Breaking News

இன்றைய எழுக தமிழில் முதலமைச்சரின் சிறப்புரை (காணொளி)


இன்றைய எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டு
சிறப்புரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் அவர்களது சிறப்புரை காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணி யாருக்கும் எதிரானதல்ல குறிப்பாக தமிழரசுக்கட்சிக்கு எதிரானது அல்ல என்றும் பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்த சிலைகள் எதற்கு? மற்றும் நாம் எதற்காக இந்த பேரணியை நடாத்துகின்றோம் என்றும் முதல்வர் விரிவாக உரையாற்றினார்.

எழுக தமிழ் பேரணியானது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை, சிங்கள சகோதர சகோதரிகளை எதிர்த்து நடாத்தவில்லை, பௌத்த சங்கத்தினரை எதிர்த்து நடாத்தவில்லை, இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொள்கையளவில் அவர்கள் தம்மை ஆதரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் எனத் தெரிவித்த அவர், இன்றைய காலகட்டத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரியப்படுத்துவதாலோ அல்லது மாகாணசபைகளுக்குத் தெரியப்படுவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்திற்கு அவசியம். அதனால்த்தான் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் பதவியை தான் ஏற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போர்க்குற்றப் பொறிமுறை கலப்புப் பொறிமுறையாக இருக்க வேண்டும் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் கலப்பு பொறிமுறையை நிராகரித்து மீண்டும் உள்ளகப் பொறிமுறையை மட்டும் நல்லாட்சி அரசாங்கம் நாடுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்காமற் செய்ய எடுக்கப்படும் முன்னேற்பாடுகளா இவை என்று நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

இவை மட்டுமல்ல. எமது வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்ட நிலையிலேயே அவர்கள் காலத்தை ஓட்டி வருகின்றார்கள்.

தென்னிலங்கை மீனவர்கள் வடக்கு கிழக்கு கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைவது மாத்திரமன்றி எமது மீனவர்களின் படகுகளை சட்ட விரோதமாகப் படையினர் உதவியுடன் கைப்பற்றுகின்றார்கள், வாடிகளை அமைக்கின்றார்கள்.

சட்டவிரோத மீன்பிடி முறைகளைக் கையாள்கின்றார்கள். கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந் நடவடிக்கைகளால் எமது வடக்கு கிழக்கு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது.

மயிலிட்டித் துறைமுகம் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படவில்லை.இவற்றை யாரிடம் சொல்வது? சொன்னாலும் தீர்வுகள் கிடைக்குமா? இவற்றை உலகறியச் செய்யத்தான் இந்தப் பேரணி மேற்கொள்ளப்பட்டதாக வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்..

வடக்கு கிழக்கில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை போதைப் பொருட் பாவனை இல்லாமல் இருந்தது. இதனை மத்திய அரசாங்க உயர் அதிகாரிகள் கூட ஏற்றுக் கொணடனர்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் சுமார் ஒன்றரை இலட்சம் படையினர் பாதுகாப்பு பணியில்; வடக்கு கிழக்கில் குடியமர்ந்து இருக்கும் நிலையில், பெரும்பான்மையினப் பொலிசாரை எமது பொலிஸ் நிலையங்களில் பதவியில் நிறுத்தியுள்ள நிலையில் நாளாந்தம் நூற்றுக் கணக்கான கிலோ கஞ்சா வட பகுதியை வந்தடைகின்றது.

ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களும் வந்தடைகின்றன. அதிகப்படியான மதுசாரமும் விற்பனையாகின்றன. இது எப்படி?சட்டமும் ஒழுங்கும் எங்களின் கைவசம் இல்லை. அப்படியானால் இவை எவ்வாறு சாத்தியமாகியுள்ளன அல்லது இவை ஏன் நடக்கின்றன?

இவை எமது இளஞ் சந்ததியினரைத் திட்டமிட்டு அழிக்கும் ஒரு செயற்பாட்டின் அங்கமா என்ற கேள்விக்கு யார் பதில் தருவார்கள்? இதனை எமது பெரும்பான்மையின சகோதர சகோதரிகளிடமும் உலக நாட்டு மக்களிடமும் கேட்கவே இந்தப் பேரணி மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்..

தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர், தனியாகச் சொன்னால் எவரும் கேட்க மறுக்கின்றார்கள். ஆகவே நாங்கள் நடை பயின்று வந்து பலராகக் கேட்கின்றோம். எமது மனக் கிலேசத்தை வெளிப்படுத்துகின்றோம். மக்கட் பிரதிநிதிகளும் மக்களும் சேர்ந்து கேட்கின்றோம்.

தமிழ்ப் பேசும் மக்களும் சிங்கள மொழி பேசும் மக்களும் சுமூகமாக சம அந்தஸ்துடன் நல்லுறவுடன் இனியாவது வாழ்வதானால் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்ப் பேசும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை மதித்து சுயாட்சி வழங்குவதே ஒரே வழி.

அதனால்த்தான் நாங்கள் சமஷ்டி ஆட்சி முறையை வலியுறுத்தி வருகின்றோம். தமிழ்ப் பேசும் எமது பிரதேசங்களில் இன்னமும் சிங்கள மொழியிலேயே முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் எழுதிக் கொள்ளப்படுகின்றன.

எமது வடக்கு கிழக்குப் பிராந்தியங்களில் எமது பாரம்பரிய மொழியில் நடவடிக்கைகளை நடாத்திச் செல்ல எமக்கு உரித்தில்லை.

எமது காணிகள் பறிபோகின்றன. இராணுவம் மாகாணத்திற்கு வெளியில் இருந்து வருபவர்களை இங்கு குடியிருக்கச் சகல வசதிகளும் செய்து கொடுக்கின்றார்கள்.

எனவே வடக்கு கிழக்கைச் சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றப் பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டு வருவதால் எமது மொழியையும் மதங்களையும், பாரம்பரியங்களையும் பாதுகாக்க வடக்கு கிழக்கு இணைப்பைக் கோரி நிற்கின்றோம்.

திடீரென்று ஒரு அரசியல் யாப்பைத் தமிழ்ப் பேசும் மக்கள் மீது திணிப்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம்.

சிங்கள மக்கள் எதிர்க்கக் கூடும் என்பதற்காக எங்கள் உரிமைகளை எந்த அரசாங்கமும் சிதைக்க முயற்சிக்கக் கூடாது.

அரசியல் யாப்புக்களினால் பாதிக்கப்படப் போகும் மக்கள் நாங்களே. எங்கள் கருத்துக்களைச் செவிமடுக்காவிடில் எமது இனத்தின் அவலங்கள், ஐயங்கள், அனர்த்தங்கள் தொடர்ந்தே செல்கின்றன..

ஆகவேதான் இந்தப் பேரணி மூலமாக தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த கரிசனைகளை நாம் வெளிக் கொண்டு வரும் விதத்தில் கட்சி பேதமின்றி நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

இராணுவ பிரசன்னம் தொடர்கின்றது. ஆக்கிரமிப்புக்கள் தொடர்கின்றன. அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்கிறது. காணாமற் போனோர் பிரச்சினை தொடர்கின்றது. மதரீதியான ஆக்கிரமிப்பும் தொடர்கின்றது.

வடமாகாண மக்கட் பிரதிநிதிகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த நேரத்தில் எமது கரிசனைகளை நாம் வெளிப்படுத்தாவிட்டால் எந்த நேரத்திலும் முடியாது போய் விடும்.

புதிய அரசியல் யாப்புத் தயாரித்தலானது எமது கரிசனைகளை உள்ளேற்க வேண்டும். இணைந்த வடக்கு கிழக்கு சமஷ்டி அலகை உறுதிப்படுத்தும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே இறுதித் தீர்வு கட்டியமைக்கப்பட வேண்டும்.

காணி, பொலிஸ், நிதி போன்ற அதிகாரங்கள் முழுமையாக எமக்கு வழங்கப்பட வேண்டும். இதனை சர்வதேச நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும். இராணுவம் படிப்படியாக குறிப்பிட்ட காலத்தினுள் வாபஸ் பெற வேண்டும். சட்டத்திற்குப் புறம்பாக புத்த விகாரைகள், சிலைகள் அமைப்பது நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு தமிழ்ப் பேசும் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக நடைபெற வேண்டும். காணாமல்ப் போனோர் பற்றிய உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் வலியுறுத்திவே இந்தப் பேரணி. இவ்வாறான எமது கரிசனைகளைக் கருத்தில் கொள்ளாது அவற்றிற்குத் தீர்வைக் காணாமல் நல்லிணக்கம் பற்றியும் புதிய அரசியல் யாப்புப் பற்றியும் பேசுவது கரத்தையைக் குதிரைக்கு முன் பூட்டுவதற்கு ஒப்பானது.

எமது சிங்கள சகோதர சகோதரிகள் ஏன் எமது இராணுவ, கடல்படை, விமானப்படை சகோதர சகோதரிகள் எமது மனோநிலையைப் புரிந்து கொள்வார்கள் என கூறியுள்ளார்.


யாழில், முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன், பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது, பொது மக்கள் கைகளை உயர்த்தி ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.




















முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்