Breaking News

சமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலா குறித்த நையாண்டி வீடியோ

தமிழக முதல்வர் பதவியில் அமருவதற்கான
சசிகலா மற்றும் பன்னீர்செல்வத்தின் முயற்சிகளை நையாண்டித்தனமாக சித்தரித்து வெளியாகியுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது.
இந்தியா டுடே குழுமத்தால் வெளியிடப்படும் "சோ சாரி" என்ற பாலிட்டூன் எனப்படும் அரசியல் தொடர்பான நையாண்டி கார்ட்டூன் வீடியோ, தற்போது தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல் குறித்த ஒரு நையாண்டி வீடியோவை வெளியிட்டுள்ளது.

சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு போட்டிபோட்டதையும், சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலாவிற்கு சேவை செய்வது போலவும், இறுதியில் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சசிகலாவின் முதலமைச்சர் கனவு சிதைந்து போவது போலவும் அந்த கார்ட்டூனில் காட்டப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியில் இருந்த பன்னீர்செல்வம் ராஜிநாமா செய்தது, சசிகலாவை முதலமைச்சர் பதவிக்கு அதிமுக சட்டமன்றக் கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தது, அதனை தொடர்ந்து பன்னீர்செல்வம் சசிகலா தரப்பு என அதிமுக இரண்டாக பிரிந்தது பின்பு சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதால் அவரின் முதலமைச்சர் கனவு கலைந்தது என்ற அரசியல் திருப்பங்களை பிரதிபலிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட கருத்துகள், விமர்சனங்கள், நையாண்டி செய்திகள், மீம்கள் என பகிரப்பட்டுவருகின்றன.

இச்சூழலில் இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் பயன்பாட்டாளர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.