Breaking News

பெற்றோர் பிள்ளைகளோடு தரமான நேரத்தை ஒதுக்குவதற்கான வழிகள்!


குழந்தை பருவத்திலேயே பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய நேரம் முழுமையாக கிடைப்பது அவசியம். இன்றைய அவசர உலகில் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இருக்கும் சவால்கள் அதிகம். இருவரும் தங்களுடைய கடமைகளை நிறைவேற்ற நேரம் காலம் பார்க்காமல் ஓடிக் கொண்டிருக்கின்றோம். 

ஆனால் இந்த தரமான நேரமானது பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நடுவில் பிணைப்பு ஏற்படுத்த தேவைப்படுகிறது. எவ்வளவு தான் பிஸி என்றாலும் பிள்ளைகளோடு செலவழிப்பதற்கான நேரத்தை நாம் தான் கண்டுபிடித்து உருவாக்க வேண்டும். எப்படியெல்லாம் நேரத்தை உருவாக்கலாம் என்பதற்கான டிப்ஸை இப்போது பார்க்கலாம். 

உங்கள் குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுவதற்கான வழிகள் 

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களும், பிள்ளைகளும் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு. அப்படியே நேரம் கிடைத்தாலும் பிள்ளைகளோ டி.வி, ஸ்மார்ட் போன் என்றும், பெற்றோர்கள் அலுவலக வேலை, சமையல் என்று நேரத்தை கழித்து விடுகிறோம். பிள்ளைகளோடு கிடைக்கும் நேரத்தை இனிமையாக கழிக்க சில வழிகள்.  

  • குறைந்தது வாரத்தில் 9 மணி நேரமாவது தாய் தந்தை தங்கள் பிள்ளைகளோடு தனியாக நேரம் செலவிட வேண்டும் என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள். இது பிள்ளைகளின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றங்களையும் அளிப்பதோடு, அவர்களை கையாளவும் உதவியாக இருக்கின்றது. 
  • குடும்பத்தார்கள் அனைவரும் வீட்டில் இருந்தால், சேர்ந்து அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை உருவாக்கலாம். சாப்பிடும் நேரத்தை கலகலப்பாக மாற்றலாம். புதிய அனுபவமாக இருக்கும். 
  • குழந்தைகளோடு இருக்கும் நேரத்தில் பெரியவர்கள் நாமும் குழந்தையாக மாறிவிட வேண்டும். அப்போது தான் அவர்கள் உலகத்தை சரியாக புரிந்து கொள்வதோடு, நாமும் முழு ஈடுபாட்டோடு நேரம் கழிக்கலாம். 
  • பெற்றோர் பிள்ளைகளை இணைக்கும் உதவும் சிறந்த கருவி விளையாட்டு. பெற்றோர்கள் பிள்ளைகள் நடுவே இருக்கும் பிணைப்பை மேம்படுத்த விளையாட்டு பெரிதளவில் உதவுகிறது. 
  • பிள்ளைகளோடு கிடைக்கும் நேரத்தில் அவர்களை திருத்துவது, குறைகள் சொல்வது, அறிவுரை கூறுவது, பிரச்சனைகளை பற்றி புலம்புவது போன்றதை தவிர்த்துவிட்டு, பிள்ளைகளின் விருப்பத்திற்கேற்ப ஜாலியானதை தேர்வு செய்து நேரம் கழிக்கலாம். 
  • பயணங்கள் பிள்ளைகளுக்கு பிடித்தமான ஒன்று. நடைபயணமோ அல்லது பைக் ரைடிங்கோ பிள்ளைகளோடு தனியாக ஜாலியாக ஒரு பயணம் செல்வது அவர்களுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை தரும். அதுமட்டுமில்லாமல், அப்பா அம்மா நமக்காக நேரத்தை ஒதுக்குக்கிறார்கள் என்ற உணர்வும் பிள்ளைகளுக்குள் சந்தோஷத்தை தரும். 

பிள்ளைகள் எதிர்பார்க்கும் முக்கியமான தருணங்கள் எவை 
  • பிள்ளைகள் எந்தெந்த தருணங்களில் பெற்றோர்களோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வோம். 
  • பிள்ளைகளுக்கு காய்ச்சல், வயிற்று வலி போன்ற உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும் போது பெற்றோர்கள் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். 
  • பயமாக உணரும் போது, பாதுகாப்பில்லாமல் உணாரும் போது அப்பா அல்லது அம்மாவை எதிர்பார்க்கிறார்கள். 
  • தோல்வி ஏற்படும் போது பெற்றோர்களை எதிர்பார்க்கிறார்கள். பிள்ளைகள்   பலவீனமாக உணரும் போது தாய் அல்லது தந்தையின் ஆறுதலுக்கும்,           அன்புக்கும் ஏங்குகிறார்கள். 
  • அதே போல் அவர்கள் வெற்றியை கொண்டாடவும் பெற்றோர்களை எதிர்பார்கிறார்கள். போட்டிகளில் பங்குபெறும் போது பெற்றோர்கள் அருகில் இருந்து ஊக்கப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். 
  • சாப்பிடும் போது பிள்ளைகள் பெற்றோர்களை எதிர்பார்க்கிறார்கள். சிலப் பிள்ளைகள் தனியாக சாப்பிட விரும்பாமல் சாப்பாட்டை தவிர்ப்பார்கள்.
  • முக்கியமான பண்டிகைகள், நிகழ்வுகளின் போது குடும்பத்துடன் சேர்ந்து      இருக்க விரும்புகிறார்கள். 

எவ்வளோ நேரங்களை நம்மை அறியாமலேயே நாம் செலவு செய்து கொண்டிருக்கிறோம். இன்றைய நாள் விரும்பினாலும் நமக்கு திரும்பக் கிடைக்காது. பெற்றோர்கள் நாம் நினைத்தால் நிச்சயமாக நேரத்தை கண்டுபிடித்து உருவாக்க முடியும். அன்பை வெளிப்படுத்த அவகாசம் மிக முக்கியம். வளர்ந்த பிறகு பிள்ளைகளுக்கு பொறுப்புகள் கூடி விடும், நண்பர்கள் வட்டம் வந்துவிடும். அப்போது பெற்றோர்கள் நினைத்தாலும் பிள்ளைகளோடு செலவு செய்ய நேரம் போதுமான அளவு கிடைக்காது.

இப்போது கிடைக்கும் நம்முடைய குழந்தையின் இந்த பருவத்தில் அவர்களோடு இனிமையாக நேரம் கழிக்க திட்டமிடுவோம். கிடைக்கும் அந்த நேரத்தில் பிள்ளைகளின் உலகத்தில் நாமும் குழந்தையாக மாறி கொண்டாடுவோம்.