Breaking News

தமிழர்களின் தேசிய விடுதலையை நோக்கிய பயணத்தில் திட்டமிட்ட மதக் குழப்பம்



தமிழர்களின் தேசிய விடுதலையை நோக்கிய பயணத்தில் திட்டமிட்ட மதக் குழப்பங்களும் சாதிப் பிரிவினைகளும் பெருந் தடையாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான கருத்தமர்வு சிவபூமி அறநெறிப் பாடசாலை மாநாட்டு மண்டபத்தில், இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற போது அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட முறையில் இந்து ஆலயங்கள் அழிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட சிவஞானம் சிறிதரன், நைனாதீவு இன்னும் சில காலங்களில் நாகவிகாரைக்கு உரித்துடையதாகிவிடும் ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மதங்களை வைத்து மக்களுக்கிடையே குழப்பங்களை ஏற்படுத்த முயல்பவர்கள் வெறும் சுயநலத்துக்காகச் செயற்படுபவர்கள் எனக் குறிப்பிட்ட சிவஞானம் சிறிதரன்,

மக்களிடையே பிரிவினைகளும் குழப்பங்களும் தோற்றுவிக்கப்படுவதாகவும், தமிழர்கள் நீண்ட காலமாக விடுதலையை அடைவதற்காகப் போராடி வருவதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்கள் மொழியாலும் பண்பாட்டாலும் கலாச்சாரத்தாலும் தனித்துவமானவர்கள் என்றும் தமிழர்களுக்கென்று வீர வரலாறு உண்டு என்பதை எமது உள்ளங்களில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமய ஒழுக்க நெறிமுறைகளை மக்களது அமைதிக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அவர்,

இளைய தலைமுறையினர் தீய வழிகளை நாடிச் செல்வதற்கும், அவர்களது வாழ்க்கை பாழாக்கப்படுவதற்கும் காரணங்கள் பல இருந்தாலும் மதங்கள் தமது கடமைகளைச் சீராகச் செய்யத் தவறியுள்ளமையும் பிரதான காரணமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



இந்து மதத்தைச் சிதைப்பதற்கும் மொழியை அழிப்பதற்கும் என பல்வேறுபட்ட வடிவங்களில் பலர் செயற்படுவதாகக் குறிப்பிட்ட அவர், எனவே இந்து சமய அமைப்புக்களும் மக்களும் விழிப்படைய வேண்டும் என்றும் சிவஞானம் சிறிதரன் கேட்டுக்கொண்டுள்ளார்.