Breaking News

வங்கியில் 1000 கோடி: பொதுபல சேனா,முஸ்லிம் இயக்கங்களுக்கும் அடுத்த வாரம் தடை..?

அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் மற்றும் பொதுபல சேனா
அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விடயங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களுடன் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் ஜனாதிபதி விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பதற்றமான நிலைமையை ஏற்படுத்தும் சிலர் நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு தூதரங்கள் ஊடாக நேரடியாக நிதியுதவிகள் கிடைத்து வருவதாக இதன் போது தகவல் வெளியிடப்பட்டது.
வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் நிதியுதவியை பெற்று வரும் ஒரு நபரின் பெயரும் இதன் போது தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சகல விடயங்களையும் அடிப்படையாக கொண்டு அரசாங்கம் அடுத்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரியவருகிறது.
பொதுபல சேனா அமைப்புக்கு அமெரிக்கா, நோர்வே போன்ற நாடுகளிடம் இருந்து நிதியுதவிகள் கிடைத்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. 
எனினும் அதனை பொதுபல சேனா அமைப்பு மறுத்திருந்தது. பொதுபல சேனா அமைப்பின் பிக்குமாருக்கு வங்கிகளில் ஆயிரம் கோடி ரூபாவுக்கும் மேல் பணம் வைப்பில் இருப்பதாக அந்த அமைப்புக்கு எதிரான பிக்கு ஒருவர் அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார்.
மதவாதத்தை தூண்டும் அமைப்புகள் தடை செய்யத் தீர்மானம்
மத ரீதியான அடிப்படைவாத்தை முன்னெடுத்து சர்வதேச சக்திகளுக்கு உதவி வரும் மத சம்பந்தப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்களை தடை செய்வது குறித்து அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தியுள்ளது.
ஆறு நாடுகளிடம் இருந்து நிதியுதவியை பெறும் 14 மத சார்பான அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இயங்கி வருவதாக புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தயாரித்துள்ள இரகசிய அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரி தான் தயாரித்துள்ள மேற்படி அறிக்கையை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கியுள்ளார்.
குறித்த இரகசிய அறிக்கைக்கு அமைய 14 அடிப்படைவாத அமைப்புகளில் தலா 150 பேர் ஆயுதங்களை கொண்ட ஆயுதக்குழுக்கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த அமைப்புகளில் 10 அமைப்புகள் கொழும்பில் இயங்கி வருவதுடன் ஏனைய 4 அமைப்புகள் வெளிமாவட்டங்களில் இயங்கி வருகின்றன.
இலங்கை புலனாய்வாளர்கள் கடந்த காலங்களில் மேற்கொண்ட விசாரணைகளில் இந்த அடிப்படைவாத மத அமைப்புகள் இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் சம்பந்தப்பட்ட தகவல்களையும் வெளிநாட்டு சக்திகளுக்கு வழங்கியுள்ளன.
மேற்படி அமைப்புகளுக்கு நிதி கிடைக்கும் விதம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை நடத்தவுள்ளது.
இதனிடையே குறித்த மத அமைப்புகளில் ஒன்றின் அதிகாரி ஒருவர் ஸ்கெண்டிநேவியன் நாடுகளுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதாகவும் அந்த நாடுகளின் ஒன்றில் புலனாய்வு சேவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இலங்கையின் குடியுரிமை பெற்றுள்ள இந்த வெளிநாட்டு பிரஜையே வன்னி இராணுவ நடவடிக்கை பற்றிய தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் சம்பந்தமாக புதிய சட்டத்திட்டங்களை அமுல்படுத்த அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.