Breaking News

‘வடக்கிலுள்ளவர்களை உடன் கைதுசெய்யவும்’ – தெற்கில் இனவாத கோஷம்



மாவீரர் தினத்தை அனுஷ்டித்தமை ஊடாக வடக்கிலுள்ளவர்கள் சட்டத்தை அவமதித்துள்ளதாக தெரிவித்துள்ள பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, அவர்களை கைதுசெய்வதன் ஊடாக பொலிஸ்மா அதிபர் நீதியை நிலைநாட்டுவார் என எதிர்பார்த்துக் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பிவித்துறு ஹெல உறுமயவின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

”மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிங்கத்தை போல குரல்கொடுத்திருந்தனர். ஆனால் நேற்று புலிகளின் தலைவரது புகைப்படத்திற்கு மாலையிட்டு, விளக்குகளை ஏற்றி, போஸ்டர்களை ஒட்டி, இராணுவ முகாமிற்கு முன்னாலும் புலிகளின் தலைவரது படத்தை வைத்து விளக்கேற்றியதாக இராணுவத்தினரால் எமக்கு தகவல் வழங்கப்பட்டது. முன்னொருபோதும் இல்லாத வகையில் இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டித்துள்ளனர்.

இந்நிலையில், மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க விடமாட்டோம் என கர்ஜித்த சிங்கங்கள் நேற்று கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொண்டதா என நாம் கேட்கின்றோம். இல்லாவிட்டால் அவர்களது கண்களுக்கு இவை புலப்படவில்லையா?

புலிகள் மட்டுமல்ல, யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர அவர்களது உறவினர்களுக்கு உரிமையுண்டு. ஆனால் மாவீரர் தினம் என பெயரிட்டு, அரசியல் ரீதியாக அவர்களை நினைவுகூருவதற்கு நாம் எதிரானவர்கள்.

தெற்கிலுள்ளவர்களுக்கு எதிராக தமக்கு ஏற்றவாறு சட்டத்தை பயன்படுத்தும் பொலிஸ்மா அதிபர், வடக்கின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொலிஸ்மா அதிபர் சட்டத்தை மறந்திருந்தால் நாம் ஞாபகப்படுத்துகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, அரசியலமைப்பின் 157 அ பிரிவின் பிரகாரம், பிரிவினைவாதம் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தெற்கில் நாம் பேரணி சென்றபோது எம்மை கைதுசெய்த, கண்ணீர் புகை பாய்ச்சிய, சில நேரம் துப்பாக்கிச்சூடும் நடத்திய மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினர் முன்பாக காட்டிய பொலிஸ் வீரத்தை வடக்கில் காட்டவில்லை. ஆகவே இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் நாட்களிலாவது பொலிஸ்மா அதிபர் சட்டத்தை நிலைநாட்டுவார் என கண்களையும் காதுகளையும் மூடி நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்” என்றார்.