Breaking News

வீடு புகுந்த பொலீஸ் மூளை சிதற சுட்டுகொன்றது(காணொளி)

`வன்முறையைக்' கட்டுக்குள் கொண்டுவந்த
பின்னரும், திரேஸ்புரம் பகுதியில், இரவு நேரத்தில் மின்சாரத்தைத் துண்டித்து ஏன்? பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் வீடுகளின் கதவைத் தட்டும் அதிகாரத்தை, காவல்துறைக்கு யார் கொடுத்தது? தன் குழந்தைகளுக்காக ஆசை ஆசையாக மீன் வாங்கிக்கொண்டு ஷேர் ஆட்டோவில் வந்திறங்கிய, ஜான்சி ராணி என்ற பெண்மணியின் தலையைக் குறிவைத்து, அவரின் மூளை தெருவில் சிதறும் அளவுக்குக் கொடூரமாகச் சுட்டது ஏன்? இந்தக் கேள்விகளைத்தான் திரும்பத் திரும்ப கேட்டு கதறுகின்றனர் திரேஸ்புரம் பெண்கள்.

``கலெக்டர் அலுவலகத்தில் கலவரம் ஏற்பட்டு நிலைமை ரொம்ப மோசமானதால, நாங்கள் வீட்டுக்குத் திரும்பிட்டோம். ஆனால், போலீஸ்காரங்க பின்தொடர்ந்து திரேஸ்புரம் வரை வந்து, மடமடவெனச் சுட்டுட்டுப் போயிட்டாங்கப்பா. எங்களைச் சுடுறதுக்கு இவங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? எம்.ஜி.ஆர் காலத்திலோ, ஜெயலலிதா இருந்தபோதோ இப்படியெல்லாம் நடக்கலையே. இப்போ, போலீஸ்காரங்களுக்கு இவ்வளவு அதிகாரம் எங்கிருந்து வந்துச்சு? இதுல, நேத்து என்ன செஞ்சாங்க தெரியுமா? நைட் 10 மணிக்கு எங்க ஏரியாவுல கரென்ட் கட் பண்ணிட்டு, எல்லா வீட்டுக் கதவுகளையும் தட்டி எச்சரிக்கை விட்டுட்டுப் போயிருக்காங்க. பொம்பளை மட்டும் இருக்கிற வீடுனுகூட பார்க்காம உள்ளே புகுந்துட்டாங்க.

இங்கே 60 பேர் அடிபட்டும் சுடப்பட்டும் இருக்காங்க. நீங்க என்னடான வெறும் 10 பேர்னு போடுறீங்க? ஜான்சி ராணினு ஒருத்தங்க, தன் புள்ளைகளுக்கு மீன் வாங்கிட்டு, ஷேர் ஆட்டோவுல வந்துட்டிருந்தாங்க. போலீஸ் கையில் துப்பாக்கியைப் பார்த்துட்டு, பயந்துபோய் தலைகுனிஞ்சு உட்கார்ந்தாங்க. அவங்களை தலையிலேயே குறிவெச்சு சுட்டுட்டாங்க சார். அந்த அம்மா மூளை சிதறி செத்துப்போயிட்டாங்க. என்னங்க பண்ணோம் நாங்க?'' என ஆவேசமாகக் கத்றுகிறார் அந்தப் பெண்.


``போராட்டத்தில் கலந்துக்காதவங்களையும் அடிச்சு நொறுக்கியிருக்காங்க. எங்களுக்கு ஓட்டுக்கு மட்டும்தான் உரிமையா? வேற எதையும் தட்டிக் கேட்கக் கூடாதா? எங்களுக்கு இங்கே பாதுகாப்பே இல்லை. போலீஸ்காரனுங்களே ஆள்கள் செட்அப் எல்லாத்தையும் பண்ணியிருக்காங்க. அவங்க குடும்பம் மட்டும் நல்லா இருந்தா போதுமா? கலெக்டர் ஆபீஸ்ல நடந்த சம்பவத்துக்கு, இங்கே வந்து சுடுறது எந்த விதத்துல நியாயம்? இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? நெற்றியிலும் மார்பிலும் சுட்டுட்டு நிவாரணம் தர்றாங்களாம். நீங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் போன உசுரு வருமா? அந்தக் குழந்தைகளுக்குத் தன் தாய் முகத்தைப் பார்க்கிற மாதிரி வருமா?

மக்களைப் பாதுகாக்குறதுக்குதானே காவல்துறை? எங்களை கொல்றதுக்கு அதிகாரம் கொடுத்தாங்களா இவங்களுக்கு? சிலோன்ல ராஜபக்சே செஞ்சாரே அதேமாதிரிதான் இங்கே நடக்குது. இதுவும் இன்னோரு ஈழ இனப்படுகொலை மாதிரி. திரேஸ்புரத்துல துப்பாக்கிச் சூடு நடத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே யார் அதிகாரம் கொடுத்தது? எல்லாம் இந்த எடப்பாடிதான். அவங்க எல்லாம் நல்லாவே இருக்கமாட்டாங்க. மறுபடியும் ஓட்டுக் கேட்டு இந்தக் பக்கம் வரட்டும். எங்களுக்கு போலீஸைப் பார்த்தாலே கோபமும் பயமுமா இருக்கு'' என்று குமுறுகின்றனர் திரேஸ்புரம் பெண்கள்.

தன் சொந்த மக்கள்மீது, தன்னை நம்பி ஓட்டு போட்ட அப்பாவிகள்மீது, தன் அடிப்படை வாழ்வாதாரத்துக்காக 99 நாள்கள் அமைதியாகப் போராடிய அறம் அறிந்த மக்கள் மீது, வரலாற்றில் என்றைக்கும் அழிக்கமுடியாத மிகக் கொடூரமான வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது தமிழக அரசு.

ஒரு சராசரி மனிதனுக்கு என்ன தேவை? சுத்தமான காற்று, போதுமான அளவு தண்ணீர், வசிக்க ஓர் இடம், உண்ண உணவு. இந்த அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதுதானே ஓர் அரசின் தலையாய கடமை?! ஆனால், தமிழக அரசு இந்தக் கடமையிலிருந்து `பகிரங்கமாக' விலகி, ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் லாபத்துக்காக, மண்ணின் வளங்களையும் மக்களின் வாழ்வையும் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. `நீங்க உயிரோடு இருந்தால் என்ன செத்தால் என்ன?' என்ற அலட்சியப்போக்குடன் நடந்துள்ளது. அதைத் தட்டிக் கேட்க, ஜனநாயக அடிப்படையில் நடந்த தேர்தலில் ஓட்டுப் போட்ட மக்களுக்கு உரிமை இருக்கிறதுதானே?

அதைத்தானே தூத்துக்குடி மக்கள் 99 நாள்களாக அமைதியாகக் கேட்டுப் போராடினார்கள். நூறாவது நாளான நேற்று சுமார் 7,000 பேர் திரண்டபோதும் அமைதியாகத்தானே அந்த மக்கள் போராட்டத்தை நடத்திச்சென்றனர். போராட்டத்தைக் கலவரமாக்கியது யார்? தன் அடிப்படை உரிமையைத் தன் சொந்த அரசிடம் கேட்டுநின்ற மக்கள்மீது வன்முறையை நிகழ்த்தியது யார்? போராட்டத்தை கட்டுக்குள் அடக்கவே மக்களை நோக்கிச் சுட நேர்ந்தது எனச் சப்பைக்கட்டு கட்டும் காவல்துறையும் தமிழக அரசும், அவர்களின் உயிரைக் கருத்தில்கொண்டு, காலில் சுடவேண்டும் என்ற அடிப்படை அறிவைத் தொலைத்தது ஏன்?

இவர்களின் கதறலையும் தமிழக அரசின் மனிதநேயமற்ற நடவடிக்கையையும் பார்க்கும்போது, பாரதிதாசன் எழுதிய இந்த வரிகளே நினைவுக்கு வருகிறது.

'சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும்

சிறியகதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!'