Breaking News

தமிழரசுக்கட்சியின் அரசியல் வங்குரோத்து! சுயேட்சைக் குழுவினருடன் பேரம் பேச்சு!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டம்
புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலை அரசியல் சாயமின்றி எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் முனைப்புக்களை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தடுத்து நிறுத்துவதற்கான முனைப்புக்களில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக புதுக்குடியிருப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியதன் பின்னர், புதுக்குடியிருப்பில் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து வலுவான வேட்பாளர்களை சுயேட்சையாக களமிறக்கும் முயற்சி புதுக்குடியிருப்பிலும் புலத்திலும் முன்னெடுக்கப்பட்டது.

எந்த அரசியல் கட்சியும் சாராதவகையில் முற்றுமுழுதாக சமூக நலன் கொண்டதாக குறித்த சுயேட்சைக் குழு தேர்தலை எதிர்கொள்வதாக இதுவரையில் முடிவாகியிருப்பதாக தெரியவருகிறது.

இதனிடையே வேட்பாளர்களாக களமிறக்குவதாக பரிசீலிக்கப்பட்டிருந்த சமூக செயற்பாட்டாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தன்னுடைய இடத்திற்கு அழைத்து பேரம் பேசியிருப்பதாக தெரியவருகிறது.
தன்னுடைய வாகனத்தினை அனுப்பி அவர்களை ஏற்றி தன்னுடைய அலுவலகத்தில் வைத்து தவிசாளர் பதவி உட்பட்ட முக்கிய பதவிகளையும் சலுகைகளையும் வழங்கலாம் என்றும் தமிழரசுக்கட்சியில் போட்டியிடுமாறும் அவர்களை அவர் வலியுறுத்தியிருப்பதாக தெரியவருகிறது.

அவ்வாறு இணைந்து கொண்டால் அது அனைத்து வகையிலும் அவர்களுக்கான வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தாகவும் அவர் அணுகிய முறை தமக்கு விடுக்கப்பட்ட மறைமுக மிரட்டலாக கருதவேண்டியிருந்ததாக அந்த சந்திப்பில் பங்கேற்ற பெயர் குறிப்பிடவிரும்பாத நபர் ஒருவர் தமிழ்கிங்டொத்திடம் தெரிவித்திருக்கின்றார்.

கட்சி அரசியல் அற்று முற்றுமுழுதாக சமூக நலன் கருதியதாக தேர்தலை எதிர்கொள்ள மக்கள் முயற்சி மேற்கொண்டுவருகின்ற நிலையில் இவ்வாறான நடவடிக்கை கேவலமான அரசியல் வங்குரோத்தின் வெளிப்படை என்றும் அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

இதனிடையே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுயேட்சைக்குழுவை இறுதி செய்வது தொடர்பிலான முக்கிய கூட்டம் புதுக்குடியிருப்பில் நடைபெறும் என்று அந்தக் குழுவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.