Breaking News

இலங்கைக்கு எதிராக களமிறங்கும் ஜெனீவா -இன்றைய அமர்வு(காணொளி)


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 17 பக்க எழுத்துமூல அறிக்கையின் சாராம்சம் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீப்பினால் வாசிக்கப்பட்டது. 

ஐ.நா வெளியிட்ட தமிழ் மூல அறிக்கையை படிக்க கிளிக் செய்யவும்

அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர். அதன்படி அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பூர்த்திசெய்வதில் குறிப்பிடத்தக்களவிற்கு முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் இந்தியா சார்பில் உரையாற்றிய பிரதிநிதி கரிசனையை வெளிப்படுத்தினார். 

மேலும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கான நீதி, சமாதானம், சமத்துவம் மற்றும் சுயகௌரவம் ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடியவாறான அரசியல் தீர்வை வழங்குவதே இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடாக இருந்துவருகிறது என்று குறிப்பிட்ட அவர், தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியானது கடன்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் பொருளாதாரத்தின் மட்டுப்பாடுகள் மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத்தரம் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். 

நிராகரிப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு 

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வாசிக்கப்பட்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தின் பதிலுரையின் போதே அலி சப்ரி இந்த விடயத்தை கூறியுள்ளார்.

   

இதேவேளை பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக, சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப, விரிவான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை இலங்கை கொண்டுவரும். எமது மக்கள் எதிர்நோக்கும் சமூக - பொருளாதார இன்னல்கள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் உணர்திறனை கொண்டுள்ளது. 

சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்களை வழங்குவதன் மூலம் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த உடனடி பல்நோக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடுமையான தடைகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், சுதந்திரமான உள்நாட்டு நிறுவனங்களின் ஊடாக மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் உறுதியான முன்னேற்றத்தைத் தொடர்வதில் இலங்கை உறுதியாக உள்ளது. அத்துடன் களத்தில் உண்மையான முன்னேற்றத்தை ஒப்புக்கொண்டு இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எங்கள் சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும், புதிய ஆற்றலுடன் முன்னேறுவதற்கும் நாங்கள் தயங்குவதில்லை. பொருளாதார மீட்சியே எங்களின் உடனடி அக்கறை என்றாலும், நமது மக்களின் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு சமமான முன்னுரிமை உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

இந்தியா

அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல், மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துதல் ஆகியவற்றின் ஊடாக இனப்பிரச்சினைக்கு உரியவாறான அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய இந்தியா, மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வு உள்ளடங்கலாக அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மாகாணசபைத்தேர்தல்கள் விரைவாக நடாத்தப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

நெதர்லாந்து 

அதன்படி பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் இலங்கை அடைந்துள்ள தோல்வி மற்றும் சிவில் அரச செயற்பாடுகளில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்பு மறுசீரமைப்பின் ஊடாகவோ அல்லது புதிய அரசாங்கத்தின் மூலமோ இன்னுமும் தீர்வு காணப்படாமை குறித்துக் கரிசனையை வெளிப்படுத்திய நெதர்லாந்து நாட்டின் பிரதிநிதி, தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை மக்களுக்குத் தனது அனுதாபத்தையும் வெளிப்படுத்தினார். அதுமாத்திரமன்றி கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் என்பன தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதும் ஊழலை இல்லாதொழிப்பதும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

பின்லாந்து 

அதேவேளை அண்மையில் மாணவ செயற்பாட்டாளர்களைக் கைதுசெய்வதற்குப் பயங்கரவாத்தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய பின்லாந்து நாட்டின் பிரதிநிதி, அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவோரைக் கைதுசெய்வதற்குப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக முடிவிற்குக்கொண்டுவருமாறும் வலியுறுத்தினார். மேலும் தற்போது இலங்கை பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதை ஏற்பதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் இந்நெருக்கடிகள் அவசியமான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

ஐரோப்பிய ஒன்றியம் 

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் சவால்களை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி, கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளடங்கலாக மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படல் மற்றும் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படல் என்பவற்றின் அவசியம் குறித்து வலியுறுத்தினார். மேலும் பயங்கரவாத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரப்படுவதுடன் அச்சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

சுவிஸ்லாந்து 

இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் விளைவாகப் பெருமளவானோர் அத்தியாவசியப்பொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் உணவுப்பாதுகாப்பற்ற நிலைக்கும் முகங்கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் சுவிஸ்லாந்து கரிசனையை வெளிப்படுத்தியது. அதுமாத்திரமன்றி வட, கிழக்கு மக்கள் மிகநீண்டகாலமாக உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை வலியுறுத்திவருகின்ற போதிலும், இவ்விடயத்தில் இன்னமும் மிகச்சொற்பளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய சுவிஸ்லாந்து பிரதிநிதி, அதுகுறித்தும் அமைதிப்போராட்டக்காரர்கள்மீதான தாக்குதல்கள் குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

பிரான்ஸ் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என்றும், குறிப்பாக நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை வலுப்படுத்துவதுடன் சிவில் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதி வலியுறுத்தினார். 

ஜப்பான் 

பயங்கரவாத்தடைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கென முன்மொழியப்பட்ட திருத்தங்களை வரவேற்பதாகத் தெரிவித்த ஜப்பான் பிரதிநிதி, இருப்பினும் நாட்டில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு மேலும் பல முக்கிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தோடு நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். 

ரஷ்யா 

நல்லிணக்கத்தை உறுதிசெய்வதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பித்திருப்பதாகவும், நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்போது பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகவும் பேரவையில் ரஷ்யா சுட்டிக்காட்டியது. 

சீனா 

மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை எதிர்ப்பதிலும் இலங்கை முன்னேற்றகரமான வகையில் செயற்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய சீனப்பிரதிநிதி, இலங்கையின் இறையாண்மை மற்றும் சுயாதீனத்தன்மை ஆகியவற்றைத் தாம் வலுவாக ஆதரிப்பதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் அதற்கேற்றவாறு அமையவில்லை என்றும், இலங்கையின் தற்போதைய நிலைவரத்தை எந்தவொரு தரப்பினரும் தமக்குச் சாதமான முறையில் பயன்படுத்திக்கொள்வதற்கு முயற்சிக்கக்கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார். 

அமெரிக்கா 

சட்டத்தின் ஆட்சி, நீதியை நாடுவதில் அனைவருக்கும் சமத்துவமான வாய்ப்பு, முக்கிய கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை என்பன ஜனநாயகக்கட்டமைப்பின் முக்கிய தூண்களாகும் என்றும், எனவே இலங்கையானது முதலாவது நடவடிக்கையாக நாட்டில் நீண்டகாலமாக நிலவும் ஊழலையும் தண்டனைகளிலிருந்து விலக்கீடுபெறும் போக்கையும் முடிவிற்குக்கொண்டுவரவேண்டும் என்று அமெரிக்காவின் பிரதிநிதி வலியுறுத்தினார். 

பிரிட்டன் 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்திற்கு அமைவாக பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை நிலைநாட்டுதில் மிகச்சொற்பளவிலான முன்னேற்றங்களே அடையப்பட்டிருப்பதாகக் கரிசனை வெளியிட்ட பிரிட்டன், கடந்த 2020 ஆம் ஆண்டு உறுதியளிக்கப்பட்டவாறு உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று உருவாக்கப்படாத நிலையில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தியது. 

கனடா

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகள் நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேலும் மோசமடையச்செய்யும் என கனடா அதன் கரிசனையை வெளிப்படுத்தியது.