Breaking News

சயந்தனுக்கு கெல்மெட் அடி-சாவகச்சேரி வேட்புமனு இழுபறி

சாவகச்சேர நகரசபை வேட்புமனு தயாரிப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் இன்று காலையில் மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பெரும் களேபரம் நடந்தது. கட்சியின் முக்கியஸ்தர்கள் சேர்ட்டைப்பிடித்து கைகலப்பில் ஈடுபட்டனர். வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஹெல்மெற்றினால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் தெரிவு அருந்தவபாலனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே நகரசபையில் இருந்தவர்களிற்கு இம்முறை இடமளிக்காமல் புதியவர்களிற்கு இடமளிக்க வேண்டுமென அருந்தவபாலன் கூறிவந்தார். அவர் தயாரித்த பட்டியலில் சாவகச்சேரி நகரசபையில் இருந்து முன்னாள் உறுப்பினர்கள் ஒருவரின் பெயரே இடம்பெற்றிருந்தது. பங்காளி கட்சிகளின் சிபாரிசையும் புறந்தள்ளி அருந்தவபாலன் செயற்பட்டிருந்தார்.

முன்னாள் உறுப்பினர்கள் ஐவருக்கு இடமளிக்க வேண்டுமென சயந்தன் விடாப்பிடியாக இருந்தார். இன்று காலையில் மார்ட்டின் வீதியில் உள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு அருந்தவபாலன் சென்று, தனது வேட்பாளர் பட்டியலை கொடுத்துள்ளார். இதேசமயத்தில் பக்கத்து அறையில் மாகாணசபை உறுப்பினர்கள் சயந்தன், சிவாஜிலிங்கம் இருவரும் உட்கார்ந்து புதிய வேட்பாளர் பட்டியல் தயார் செய்திருந்தனர். ரெலோவிற்கு இதில் நான்கு வேட்பாளர்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ஒருவரே உள்வாங்கப்பட்டார். புளொட் உள்வாங்கப்படவில்லை.

இதற்குள் முன்னாள் உறுப்பினர்களும், வேறு சிலரும் தமிழரசுக்கட்சி அலுவலகத்தின்று முன்பாக கூடி சர்ச்சையில் ஈடுபட்டனர்.

புதிய பட்டியலைதான் சமர்ப்பிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்ததும் அருந்தவபாலன் கோபத்துடன் மாவை சேனாதிராசா, சயந்தன் இருவருடனும் தர்க்கப்பட்டுள்ளார். இதில் ஆதரவாளர்களும் கலந்துகொள்ள அந்த பகுதி கலவர பூமியானது. மாகாணசபை உறுப்பினர் சயந்தனின் சட்டையை முக்கியஸ்தர் ஒருவர் கொத்தாக பிடித்தார். சயந்தன் மீது ஹெல்மெட் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

தகாத வார்த்தைகளையும் இரண்டு தரப்பும் தாராளமாக பாவித்தன. நிலைமை கட்டுக்கடங்காமல் போக, கட்சி முக்கியஸ்தர் ஒருவரை பார்த்து “ஒப்பீசை விட்டு வெளியால போ“ என மாவை சேனாதிராசாவின் மகன் கத்தினார்.

இந்த களேபரங்களால் ஆத்திரமுற்ற மாவை அங்கிருந்து வெளியேறி வடமாகாணசபைக்கு சென்று, அவைத்தலைவருடன் பேசி, அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய சென்றார்.

சாவகச்சேரியில் நடக்கும் அருந்தவபாலன்- சயந்தன் அதிகார போட்டியே இந்த மோதலிற்கு காரணமென்கிறார்கள். ஆசனத்திற்காக சட்டையை பிடித்து மோதலில் ஈடுபட்டது பலத்த விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இதில் ஹைலைட்டான செய்தி- தெரிவு இழுபறி நிலவ இரு அணிகளாக பிழவுபட வேட்பாளர் பட்டியலை பூரணப்படுத்த ஆட்கள் போதாமல் போனதாகவும் இதனால் மாகாணசபை உறுப்பினர் சயந்தனின் சாரதியும் வேட்பாளர் பட்டியலில் இடப்பட்டதாகவும் அதனால் சிக்கல் மேலும் நீடித்தது.


கீழுள்ள படத்தில் இருப்பவர்கள்தான் புதிதாக தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள். சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் பட்டியலை தயாரிக்க பொறுப்பாக நியமிக்கப்பட்ட அருந்தவபாலன் படத்தில் இல்லையென்பதோடு வேட்பு மனு தாக்கல் செய்தபின் சயந்தன் நேர்காணலிலும் அவர் மேலோட்டமாக  தெரிவித்திருந்தார்.

மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன், தான் (அருந்தவபாலன்) முன் மொழிந்த வேட்பாளர்களை தவிர்த்து தன்னுடைய (சயந்தனுடைய) அபிமானிகளை பட்டியலில் இணைத்ததாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

இந்த விடயத்தில் சமரசத்தினை எட்டுவதற்கு மாவை சேனாதிராஜா முற்பட்ட போதிலும் சயந்தன் விட்டுக்கொடுக்காமையினால் மாவை சேனாதிராஜா இடைநடுவில் புறப்பட்டுச் சென்றதாக தெரியவருகிறது.

இதன் பின்னர் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் நடவடிக்கையை மாகாணசபை உறுப்பினர் சிவாஜிங்கத்துடன் இணைந்து கேசவன் சயந்தன் நிறைவு செய்ததாகவும் 11.45 மணிக்கே வேட்பு மனுத் தாக்கல் இடம்பெற்றதாகவும் தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.