Breaking News

புலிகளைப் புகழ்ந்த சில சிங்களத் தளபதிகள் - அங்கம் 2

1986ஆம் ஆண்டளவில் யாழ் கோட்டை சிங்கள
இராணுவ முகாம் தமிழ் மக்களுக்கு மிகப் பெரிய இடையூறாக இருந்தது மட்டுமன்றி,அடிக்கடி அங்கிருந்து எறிகணைகளை ஏவி, மக்களைக் கொன்று குவித்து வந்தது சிங்கள இராணுவம்.

அதனால் ,புலிகள் அந்த முகாமைச் சுற்றி நான்கு புறமும் காவல் போட்டிருந்தனர். பல சந்தர்ப்பங்களில் கோட்டை முகாமில் இருந்து கனரக வாகனங்களுடன் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் வெளியில் இன அழிப்பு நோக்கத்துடன் வருவார்கள்.அப்போது கோட்டை வாசலில் வைத்தே புலிகள் அவர்கள் மீது பயங்கரத் தாக்குதல் நடாத்தி மீண்டும் உள்ளே அனுப்பி விடுவர் தளபதி கேர்ணல் கிட்டு தலைமையில் நடந்த அந்த தாக்குதல்கள் மறக்க முடியாதவை, வீரம் செறிந்தவை.

அப்படியே போய்க் கொண்டிருந்தபோது,1986இன் நடுப்பகுதியில் எமது படைப் பிரிவுக்கு வெளியில் இருந்து வந்து சேந்தது 50 kalipar என்னும் நவீன தாக்குதல் துப்பாக்கி. ஓரளவு பதிவாக பறக்கும் உலங்கு வானூர்திகளை குறிபார்த்து சுட்டால் பெரும் சேதம் விளை விக்ககூடியது. சிலவேளை குறிப்பிட்ட இடத்தில் சுட்டால் உலங்கு வானூர்தி தீப்பிடிக்கவும் கூடும். பின்னாளில் அதனால் பல இழப்புகள் இலங்கைப் படைகளுக்கு ஏற்பட்டதுண்டு.

இப்படியிருக்கும் போதுதான் 50 கலிபரின் துணையோடு கோட்டைக்குள்- இறங்கி உலங்கு வானூர்தி மூலம் உணவு, ஆயுதங்களை விநியோகம் செய்த உலங்கு வானூர்திகளை இறங்க விடாமல் தொடர்ந்து தாக்கி கோட்டை இராணுவத்துக்கு நெருக்கடி கொடுக்கும் தாக்குதல்களை தளபதி கிட்டு போராளிகளுடன் சேர்ந்து தொடங்கினார் அன்றுமுதல் உலங்கு வானூர்திகள் ,குண்டு வீச்சு விமானங்கள் என்பன கோட்டையை சுற்றியிருந்த புலிகளின் நிலைகளின் மீது பாரிய தாக்குதல் நடாத்தி விட்டு கோட்டைக்குள் இறங்க முயற்சி செய்தன.

ஆனால், பல நாட்கள் ஆகியும் அது முடியவில்லை இறுதியில் கப்டன் கொத்தலாவலை பணிந்தார். தமது இராணுவத்தினர் குடிநீர், நல்ல உணவின்றி, சமைக்க விறகின்றி தவிப்பதாகவும்,முற்றுகையை எடுத்து விடும்படியும்,தளபதி கிட்டுவை வாக்கி டாக்கி’ மூலம் கேட்டுக் கொண்டார். ஆனால், கிட்டு முற்றுகையை எடுக்கவில்லை ,அதற்கு பதிலாக,ஒரு லாரியில் விறகு குடிநீர்,பாண்(ரொட்டி ) கோதுமை மாவு,போன்றவற்றை எமது போராளிகள் மூலம் அனுப்பி வைத்தார். அதற்காக நன்றி சொன்னார் கப்டன் கொத்தலாவலை. 

பின்னர் யுத்த நிறுத்தம் ஏற்பட்டபோது கப்டன் கொத்தலாவலை யாழ் நகரில் இருந்த எமது முகாமுக்கு தனது ஒரு சில இராணுவத்தினருடன் வந்து தளபதி கிட்டுவைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அப்போது கிட்டு அங்கே இல்லை தனது காலில் ஏற்பட்ட பெருங் காயத்துக்கு சிகிச்சைக்காகவும்,செயற்கைக் கால் போடும் நோக்கத்துடனும் தமிழ் நாட்டில் இருந்தார். 

அப்போதுதான் கப்டன் கொத்தலாவலை பின்வருமாறு என்னிடமும் வேறு சிலரிடமும் சொன்னார். ”புலிகள் பயங்கர வாதிகள் என்று நினைத்திருந்த எனது எண்ணத்தை முறியடித்தவர் தளபதி கிட்டுதான்…மனச் சாட்சியும், மனித நேயமும் உள்ளவர்கள் புலிகள்” என்று சொல்லி பாராட்டினார்.

சில வருடங்களில் கப்டன் கொத்தலாவலை இராணுவத்தில் இருந்து விலகி வெளிநாடு ஒன்றுக்கு போய் விட்டார். நினைவில் இருந்து அழியாத நாட்கள் அவை !

-மு .வே .யோகேஸ்வரன் -