Breaking News

நல்லாட்சி அரசின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன: சக்திவேல்



உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன என அரசியல் கைதிகள் விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “இஸ்ரேல் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்குமாறுகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலஸ்தீனர்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், சிறுவர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள், நீதித்துறை சார்ந்தோர் என சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தடுத்து வைத்துள்ளது.

அரசியல் கைதிகள் விடயத்தில் இஸ்ரேலும், இலங்கையும் ஒரேவிதமான இனவாத அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட சமூகம் என்ற வகையில் பாலஸ்தீன அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு நாம் எமது முழு ஆதரவையும் வெளிப்படுத்தி நிற்கின்றோம்.

நல்லிணக்கம், அரசியல்தீர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசு இன்று இரட்டைவேடம் தரித்து, கொடுத்த வாக்குறுதிகளை மறந்து அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கு மறுத்து வருகின்றது” என்றார்.