அமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு – கொழும்பு அரசியலில் பரபரப்பு - THAMILKINGDOM அமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு – கொழும்பு அரசியலில் பரபரப்பு - THAMILKINGDOM
 • Latest News

  அமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு – கொழும்பு அரசியலில் பரபரப்பு  சிறிலங்கா அமைச்சரவை நாளை மாற்றி அமைக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களையும் நாளை காலை 8.30 மணிக்கு அதிபர் செயலகத்துக்கு வருமாறு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

  இதையடுத்து, நாளை காலையில் மாற்றியமைக்கப்பட்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  முன்னதாக, அமைச்சரவை மாற்றம் தொடர்பான சிக்கல்கள் குறித்து தேசிய புலனாய்வுப் பரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை ஒன்றையடுத்து, சிறிலங்காஅதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க அவசரமாக சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

  அமைச்சரவை மாற்றத்தினால் அரசியல் சதிப்புரட்சி ஒன்று ஏற்படலாம் என்று தேசிய புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்ததாக கூறப்படுகிறது.

  இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் மூடிய அறைக்குள் தனியாகப் பேச்சுக்களை நடத்தினார்.

  இதையடுத்து, நாளை திங்கட்கிழமை அமைச்சரவை மாற்றத்தை செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

  இதேவேளை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்றிரவு.சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  அமைச்சரவை மாற்றம் தொடர்பான சிக்கல்கள் தொடர்பாக ஆராயவே இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  அதேவேளை அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதி, வெளிவிவகாரம், ஊடகம், பொதுநிர்வாகம், நெடுஞ்சாலைகள், சட்டம் ஒழுங்கு, அமைச்சுக்களின் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

  சிறிலங்கா அதிபருடன் நடத்தப்பட்ட நீண்ட பேச்சுக்களை அடுத்து தனது நிதியமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க ரவி கருணாநாயக்க இணங்கியுள்ளார். அவர் அடுத்த வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார்.

  வெளிவிவகார அமைச்சராக உள்ள மங்கள சமரவீர நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளார். மங்கள சமரவீரவின் வேண்டுகோளின் பேரில், அரச தொழிற்துறை அபிவிருத்தி பிரதி அமைச்சராக உள்ள ஏரான் விக்கிரமரத்ன, பிரதி நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

  எனினும், சிறிலங்கா அதிபர் நிதியமைச்சர் பதவி குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும், அந்தப் பதவியை பிரதமரே மேற்பார்வை செய்வார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: அமைச்சர்களை நாளை காலை ஒன்று கூடுமாறு அவசர அழைப்பு – கொழும்பு அரசியலில் பரபரப்பு Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top