Breaking News

மரணித்துப்போன குமாரபுரம் விவகாரம் : ஜனாதிபதியிடம் நீதி கோரும் மக்கள்



குமாரபுரம் கொலை வழக்கில் தமக்கு நீதி கிடைக்கவில்லையென தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட மக்கள், நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபுரம் கொலை விவகாரம் தொடர்பில், ஜனாதிபதிக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வழங்கிய மகஜர் ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபுரம் வழக்கின் தீர்ப்பு தமக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த மக்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்களுக்கு இலக்காகி, பாதிக்கப்பட்டு வரும் சிறுபான்மை சமூகத்திற்கு உறுதியாக நீதி வழங்கப்படும் என்ற தங்களின் நிலைப்பாட்டை உறுதி செய்வதற்கு, இந்த வழக்கின் தீர்ப்பை மேன்முறையீட்டிற்கு உள்ளாக்குங்கள் என குறித்த மகஜரில் தெரிவித்துள்ளனர்.

குமாரபுரம் சம்பவத்தில் ஒரு கர்ப்பிணித் தாய் உள்ளிட்ட 26 பேர் கொலைசெய்யப்பட்டமை மற்றும் 16 வயது நிரம்பிய மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை என்பன, பின்னர் நடந்த விசாரணைகளில் ஆதாரத்துடன் விபரிக்கப்பட்டுள்ள நிலையில், 20 வருடங்கள் கழிந்த பின்னர் இவ்வாறான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டமை தமக்கான நீதி மறுக்கப்பட்டதை தெளிவாக சுட்டிக்காட்டுவதாக மக்கள் தெரிவித்துள்ளதோடு, வழங்கப்பட்ட தீர்ப்பை மேன்முறையீடு செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்

அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு மற்றும் அவர்களது மறுவாழ்விற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

1996ஆம் ஆண்டு குமாரபுரத்தில் 26 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, 36 பேர் வரை காயமடைந்தனர். இது தொடர்பில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கில், 8 இராணுவ வீரர்கள் சநதேகநபர்களாக இனங்காணப்பட்ட நிலையில், ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் இறந்துவிட்டார். எஞ்சிய 6 இராணுவ வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு அண்மையில் அநுராதபுரம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.