Breaking News

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்போம் : பேரணிக்கு அழைப்பு

யாழ்ப்பாணம் முற்றவெளியில் தமிழ் மக்கள் பேரைவையின் ஏற்பாட்டில் 'எழுக தமிழ்' பேரணி தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் முகமாக நாளை இடம்பெறவுள்ளது.


வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த அரசியல்கள் தலைவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தமிழரசுக்கட்சியின் சில உறுப்பினர்கள் எழுக தமிழ் பேரணியை புறக்கணித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளியில் நாளை நடைபெறவுள்ள 'எழுக தமிழ்' மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களை கலந்துகொள்ளுமாறு மன்னார்  மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆட்சியாளர்களைப் போன்று நல்லாட்சி அரசாங்கமும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கமையினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைத் திரட்டி இந்த போராட்டத்தை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அருட்தந்தை செபமாலை ஐ.பி.சி தமிழுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

எந்தவித அரசியல் சார்பும் இன்றி, தமிழ் மக்களின் நலனை மாத்திரமே முன்னுரிமைப்படுத்தி நடாத்தப்படும் இந்த பேரணியானது, நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் - யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்தும் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தை சென்றடையவுள்ளது.

பேரணியில் மக்கள் பங்கேற்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  'எழுக தமிழ்' பேரணிக்கு  வவுனியா  மாவட்ட பிரஜைகள் குழு  தமது ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன், வடக்கின் சகல கிராம மட்ட அமைப்புகள், பொதுமக்கள், நலன்புரி சங்கங்கள் அனைவரும் பூரண ஆதரவு வழங்கி எமது உரிமைகளுக்கு உயிரூட்டும் வண்ணம் பேரணியில் கலந்துகொள்ளுமாறு வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.