Breaking News

வடமாகாணத்தின் சுற்றுலா தளங்களை மையப்படுத்தி கைநூல் தயாரிக்க திட்டம்

வடமாகாணத்தில் அடையாளப்படுத்தப்படாமல் உள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் காடுகள், உள்ளிட்ட சுற்றுலா மையங்களை அடையாளப்படுத்தி வடமாகாணத்திற்கான சுற்றுலா கைநூல் ஒன்றை தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.


வடமாகாணத்திற்கு வெளிநாடுகளில் இருந்தும், இலங்கையின் மற்றைய பாகங்களில் இருந்தும் அதிகளவான சுற்றுலா பயணிகள் தொடர்ச்சியாக வருகை தருகின்றனர். இவர்களால் அதிகம் பார்க்கப்படும் இடங்களாக சில இடங்களே காணப்படுகின்றன. 

குறிப்பாக யாழ்.பொதுநூலகம், யாழ்.கோட்டை, மற்றும் சில ஆலயங்கள், சில கடற்கரைகள் என்பவற்றுடன் அவை நிறைவடைகின்றது. ஆனால் வடமாகாணத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல பெறுமதியான காடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ´குருந்தூர்மலை´ மற்றும் கயட்டை காடு ஆகியவற்றை குறிப்பிடலாம். 

மேலும் வடமாகாணத்தில் இருந்து மலை பார்ப்பதற்கும், மன்னர்களுடைய இராசதானிகளை பார்ப்பதற்கும் மக்கள் வெளி மாகாணங்களுக்கு செல்கிறார்கள். ஆனால் வடக்கில் குருந்தூர் மலை என்ற மலை ஒன்று உள்ளது. அதே போல் அந்த மலையின் மேலும் பண்டைய தமிழ் மன்னர்களின் இராசதானியும் உள்ளது. 

இதேபோல் கயட்டை பகுதியில் இலங்கையின் எந்த காடுகளிலும் இல்லாத வித்தியாசமான மரங்கள் காணப்படுகின்றன. அவ்வாறான பல பகுதிகளை நாங்கள் கைவிட்டிருக்கின்றோம். அவற்றை எமது மாகாணத்தில் உள்ள வரலாற்று துறைசார்ந்த பேராசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து சில விடயங்களை செய்யவேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இதனை தொடர்ந்தே வடமாகாணத்தில் அமைந்துள்ள சகல சுற்றுலா தளங்களையும் அடையாளப்படுத்தி மாகாணத்திற்கான சுற்றுலா கைநூல் தயாரிக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சு வட்டாரங்கள் கூறுகின்றன.