Breaking News

செம்மணியில் மேலும் இரு சிறுவர்களின் என்புத் தொகுதிகள்


இன்று (வியாழக்கிழமை) செம்மணி பகுதியில் இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, குழந்தைகளுக்குரியதென சந்தேகிக்கப்படும் இரண்டு மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இதுவரை கண்டறியப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் எட்டாவது நாள் இன்று நடைபெற்றது. இன்றைய அகழ்வில், சிறார்களின் என்புகள் எனக் கருதப்படும் இரு தொகுதிகள் கண்டறியப்பட்டதுடன், மேலும் நான்கு மண்டையோடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 



இதில் ஒன்றை நேற்று அடையாளம் கண்டறிந்துள்ளனர், மற்றவற்றுக்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதுவரை 40 என்புத் தொகுதிகள் இந்த புதைகுழியில் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 34 தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

இவ்வகழ்வுப் பணிகள், யாழ். நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவா தலைமையில் நடைபெற்று வருகிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சட்டத்தரணிகள் ஞா.ரனித்தா, வி.கே.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ நிபுணர் பிரணவன் செல்லையா ஆகியோர் அகழ்வுப் பணிகளில் நேரில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.