Breaking News

இந்தியாவின் அரசியல் மாற்றமும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே இனப்பிரச்சினைக்கு அரசியல்
தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு வெளியில் அரசியல் தீர்வுக்கான எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படமாட்டாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது. 
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி மகிச்த ராஜபக்சவிடம் அதிகாரப் பரவலாக்கல் பற்றி பேசிய இந்தியப் பிரதமர்இ 13 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல்களுக்கு இந்திய ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்து செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தியப் பிரதமருடனான பேச்சுக்களின்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்ததாகவும் இந்தியத் தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தப் பின்னணியில்தான் ஜனாதிபதி மகிநத ராஜபக்ச புதுடில்லியில் இருந்து நாடு திரும்பியதும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று அடித்துக் கூறியிருக்கின்றார்.
‘இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது பலவந்தமாகவே திணிக்கப்பட்டது, எனவே, அது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பேச்சுக்கள் நடத்தி முடிவுக்கு வரவேண்டும். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்’ என்று அமைச்சர் சிறிபால டி சில்வா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கின்றார்.
புதிய இந்தியப் பிரதமரும் ஜனாதிபதியும் சந்தித்தபோது, பல்வேறு விடயங்கள் பற்றி பேசப்பட்டிருக்கின்றது. அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் பற்றியும் பேசப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்கிக் கூறியபோதே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.
‘இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இருந்தால்இ அது இலங்கையின் உள்ள ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும். எமது பிரச்சினை எம்மாலேயே தீர்க்கப்பட வேண்டும். எமது உள்ளக விடயத்தில் எந்தவொரு வெளிநாடும் தலையிட முடியாது. கருத்துக்களை நாங்கள் செவிமடுப்போம். ஆனால் பிரச்சினைக்கான தீர்வை நாங்களே எடுப்போம்’ என்று அவர் மேலும் விளக்கமளித்திருக்கின்றார்.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றிய இந்த அறிவித்தலும், விளக்கமும், தமிழ் மக்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதையே காண முடிகின்றது. இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றதும், இலங்கை அரசாங்கத்தின் போக்கிலும், அதன் நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் ஏற்படும் என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன.
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கும் மேலாகவும் நாங்கள் செயற்படுவோம் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உறுதியளித்திருந்தார். இதனை 13 பிளஸ் என்று ஊடகங்கள் வர்ணித்திருந்தன. ஆயினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை. மாறாக அந்தத் திருத்தச் சட்டத்தையே இல்லாமல் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த போதுதான்இ இந்தியாவின் தலையீட்டுடன் வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் இணங்கி வந்தது. அதனையடுத்து அந்தத் தேர்தலும் நடத்தப்பட்டது. ஆனால், வடமாகாண சபைக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் எதனையும் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கம் இன்றளவிலும் முன்வரவில்லை. மாறாக 13 ஆவது திருத்த்ச் சட்டத்திலும் பார்க்கக் குறைந்த அதிகாரங்களையே வடமாகாண சபைக்கு அரசு அனுமதித்திருக்கின்றது. இதனை 13 மைனஸ் என்று ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
இந்த நிலைமையில்தான் நடந்து முடிந்துள்ள இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று, புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள நரேந்திரமோடியிடம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார் என்ற செய்தியும்இ அதனைத் தொடர்ந்து இலங்கை மீது திணிக்கப்பட்டுள்ள அந்தத் திருத்தச் சட்டத்தைப் பற்றி நாங்கள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பேசி முடிவெடுக்க வேண்டியுள்ளது என்று அமைச்சர் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
இரட்டை நிலைப்பாடு
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உபதலைவரும், அமைச்சரும், அரசாங்கத்தி;ன் பேச்சாளருமாகிய சிறிபால டி சில்வா அரசாங்கத்தின் நிலைப்பாடாக இந்தக் கருத்துக்களைக் கூறியிருந்தாலும், சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அதிகாரப் பரவலாக்கல்இ அரசியல் தீர்வு போன்ற  முக்கியமான விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுபற்றி அமைச்சர் சிறிபால டி சில்வா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் வைத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகக் குறிப்பிட்டு, இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருப்பதானது, இந்தக் கருத்து அரசாங்கத்தின் கருத்தா அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்தா என்று கேள்வி கேட்கத் தூண்டியிருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்து சுமார் ஒரு வருட காலத்திற்குப் பின்னர் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் அரசியல் தீர்வுக்காக நடத்திய பேச்சுவார்த்தைகள் ஒரு வருடம் நீடித்திருந்தது. பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டு காலம் கரைந்து, ஒரு வருடம் நிறைவை எட்டியபோது, அந்தப் பேச்சுவார்த்தைகள் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுக்கள் அல்ல என்று அரசாங்கத்தின கருத்தாக அரச தரப்பினர் அப்போது தெரிவித்திருந்தார்கள். அத்துடன் தனியொரு கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களானது, அதிகார பலமற்றது. எனவே அந்தப் பேச்சுவார்த்தைகள் செல்லுபடியாகாது என்று அடாவடியாக அறிவித்திருந்தார்கள். அறிவித்ததைப் போலவே, அந்தப் பேச்சுக்களின் முடிசுளையும் பேச்சுக்களின் போது அரசாங்கத் தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்ட விடயங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்தவே இல்லை.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் அரசாங்கம் உளப்பூர்வமான ஆர்வத்துடன் அப்போது ஈடுபட்டிருக்கவில்லை என்பதை அரசாங்கத்தின் அப்போதைய அறிவித்தல்களும், செயற்பாடுகளும் வெளிப்படுத்தியிருந்தன. பேச்சுவார்த்தைகளில் அரசாங்கம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதும், இதன் மூலம் வெளிப்பட்டிருந்தது.
இந்த நாட்டில் மோசமான யுத்தம் ஒன்று மூள்வதற்கு மூலகாரணமாக இருந்த இனப்பிரச்சினைக்கு அதிகார பரவலாக்கலின் மூலம், ஓர் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதில் கொஞ்சமும் அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என்பதையே யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும் அவதானிக்க முடிகின்றது.
இந்திய அரசாங்கத்துடனான பேச்சுக்களில் பங்கெடுக்கின்ற ஜனாதிபதி, அந்தச் சந்திப்புக்களின்போது கூறுகின்ற கருத்துக்களுக்கு எதிர்மாறான கருத்துக்களையே உள்நாட்டில் அரசாங்கத்தின் சார்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைச்சர்களும், அரசாங்கத்தின் பேச்சாளராகிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் கூறி வந்திருக்கின்றனர் அதேபோன்ற ஒரு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்ட முரண்பட்ட கருத்துக்கள் இப்போதும், இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்து இருதரப்புப் பேச்சுக்களை நடத்திய பின்னர்இவெளியிடப்பட்டிருக்கின்றன.
இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படமாட்டாது என்பதையேஇ அரசாங்கத்தின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் விடுதலைப்புலிகளை இல்லாதொழித்ததன் பின்னர்இ இனப்பிரச்சினை என்ற ஒன்று இலங்கையில் கிடையாது என்பதை நிலைநாட்டுவதற்கான அரசியல் எத்தனங்களையும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்றது. இதன் காரணமாகத்தான், ‘இலங்கையில் இனப்பிரச்சினை என்று ஒன்று இருந்தால், அது இலங்கையின் உள்ள ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும்’ என்று சொற்களைத் தேடியெடுத்து மிகவும் நிதானமாகச் சொல்லியிருக்கின்றார்.
விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். மிதவாத தமிழ் அரசியல் தலைவர்களின் அஹிம்சைப் போராட்டங்களினாலும்இ அரசாங்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழையாத இயக்கத்தினாலும் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை. பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அஹிம்சை வழி போராட்டங்களை ஆயுத பலம் கொண்டு அரசாங்கம் அடக்கியொடுக்கியது. 1956, 1977இ 1983 போன்ற காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் மீது அரச ஆதரவு வன்முறைகள் அளவு கணக்கின்றி கட்டவிழ்த்துப்பட்டிருந்தன. இதனால் குறைவடைவதற்குப் பதிலாகஇ பிரச்சினைகள் அதிகரித்தன. இதன் காரணமாகவேஇ தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள். இந்த ஆயுதப் போராட்டத்திற்கு இந்தியா முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இது வரலாற்று உண்மை.
ஆயினும் ஆயுதப் போராட்டத்தையும் அடக்கியொடுக்குவதற்கு அதிகூடிய இராணுவ பலத்தை அரசாங்கம் பயன்படுத்தத் தொடங்கியபோதேஇ இந்தியா இலங்கை விவகாரத்தினுள் நேரடியாகத் தலையிட்டது. பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வகையில் அதிகாரங்களைப் பரவாலக்கும் விதத்தில் மாகாண சபை முறைமையை அறிமுகம் செய்து இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில்இ அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தின் விளைவாகவே இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா நீண்டகாலமாகவே நேரடியாகப் பங்கேற்று வந்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இலங்கையின் நெருக்கமான அயல்நாடு என்ற வகையிலும்இ இலங்கை விவகாரங்களில் இந்தியா அக்கறை செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இதற்கும் அப்பால் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் ஆளுமை, பாதுகாப்பு, பொருளாதார ரீதியான வளர்ச்சி என்பவற்றில் கேந்திர முக்கியத்துவமிக்க தீவாகிய இலங்கையின் ஊடாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் இந்தியா இலங்கை மீது நெருக்கமான உறவையும் அவதானிப்பையும் கொண்டிருக்க வேண்டிய நிலைமைக்குள் ஆழ்ந்திருக்கின்றது.
இத்தகைய புறக்காரணங்களினால், இந்தியா விரும்பியோ விரும்பாமலோஇ இலங்கையின் எரியும் பிரச்சினையாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இனப்பிரச்சினையிலும், தீவிர கவனம் செலுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்திய அரசுகள் மீது, கடந்த காலங்களில் இந்தப் பொறுப்பைச் சரியான முறையில் கொண்டு நடத்தவில்லை என்ற வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்இ மானுடத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்பவற்றுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு தொடர்பில் சர்வதேச மட்டத்தில் குறிப்பாக ஐநா மனித உரிமைகள் பேரவை மட்டத்தில் இந்தியா உரிய முறையில் செயற்படவில்லை என்ற ஆதங்கம் இலங்கைத் தமிழ் மக்களிடம் இருக்கின்றது. இந்த ஆதங்கத்தை அவர்கள் பகிரங்கமாகவும்இ நேரடியாகவும் வெளிப்படுத்தியிருந்தார்கள். நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறக் கூடாது என்ற விருப்பத்தைக் கொண்டிருந்ததுடன் தேர்தலில் அந்தக் கட்சி அடைந்த தோல்வியைக் கண்டு அவர்கள் வெளிப்படையாகவே மகிழ்ந்திருந்தார்கள்.
இந்த நிலைமையில் புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் உறுதியாகச் செயற்பட வேண்டும். அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்இ இலங்கை அரசாங்கம் இராணுவ மேலாதிகத்துடன் செயற்பட்டு வருவதனால் எற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு முடிவு கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் முன்வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்.
இந்த எதிர்பார்ப்பின் பின்னணியிலேயே இந்தியப் பிரதமருக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளையும், அந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இலங்கை அசாங்கத்தின் நடவடிக்கைகள் எப்படி அமையப் போகின்றன என்பதையும், அந்த நடவடிக்கைகள் தொடர்பில் புதிதாகப் பதவியேற்றுள்ள இந்திய அரசாங்கத்தின் பிரதிபலிப்புக்கள் எப்படி இருக்கப் போகின்றன என்பதையும் இலங்கைத் தமிழ் மக்கள் ஆர்வத்தோடு நோக்கியிருக்கின்றார்கள்.
இராணுவ ஆக்கிரமிப்பும், நில அபகரிப்பும்
வடக்கும் கிழக்கும் தமிழர்களுடைய பாரம்பரிய தாயகப் பிரதேசம். அங்கு அவர்கள் சுயமாகத் தமது நிர்வாகத்தை எந்தவிதத் தலையீடுமின்றி தஙர்களே கொண்டு நடத்தக் கூடிய ஆட்சிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் அரசியல் அபிலாஷையாகும். அவர்கள் தமது தனித்துவத்தைப்  பேணியவாறு கொழும்பில் இருந்து செயற்படுகின்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பது அவர்களுடைய விருப்பமாகும். பெரும்பான்மை இன மக்கள் எவ்வாறு சுதந்திரமான ஆட்சி முறையைக் கொண்டிருக்கின்றார்களோ மேற்கொள்கின்றார்களோ அந்த வகையில் தமிழர்கள் தமது காரியங்களை மேற்கொள்வதற்குரிய அதிகார பலமும், சுதந்திரமும் கெண்ட ஆட்சி முறைமையொன்று தங்களுக்கும் இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய எதிர்பார்ப்பாகும்.
ஆனால் இந்த எதிர்பார்ப்பானது பெரும்பான்னை இனத்தவராகிய சிங்கள அரசியல்வாதிகளினால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது. அல்லது, பெரும்பான்மை இனம் என்ற காரணத்தினால் ஏனைய சிறுபான்மை இனமக்கள் தங்களுக்குக் கீழே அடிபணிந்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடுஇ தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்பை வேண்டுமென்றே தவறாக அர்த்தப்படுத்திஈ அவர்களின் எதிர்பர்ப்பை இல்லாமல் செய்ய முயன்று வருகின்றார்கள்.
இதன் காரணமாகத்தான் இணைந்திருந்த வடக்கும் கி;ழக்கும் அரசியல் உள்நோக்கத்துடன் நீதிமன்றத்தின் துணையோடு சிங்கள தீவிர்வாதிகளின் மூலமாக அரசாங்கத்தினால் பிரிக்கப்பட்டது என்பது அவர்களுடைய குற்றச்சாட்டாகும். அது மட்டுமல்லாமல் இந்த இரு மாகாணங்களும் இணைந்துவிடக் கூடாது என்பதற்காக இவற்றுக்கிடையில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதும் அவர்களின் குற்றச்சாட்டாகும்.
இத்தகைய நடவடிக்கைகளுக்கு அப்பால் விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், தேசிய பாதுகாப்புக்காக என்ற பெயரில் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு நிரந்தர தளங்களை அமைப்பதற்கும் நிரந்தர இராணுவ குடியிருப்புக்களை அமைப்பதற்குமான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
வலிகாமம் வடக்கில் பொதுமக்கறுக்குச் சொந்தமான 6000 ஏக்கர் காணிகளும் வவுனியா செட்டிகுளத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமாகிய மனிக்பாம் முகாம் அமைந்திருந்த 6000 ஏக்கர் நிலப்பரப்பும் இராணுவத் தேவைக்காக கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேபோன்று மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்கான பெருமளவு நிலப்பரப்பும் அரசாங்கத்தினால் கைப்பற்றப்பட்டு  அங்கு குடியிருப்புக்களை அமைக்கும் பணியில் இராணுவத்தினரை அரசு ஈடுபடுத்தியிருக்கின்றது.
இதேபோன்று இராணுவ முகாம்கள்இ பொலிஸ் நிலையங்கள் என்பவற்றை அமைப்பதற்கும் அல்லது யுத்த காலத்தில்இ அந்தச் சூழலின் தேவையைக் கருத்திற்கொண்டு இராணுவமும் பொலிசாரும் நிலைகொண்டிருந்த பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளையும் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொதுமக்களும்இ பொதுமக்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களும் முறையிட்டிருக்கின்றார்கள்.
இந்த வகையில் அண்மைய நடவடிக்கையாக யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பொலிஸ் நிலையம் இயங்கி வருகி;ன்ற மாடி வீட்டுடன் கூடிய தனியாருக்குச் சொந்தமான காணியை பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமாக்குவதற்கான சுவீகரிப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கின்றது.
அதேபோன்று அச்சுவேலி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அந்தக் காணியையும் அதன் அயலில் உள்ள தனியாருக்குச் சொந்தமான 4 ஏக்கர் காணியையும் சுவீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களுக்குச்  சொந்தமான பெருமளவு காணிகள் இராணுவத்தினராலும் அரசினாலும் கையகப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் சுமார் இருபதினாயிரம் இடம்பெயர்ந்த குடும்பங்கள் சொந்தக் காணிகளில் குடியேற முடியாமலும் உரிய குடியிருப்புக்கான காணிகளின்றியும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த குடும்பங்கள் அனைத்தும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக அரசாங்கம் பிரசாரம் செய்து வருகின்றது. உண்மையாகவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற முடியாமல் தவித்துக் கொண்டிக்கின்ற நிலைமையில்தான் மன்னார் முசலி பிரதேசத்தில், முன்னர் சிங்கள மக்கள் இல்லாத ஒரு பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்ற பெயரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
மீள்குடியேற்றப்படுகின்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்திருந்த காலத்தில் எங்கு வசித்தார்களோ அந்தப் பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகளின் உறுதிக்கடிதம் கொண்டு வந்தால் மட்டுமே மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இந்த சிங்களக் குடும்பங்களுக்கு அத்தகை விதிமுறைகள் மீறப்பட்டு எந்தவிதமான ஆவணங்களும் கோரப்படாமல்இ மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்திருக்கின்றார்கள் என்ற காரணத்தை மட்டும் முன் வைத்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.
அரச உயர்மட்டச் சந்திப்புக்களில் அதிகாரப் பரவலாக்கல் மற்றும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை பற்றி உறுதி அரச தலைவர்கள் உறுதியளிப்பதும், மறுபுறத்தில் உள்நாட்டில் அமைச்சர்களும் அரசு சார்ந்தவர்களும் அதற்கு முரணான கருத்துக்களை வெளியிடுவதும் காலம் காலமாக நடந்து வருகின்றது. அதேநேரம் மறுபக்கத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதிலும்இ இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்வதிலும் பல நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் போக்கு இனப்பரம்பலின் இயல்பு நிலையைப் பாதிக்கச் செய்வதுடன், பாரதூரமான எதிர்கால விளைவுகளை ஏற்படுத்தவுமே வழிவகுக்கும். எனவே இந்தியாவி;ல் பதவியேற்றுள்ள புதிய அரசாங்கமும், புதிய பிரதமர் நரேந்திரமோடியும் காலம் கடத்தாமல் இலங்கை விவகாரத்தில் உடன் கவனம் செலுத்தி உண்மை நிலைமைகளைக் கண்டறிந்து பிரச்சினைகள் கைமீறிச் செல்லாமல் தடுப்பதுடன் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
- செல்வரட்ணம் சிறிதரன் -
நன்றி – வீரகேசரி