Breaking News

பலாங்கொடயில் மண்ணுக்குள் புதைந்து இரு யுவதிகள் பலி : மொத்த உயிரிழப்பு 21ஆக உயர்வு

மலையகத்தில் நேற்று இரவிலிருந்து கடும் மழை பெய்து
வருவதால், நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், பொதுமக்களின் வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளன. அந்தவகையில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக மஸ்கெலியா சாமிமலை, கவரவில கொலனி, மானெலுவ தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் மக்களின் இயல்வு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 4 மணியளவில் இப்பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இவ்வீடுகள் மூழ்கியதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட 70 பேர் தற்போது தற்காலிகமாக ஆலய மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில வீடுகளில் நீர் தேங்கி இருப்பதனால் அவர்களுக்கு உதவிகள் வழங்குவதற்காக இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். மேற்படி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயம், அம்பகமுவ பிரதேச சபை காரியாலயம், தோட்ட நிர்வாகம் ஆகியன முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்க்து. 


தொடர்ந்து மழை பெய்வதனால் பொது மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிரி தெரிவிக்கின்றார். இதேவேளை, மத்துகம, வலலாவிட்ட மாகந்த வித்தியாலயத்தில் மீது மின்னல் தாக்கியதில் ஆசிரியை ஒருவர் உட்பட 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதில் மாணவர்கள் இருவர் உட்பட ஆசிரியை, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோரின் நிலைமை சிறிது நேரத்திற்கு பின்னர் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னைய செய்தி.

வெள்ளம்- மண்சரிவு- மின்னல் போன்ற இயற்கை அனர்த்தங்களில் பாலாங்கொட – மெகொடவலேகொட – வத்துகாரகந்த பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்து இளம் யுவதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். மண்மேடு ஒன்று வீட்டின் சுவர் மீது சரிந்து வீழ்ந்ததில் சுவர் இடிபாடுகளுக்குள் சிக்கி இவ்விரு யுவதிகளும் உயிரிழந்ததோடு மற்றுமொரு பெண் காயமடைந்துள்ளார்.
24 வயதுடைய சந்திரிக்கா குமாரி மற்றும் 17 வயதுடைய சமிலா தமயந்தி ஆகிய இரு யுவதிகளே உயிரிழந்துள்ள நிலையில் குறித்த இருவரின் தாய் காயமடைந்த நிலையில் பலாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.