானிய மக்களின் விருப்பம் என்னவென்பது வெளியாகி சில மணித்தியாலங்களிலேயே பிரித்தானிய நாணயமான பவுண்களின் பெறுமதி பாரிய வீழச்சியை சந்தித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த வீழ்ச்சியானது 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் பவுணுக்கு ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய முன்னைய செய்தி