Breaking News

உன்னதத் தலைவனின் பிறப்பும் மேன்மைத் தலைவனின் இறப்பும்

கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ரோ இயற்கை எய்தினார் என்ற செய்தி காற்றோடு கலந்தபோது ஓர் இலட்சியத் தலைவன் மறைந்தான் என்ற வரலாறு பிறந்து கொண்டது.


தலைவர்கள் உருவாக்கப்படவில்லை பிறக்கின்றார்கள் என்று கூறப்பட்ட வரைவிலக்கணத்தை மெய்ப்பித்தவர்களில் காஸ்ரோவும் ஒருவர்.

கியூபாவின் ஏகத் தலைவனாக இருந்த காஸ்ரோ மார்தட்டி போர் முரசு செய்தவன் அல்ல; அவன் தன் இதயத்துச் சிந்தனையை இலட்சியமாக்கி அதனை இந்த உலகுக்கு வரலாறாக்கி வருங்காலத்தவர்களின் படிப்புக்கும் வாய்ப்புத் தந்துவிட்டுப் போயுள்ளான். 

வாழும் காலத்திலேயே வரலாறாகி உலகின் படிப்புக்குரியவர்களாக இருந்த தலைவர்கள் மிகக் குறைவு. அந்த அரிதான தலைவர்களில் காஸ்ரோவும் ஒருவர்.

ஒரு தடவையேனும் சந்தித்துவிட வேண்டும் என்று  இந்த உலகம் யார் மீது கருசனை கொள்கின்றதோ அவனே தலைவனுக்குரிய பண்புடையவன்.

தலைமைத்துவ பண்புகள் பற்றி இன்றைய முகாமைத்துவம் பலவாறு பேசிக் கொள்கிறது. ஆனால் எம்மைப் பொறுத்தவரை நேரில் சந்திக்காத போதிலும் எந்தவொரு தலைவனின் பெயர் உலகம் முழுவ திலும் உணர்வுபூர்வமாக பேசப்படுகிறதோ அவனே தலைவனாக முடியும். 

தலைவனுக்கு எதிரிகள் இருக்கலாம். ஆனால் அந்த  எதிரிகளும் மானசீகமாக மதிப்பளிப்பதாக இருந்தால் அந்தத் தலைவனுக்கு நிகர் யாருமாக இருக்க முடியாது. அத்தகைய தலைவர்கள் வரிசையில் இரண்டு தலைவர்கள்.

அதில் ஒரு தலைவர் கியூபா நாட்டின் காஸ்ரோவாக இனம் காணமுடியும். வல்லாதிக்க நாடுகள் எத் தனையோ தொந்தரவுகள் கொடுத்த போதிலும் காஸ்ரோ யாருக்கும் அடி பணிந்திலர். அவர் தன் இலட்சியத்துக்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர். இதனால் எதிரிகளும் காஸ்ரோ என்ற பெயர் கேட்ட  போதெல்லாம் உள்ளத்தால் மதிப்புக் கொடுத்தனர்.

நேர்மை, நீதி, ஊழலற்ற வாழ்வு, மக்களுக்காக   தன்னை அர்ப்பணித்த தியாகம், எவர்க்கும் அஞ்சாத வீரம் இவற்றின் சொந்தக்காரரான காஸ்ரோ தன் இறப்பும் ஓர் உன்னத தலைவன் பிறந்த நாளாக இருக்க வேண்டும் என்று நினைத்தார் போலும்.

அதனால்தான் தன் இறப்பின் திகதியை 26 நவம்பர் என ஆக்கிக் கொண்டார். 26 நவம்பர் உலகத் தமிழர்கள் தங்கள் உன்னத தலைவன் பிறந்த நாள் என்று பெருமை கொள்கின்ற தினம்.

அந்தத் தலைவனை எதிரியும் போற்றினர். ஆம், விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மிகச் சிறந்த வீரர். ஒழுக்கமுடைய தலைவன் என்று எதிரிகள் போற்றியதே அதிகம்.

பிரபாகரன் வாழ்ந்த இடம் என்று எதைக் காட்டினாலும் அதைத் தரிசிக்க சிங்கள மக்களே அதிகம் முண்டியடித்தனர்.

இதோ! இதுதான் முல்லைத்தீவு. இங்குதான் பிரபாகரன் இருந்தார் என்றதும் சுற்றுலா வந்த தென்பகுதி சகோதரர்கள் ஒரு வீரனுக்குரிய மதிப்பைக் கொடுத்து மிகுந்த கெளரவத்துடன் அந்த இடத்தை சுற்றி வலம் வந்தனர்.

அதோ! வல்வெட்டித்துறை. இதுதான் பிரபாகரன் பிறந்த மண், வாழ்ந்த வீடு என்றதும் அந்த இடத்தைப் பார்க்காமல் சென்றால் வடக்குக்கான எங்கள் சுற்றுலா முழுமை பெறாதன்றோ!

ஆகையால் தலைவர் பிரபாகரன் பிறந்த - வாழ்ந்த  மண்ணை, வீட்டை பார்த்துவிட வேண்டும் என்று ஆசை கொண்டவர்கள் சிங்கள மக்கள்.

இதற்குக் காரணம் பிரபாகரனை அவர்கள் எதிரியாகப் பார்க்கவில்லை. மாறாக எங்கள் நாட்டில் இப்படி ஒரு தலைவனா என்ற பிரமிப்பே ஆகும்.

இதனால்தான் பிரபாகரனின் வீட்டு மண்ணை எடுத்துச் சென்றனர். விருப்பமில்லாத ஒருவரின் வீட்டு மண்ணை யாராவது எடுத்துச் செல்வாரா  என்ன?

ஆக, தலைவர் பிரபாகரனின் வீட்டு மண்ணை எடுத்துச் சென்று அதனை தங்கள் வீட்டில் வைத்திருப்பதை பெருமை என்று கருதப்பட்ட ஒரு தலைவன் பிறந்த நாளில் இன்னொரு தலைவன் இறந்தான்.

ஓர் உன்னத தலைவன் பிறந்த நாளும் இன்னொரு மேன்மைத் தலைவனின் இறந்த நாளுமாக சேர்ந்து நவம்பர் 26க்கு மகா பெருமையைக் கொடுத்துள்ளது என்றால் அது மிகையன்று.