Breaking News

ஐநா விசாரணைக்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோருவது விந்தையானது!- சம்பந்தன் உரை

தன்னுடைய மோசமான தவறுகளுக்காக இந்தக் கடைசிக்
கட்டத்தில் அரசு இந்த நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோருவது விந்தையானது.  இவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.


அவர் ஆற்றிய உரையின் முழு விபரம் வருமாறு:-
இங்கு விவாதத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மற்றும் அது சம்பந்தமான பொது விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்காக நான் இங்கு இந்தக் கூற்றை வெளியிடுகின்றேன். தன்னுடைய மோசமான தவறுகளுக்காக இந்தக் கடைசிக் கட்டத்தில் அரசு இந்த நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைக் கோருவது விந்தையானது.
எதிரணியின் நேர்மையற்ற உறுப்பினர்களை மயக்கி, சொந்த நலன்களுக்காக கட்சி தாவச் செய்யும் நோக்குடன் நிறைவேற்று அதிகாரப் பதவிகளைப் பெரும்பாலும் இந்தச் சபையின் அரைவாசி உறுப்பினர்களுக்கு வழங்கி, அந்தத் திமிர்த்தன நடவடிக்கை மூலம் நாடாளுமன்றத்தை கேலிக்குரிய இடமாக்கிய இந்த அரசு, இப்போது அதே நாடாளுமன்றத்துக்கு இந்த நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அடிப்படை விடயத்துக்காக நாடி வந்திருக்கின்றது.
இப்படி இதை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருகின்றமை ஒரு மலிவான அரசியல் சாதுரியம் அல்லாமல் வேறில்லை என்பது முழு நாட்டுக்குமே வெளிப்படையாகத் தெரிந்த விடயம். இந்த நாட்டின் மக்களைப் பொறுத்தவரையில், அவர்களது அரசு தேசிய நல்லிணக்கம் மற்றும் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான முக்கிய விடயங்களை நிதானம் மற்றும் விவேகத்துடன் கையாள்வதை விடுத்து அவற்றை முதிர்ச்சியற்ற அரசியல் தந்திரத்தோடு விளையாடுவதில்தான் ஈடுபாடு காட்டுகின்றது என்பது அவர்களது பெரும் துரதிர்ஷ்டமாகும்.
பரிசீலனையில் உள்ள இந்த விசாரணைக்கு நாட்டின் 'ஒத்துழைப்பின்மையை' ஜெனீவாவில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஏற்கனவே அறிவித்துவிட்டார். அப்படியாயின் நாடாளுமன்றில் இந்தச் செயற்பாட்டின் நோக்கம் என்ன? தன்னுடைய தனிமைப்படுத்தப்பட்ட கொள்கையினால் அரசு அவ்வளவுக்குப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதா? அதனால்தான் பழியை நாடாளுமன்றம் மீதும் பகிர்ந்து சுமத்தவும், வெளிநாட்டில் உள்ள அரசுப் பிரதிநிதியின் இழிந்த அறிவிப்புக்கான றப்பர் ஸ்டாம்ப் ஆக நாடாளுமன்றத்தை மாற்றவும் அது முயல்கின்றதா?
எங்களின் முன்னால் உள்ள இந்தப் பிரேரணை மீள் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் அரசாங்கத்தின் அணுகுமுறைப் போக்கின் பண்பியல்பாக அமையும் அற்பத்தனத்தை விளக்கி நிற்கின்றது. இந்தப் பிரேரணை 'மனித உரிமைகள் ஆணைக்குழு'வின் ஒரு தீர்மானம் பற்றிக் குறிப்பிடுகின்றது. எனினும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இடத்துக்கு மனித உரிமைகள் கவுன்ஸில் வந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. மேலும் இந்தப் பிரேரணை, கவுன்ஸிலின் தீர்மானத்தை 'இலங்கை எதிரான' ஒன்றாகக் குறிப்பிடுகின்றது. ஆனால் அந்தத் தீர்மானம் 'இலங்கையின் இறைமை, சுதந்திரம், ஐக்கியம், ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவை மீதான கவுன்ஸிலின் அர்ப்பணிப்பை உறுதியுரைப்பதாக' குறிப்பிட்டிருந்தது.
அப்படியிருக்கையில், அரசு எவ்வாறு அதனை நாட்டுக்கு 'எதிரான' தீர்மானம் என்று தெரிவிக்க முடியும்?
அந்த விடயத்தில் அரசாங்கத்தின் தர்க்கத்தின் அடிப்படையில் நான் ஒரு கேள்வியை எழுப்ப விழைகிறேன். 2009 மே 26 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் சேர்ந்து தாம் விடுத்த ஒரு கூட்டு அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதியும் 'நாட்டுக்கு எதிராக' நடந்து கொண்டிருக்கின்றாரா? அந்தக் கூட்டறிக்கையில்,
"சர்வதேச மனிதாபிமான, மனித உரிமைச் சட்ட மீறல்களைக் கவனிப்பதற்கான பொறுப்புக் கூறும் நடைமுறையின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுத்தினார்."
அதற்கு ஜனாதிபதி ஓர் உறுதி வழங்கினார்:-
"அந்த ஆதங்கங்களைக் கவனிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்."
யுத்தத்தின்போது இரு தரப்புகளினாலும் இழைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பான பொறுப்புக் கூறலும் நீதியும் சர்வதேச மயப்படுத்தப்பட்டன என்ற விவகாரம் அரசினாலும், ஜனாதிபதியினாலும் 2009 மே இல் பரிசீலிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவினால் நேர்ந்தது. அந்த முடிவு சரியான ஒன்று, செயலாளர் நாயகத்துக்கு தான் அளித்த தனது சொந்த உறுதி மொழியில் அரசு நன்றாகச் செயற்பட்டிருக்குமானால் நாட்டின் ஆளுகை குறிப்பிடத்தக்க வகையில் இலகுவானதாக இருந்திருக்கும். ஆனால் அது அப்படி இருக்கவேயில்லை. செயலாளர் நாயகத்துக்குத் தான் வழங்கிய உறுதியை அரசு மீறியது. அதனால் இலங்கை அரசுடனான தனது உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது குறித்துத் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டிய நிலையை அது அவருக்கு ஏற்படுத்தியது.
செயலாளர் நாயகத்துக்குத் தாம் வழங்கிய உறுதியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச 2010 மே 15 ஆம் திகதி கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும நல்லிணக்க ஆணைக்குழுவை (எல்.எல்.ஆர்.ஸி) நியமித்தார். எல்.எல்.ஆர்.ஸி தனது இறுதி அறிக்கையை 2011 டிசம்பர் 16 ஆம் திகதி வெளியிட்டது. இடப்பெயர்வு, நிலப் பிணக்கிற்கான தீர்வு, தடுப்புக் காவல், ஊடக சுதந்திரம், நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் வலிந்து காணாமல் போகச் செய்தல் பற்றிய விசாரணைகள் உட்பட மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பான எல்.எல்.ஆர்.ஸியின் பல பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது.
இன்று வரையில் ஆக்கபூர்வமான இந்தப் பரிந்துரைகளில் கையளவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த முன்னேற்றம் தொடர்பில் அரசின் சொந்த உரிமை கோரலிலேயே முரண்பாடுகள் உள்ளன.
இந்தப் பரிந்துரைகளில் 85 வீதமானவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என 2014 பெப்ரவரியில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். அதேவேளை எல்.எல்.ஆர்.ஸியின் பரிந்துரைகளில் 30 வீதம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என ஜனாதிபதி தாமே ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு 2014 மே இல் தெரிவித்தார். பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க 99 வீதமான பரிந்துரைகள் முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என 2013 மார்ச்சில் ஊடக மாநாட்டில் உரிமை கோரியமையை நாம் நினைவுபடுத்துகின்றோம்.
எனவே இந்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதின் முன்னேற்றம் பற்றி அறிவிப்பதில் கூட அரசு முழுமையாகக் கபடமாகச் செயற்படுகின்றது என்பதைக் குறிப்பிட விரும்புகின்றோம். மேலும், 'முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டன" என்று அரசு கருதும் பல பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை.
உதாரணத்துக்கு, கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி விசாரணை செய்வது சம்பந்தமான பரிந்துரை முழு அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அரசு உரிமை கோரியது அத்தகைய உரிமை கோரலுக்கான ஆதாரமாக, ஸ்ரீலங்கா ஊடக கவுன்ஸிலுக்கு இணையம் மூலம் ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்வதற்கான பொறிமுறை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டமையை அரசு காட்டியது.
ஆனால் அதிகளவில் திறனற்ற அந்தப் பொறிமுறை ஊடக சுதந்திரத்தை மேம்படுத்துவதை விடுத்து அதிகம் அதைக் கட்டுப்படுத்துவதாகவே அமைந்தது. அதேவேளை 'த சண்டே லீடர்' ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை, யாழ்ப்பாணம் உதயன் அலுவலகம் மற்றும் ஊழியர்கள் மீதான பல தாக்குதல்கள் போன்றவை தொடர்பான விசாரணைகள் முடிவுறவில்லை; அல்லது தொடரப்படவில்லை.
அதற்கு மேல் சட்டவிரோத ஆயுதக் குழுக்கள் குறித்து விசாரித்து, சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பான எல்.எல்.ஆர்.ஸியின் பரிந்துரை முழுஅளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டதாக 2014 ஜனவரியில் அரசு அறிவித்தது. ஆனால் இத்தகைய குழுக்களைச் சேர்ந்தவர்களான - முழு அளவில் மனித உரிமை மீறல்களை இழைத்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்ட - பலர் இப்போதும் அரசு அரவணைப்புப் பெற்று, குற்றவிலக்களிப்பு வாய்ப்பை அனுபவித்து வருகின்றனர்.
பொறுப்புக் கூறல் விடயத்தைக் கவனிப்பதற்கான நேரடி ஆணையை எல்.எல்.ஆர்.ஸி கொண்டிருக்காவிட்டாலும் நாட்டின் ஐக்கியத்தைப் போற்றுதல் மற்றும் இனப்பதற்றம் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்தல் ஆகியவை சம்பந்தமான ஆணையை அது ஓரளவு கொண்டுள்ளது. இந்தப் பின்புலத்தில் பொறுப்புக்கூறல் விடயத்தையும் அது கையாள முடியும். எல்.எல்.ஆர்.ஸிக்கான - 2013 ஜனவரியில் தான் வெளியிட்ட - பதிலில், பொறுப்புக்கூறல் தொடர்பான எல்.எல்.ஆர்.ஸியின் அவதானிப்புக் குறித்து அதிருப்தியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தியிருந்தது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நிகழ்ந்தவை தொடர்பில் சர்வதேச சட்டங்களைப் பிரயோகிப்பதிலும், முறைமையிலும் பலவீனமாக இருந்தமை உட்பட பல காரணங்களினால் எல்.எல்.ஆர்.ஸியின் ஆய்வு முறைமை குறைபாடுகளைக் கொண்டிருந்தது. எனினும், சிவிலியன் இறப்புக்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரிக்குமாறு எல்.எல்.ஆர்.ஸி. கோரியமையை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
இவற்றுள், 2009 மே 10 இல் சுண்டிக்குளத்தில் கடற்படையால் சிவிலியன்கள் தாக்கப்பட்டனர் எனக் கூறப்படுவது, அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குக் குறுக்கறுத்துச் செல்ல முயன்ற சிவிலியன்களை மாத்தளனில் 2009 ஏப்ரல் 20 ஆம் திகதி இராணுவம் தடுத்ததாகக் கூறப்படுவது, பொக்கணையில் சிவிலியன்கள் மீது இராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியமை போன்றவையும் அடங்கும். இதுவரை இந்தச் சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்கு நேர்மையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவேயில்லை.
எல்.எல்.ஆர்.ஸி. பரிந்துரை தொடர்பான இராணுவக் குழு, 2013 ஜனவரி 24 ஆம் திகதி வெளியான தனது அறிக்கையில் "பொதுமக்கள் இழப்பு உண்மையில் இடம்பெற்றனவா அல்லது அத்தகைய நிகழ்வுகள் தூணடப்பட்டனவா அல்லது நிகழ்வு இழப்புகள் யுத்தக் கோளாறின் பிரிக்க முடியாத அங்கமா என்ற கேள்விகளுக்கு எல்.எல்.ஆர்.ஸி. உறுதியாகப் பதிலளிக்கவில்லை" - என்று தனது அவதானிப்பைப் பதிவு செய்துள்ளது.
அந்த இராணுவக் குழு எல்.எல்.ஆர்.ஸி. பரிந்துரையிலும், சனல் - 4 காட்சியிலும் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்கு இன்னொரு இராணுவ விசாரணைக் குழுவை நியமிக்க சிபாரிசு செய்திருந்தது. அதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஒரு குழுவை இராணுவம் நியமிக்க அது "எல்.எல்.ஆர்.ஸி. அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ஷெல் வீச்சுச் சம்பவங்கள் இலங்கை இராணுவத்தால் ஏற்பட்டவையல்ல" - என்ற முடிவுக்கு 2013 பெப்ரவரியில் வந்தது.
மேலும், கடற்படை விசாரணைக் குழு ஒன்று "சிவிலியன் இலக்குகள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையே அற்றவை. பொதுமக்கள் மீதோ, அல்லது பொதுமக்களின் உடைமைகள் மீதோ வேண்டுமென்றோ அல்லது கவனயீனமாகவோ நடத்தப்பட்ட தாக்குல்களுக்கு இலங்கைக் கடற்படை பொறுப்பு என்பதைக் காட்டுவதற்கு எந்த சாட்சியமும் இல்லை." - என்ற முடிவுக்கு வந்ததுள்ளது.
இராணுவ நீதிமன்றத்தினதோ, கடற்படை விசாரணைக்குழுவினதோ அறிக்கைகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இந்த இரகசியப் பேணலும், வெளிப்படைத் தன்மையுமில்லாத அரசின் போக்கு, திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை, 2006 இல் மூதூரில் 17 உதவிப் பணியாளர்கள் கொலை உட்பட பெரும் மனித உரிமை மீறல்கள் தொடபில் முக்கியமான, உறுதியான அவதானிப்புகளைக் கொண்ட உடலகம விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிடத் தவறியமையுடன் மாறாமல் ஒத்திருக்கின்றது.
நம்பகமான உள்நாட்டு விசாரணையை நடத்துவதற்கு அரசு தவறியமையினாலேயே தான் ஜனாதிபதியுடன் செய்துகொண்ட உடன்பாட்டைச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தம்பாட்டிலேயே மேற்கொள்வதற்கு செயலாளர் நாயகம் தள்ளப்பட்டார். என்பது துல்லியமான காணரமாகும். இலங்கையில் பொறுப்புக் கூறல் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பு விதிமுறைகள் ஜனாதிபதியினதும், செயலாளர் நாயகத்தினதும் கூட்டறிக்கையைப் பூர்வாங்க அடிப்படையாகக் கொண்டவை.
அந்தக் குழுவின் முக்கிய நோக்கம் குறித்து குறிப்பு விதிமுறையில் கூட "மீறல்களின் போக்கு மற்றும் இயல்பு தொடர்பில் பொறுப்புக் கூறல் நடவடிக்கை, கூட்டு அறிக்கையில் உறுதி கூறப்பட்டமைக்கு அமைவாக முன்னெடுப்பதற்கு கைக்கொள்ள வேண்டிய முறைமைகள், பயன்படுத்த வேண்டிய சர்வதேச தரங்கள், சமாந்தரமான அனுபவங்கள் ஆகியவை தொடர்பில் செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குதல்" என்று கூறப்பட்டுள்ளது.
அந்தக் குழு தன்னுடைய அறிக்கையை 2011 மார்ச் 31 ஆம் திகதி சமர்ப்பித்த போது, 'மீறல்களின் போக்கு மற்றும் இயல்புகள் தொடர்பில்' இலங்கை அரசு, ஐ.நா. ஆகிய இரு தரப்புகளுமே முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மிக அவதானமான ஆய்வை குழு மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாயிற்று. மீறல்களின் போக்கு மற்றும் இயல்பு தொடர்பான குழுவின் விசாரணை - அதுவே அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையின் முக்கிய பகுதி - இரண்டு தரப்புகளினாலுமே யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பதற்கு நம்பகரமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்பதை வெளிப்படுத்தியது.
அறிக்கையில் விவரமாகக் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகள், யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இரு தரப்புகளும் அதனை முன்னெடுத்த முறைமையின் காட்டுமிராண்டித்தனமான, சட்டவிரோதமான பண்பியல்புகள் குறித்து அதிர்ச்சி தரும் அம்சங்களை வெளிப்படுத்துவனவாக இருந்தன. அரசாங்கத்தைப் பொறுத்தவரை பல எண்ணிக்கையில் கொலை, அழிப்பு, சிறை, அடக்குமுறை, காணாமற் செய்தல் போன்ற யுத்தக் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நம்பகரமான குற்றச்சாட்டுகளை அறிக்கை கொண்டிருந்தது.
விமர்சன ரீதியில், யுத்தத்தின் இறுதியில் பெரும்பாலான பொதுமக்கள் இழப்புகள் அரசுப் படைகளின் கண்மூடித்தனமான ஷெல் வீச்சுக்களினால் ஏற்பட்டவை என்று குழு அவதானித்து வெளிப்படுத்தியுள்ளது. எல்.ரி.ரீ.ஐ பொறுத்தவரையில், யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நம்பகரமான குற்றச்சாட்டுக்களை குழு கண்டுள்ளது. இந்த நம்பகரமான குற்றச்சாட்டுகள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசுத் தலைவர்கள் மீதும் அதேவேளையில் சிரேஷ்ட எல்.ரி.ரி.ஈ. தலைவர்கள் மீதும் கிரிமினல் குற்றப் பொறுப்பை அவர்கள் பங்குக்கு சுமத்துவதை குழு கண்டறிந்துள்ளது.
திரு.மர்சூக்கி தருஸ்மன் - மரியாதைக்குரிய இராஜதந்தரியும் இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபரும்; யஸ்மின் சூகா அம்மையார் - தென்னாபிரிக்க மற்றும் ஸியாரா லியோனின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையாளர்; பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர் - நன்கு தெரிந்த அமெரிக்கக் கல்விமான். இவர்கள் அடங்கிய மிக உயர் தரத்திலான குழு உறுப்பினர்களை, ஐக்கிய நாடுகளுடன் தனக்கேயுரிய விதத்தில் ஈடுபாடு காட்டும் முறைமைக்கு அமைய, அரசு குற்றஞ்சாட்ட முற்பட்டது. மரியாதைக்குரிய இந்த சர்வதேச நிபுணர்களை பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் வகையில் உள்நாட்டில் அநாகரிகமாகத் தூற்றிக் கொண்டு, அதேசமயம் ஐ.நா. நிபுணர் குழுவின் ஆராய்வுகளிலும் அரசு தானாகவே பங்குபற்றியது என்ற உண்மையை அது புறம் ஒதுக்கிவிட முடியாது.
வெளித் தலையீடுகளுக்கு இடமளிக்கும் விடயத்தில் இணங்கியே போகாத சம்பியன்களாக உள்நாட்டுப் பார்வையாளர்களுக்குத் தன்னைக் காட்டிக் கொண்டு, அதேசமயம், மேற்படி குழுவின் முன் பரந்தளவிலான கருத்துக்களை 2011 பெப்ரவரி 22 ஆம் திகதி சமர்ப்பிப்பதற்காக அரசு உயர்மட்டக் குழு ஒன்றை நியூயோர்க்கிற்கு அனுப்பி வைத்தது. அப்போதைய சட்டமா அதிபரும், பின்னர் பிரதம நீதியரசருமான மோஹான் பீரிஸ், வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, நியூயோர்க்கில் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிப் பிரதிநிதி, வெளிவிவகார அமைச்சின் ஆலோசகர் ஆகியோர் அக்குழுவில் அடங்கியிருந்தனர்.
இரண்டு தரப்புகளினாலும் சர்வதேச குற்றங்கள் இழைத்தமைக்கான நம்பகரமான குற்றச்சாட்டுகள் இருப்பதை அவதானித்ததன் அடிப்படையில் "யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்புகளினாலும் இழைக்கப்பட்டவை எனக் கூறப்படும் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சட்டமீறல்கள் குறித்து நேர்மையான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்கும்படி" இலங்கை அரசுக்கு அக்குழு பரிந்துரை செய்தது.
அதேசமயம் பின்வரும் விடயங்களுக்காக சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றை நிறுவும்படி குழு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குப் பரிந்துரை செய்தது:- 1). பொறுப்புக் கூறல் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறையை அரசு எவ்வளவு தூரம் பயனுள்ளதாக முன்னெடுக்கின்றது என்பதை கண்காணித்து மதிப்பீடு செய்ய. 2). மேற்படி குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான விசாரணைகைளை நடத்துவதற்கு. 3). யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றவை தொடர்பான பொறுப்புக் கூறலுடன் சம்பந்தப்பட்டவற்றை சேகரித்து, பொருத்தமான எதிர்காலத் தகவல் பாவனைக்குப் பாதுகாக்க.
அது, யுத்தத்தின் போது ஐ.நா.செயன்முறைப் போக்குக் குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் ஐ.நாவுக்குள் ஓர் உள்மீள்பரிசீலனையை செய்வதற்குப் பரிந்துரைத்ததோடு, நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவை அதன் 2009 தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும்படியும் வேண்டியது.
சபாநாயகர் அவர்களே!
நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டமையின் தொடராக, அதனை இலங்கை அரசுக்கும், மனித உரிமைகள் கவுன்ஸிலின் தலைவருக்கும் செயலாளர் நாயகம் அனுப்பி வைத்தார்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழு பரிந்துரைத்திருந்த போதிலும், அப்படிச் செய்வதற்கான அதிகாரம் அவருக்கு உண்டு என சட்டவிவகார அலுவலகத்தில் உள்ள செயலாளர் நாயகத்தின் சட்ட ஆலோசகர்கள் அவ்வாறு செய்யுமாறு திரும்பத் திரும்ப அவருக்கு ஆலோசனை வழங்கிய போதிலும், தன்னுடைய பாட்டில் சர்வதேச விசாரணையை நிறுவுவதினின்றும் செயலாளர் நாயகம் விலகியே நின்றார்.
செயலாளர் நாயகத்தின் இத்தகைய மேன்மையான எச்சரிக்கைப் போக்கு அரசு, தனக்கு எதிராக சர்வதேசம் நடப்பதாகத் தெரிவித்த உண்மைக்குப் புறம்பான கூற்றை அம்பலப்படுத்தியது. தான் நியமித்த தனது சொந்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளைக் கூட நடைமுறைப்படுத்தாமல் தவறியதன் மூலம், அரசுக்கு, அது அளித்த உறுதியை நிறைவு செய்வதற்கு வேண்டிய இடத்தையும் நேரத்தையும் செயலாளர் நாயகம் அளவுக்கு மீறி வழங்கினார் என்பதே உண்மை.
சபாநாயகர் அவர்களே!
நிபுணர் குழுவின் அறிக்கை, அதையொட்டிய அரசின் பித்தலாட்டங்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் 2012 மார்ச்சில் 'இலங்கையில் மீள்நல்லிணக்கத்தையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்' என்ற தலைப்பில் 19/2 தீர்மானத்தை நிறைவேற்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைக்கு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் தள்ளப்பட்டது. அந்தப் பிரேரணை கூட மென்போக்கானதாகவே இருந்தது; எல்.எல்.ஆர்.ஸியின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும்படியும், நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறல், மீள் நல்லிணக்கம் ஆகியன சகல இலங்கையருக்கும் கிடைக்கச் செய்யும் விதத்தில் நம்பகரமான மற்றும் சுயாதீனமான நடவடிக்கைகளை ஆரம்பித்து, சம்பந்தப்பட்ட தனது சட்டக் கடப்பாடுகளை நிறைவு செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கும்படியும் வெறுமனே இலங்கை அரசைக் கோருவதாக மட்டுமே அது இருந்தது.
சுருக்கமாகச் சொல்வதானால் முன்னர் செயலாளர் நாயகம் என்ன செய்தாரோ அதனையே மனித உரிமைகள் கவுன்ஸிலும் துல்லியமாக மீண்டும் செய்தது; இலங்கை அரசு தான் வழங்கிய உறுதிமொழிகளை முன்னெடுப்பதற்கு ஊக்கப்படுத்திக் கொண்டு அதற்கான நேரத்தையும் இடத்தையும் வழங்கியது. இருந்தும், அந்தத் தீர்மானத்தை இணைந்து முன்மொழிந்தவர்களுக்கு எதிராக சரியாக ஆராயாமல் அரசு தரப்பிடமிருந்து ஆவேசமாக வெளிப்பட்ட கருத்துகள், அரசுக்கு வழங்கப்பட்ட மரியாதைக்குத் தலைகீழானவையாகவே இருந்தன. இந்தத் தீர்மானம் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது என்பதை தாம் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
யுத்தத்துக்கு முழு ஆதரவு வழங்கிய அதே நாடுகளின் இத்தகைய நட்புறவான புத்திமதியை அரசு ஏன் இத்தனை தூரம் விரோதமாகப் பார்க்கின்றது என நான் கேட்கிறேன். இந்த நாட்டின் அரசு மேலும் முதிர்ச்சியாக நடந்துகொண்டிருந்தால் நாடு மேலும் பயனமடைந்திருக்காதா? முன்னேற்றத்தை வெளிப்படுத்தமாறு கோரப்பட்டபோதும் அரசு இன்னும் பிடிவாதமான போக்குக்கு மாறிக்கொண்டது. இத்தகைய போக்குக்கு மத்தியிலும் கூட மனித உரிமைக் கவுன்ஸில் 2013 மார்ச்சில் தொடர் நடவடிக்கையாக அதேபோன்ற மென்மையான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
மீண்டும், அமைதியாகச் செயற்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுடன் ஈடுபட்டு அதன் வாய்ப்புக்களைப் பற்றிக்கொள்ளாமல் அரசு மோசமாகத் தவறிழைத்தது. அதற்குப் பதிலாக யுத்தத்திற்குப் பின்னரான அதன் போக்குக் குறித்து கவனம் செலுத்திய தரப்புக்களைத் தொடர்ந்து அரசு தாக்கி வந்தது.
சபாநாயகர் அவர்களே!
இலங்கையின் நண்பர்களின் பொறுமை 2014 இல் ஏற்கமுடியாத கட்டத்தை அடைந்தமை தவிர்க்கமுடியாதாயிற்று. தற்போதைய தீர்மானம், ஐந்து நீண்ட ஆண்டுகளாக அரசினால் முன்னெடுக்க முடியாமல் போன விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பரந்தரளவிலான புலனாய்வை நிறுவுவதற்கு இறுதியாக வழிசெய்தது. இன்று, அந்த விசாரணை முறைமை நிறுவப்பட்டுள்ளது. யுத்தத்தின் இறுதி வருடங்களின் போதும் பின்னரும் உண்மையில் என்ன நடந்தது என்பது இறுதியாக உறுதிப்படுத்தப்படப் போகின்றது, வெற்றிகர இராணுப் பிரசன்னத்தின் அடக்குமுறையைத் தாங்கமுடியாது அனுபவித்துக் கொண்டிருந்த - பாதிக்கப்பட்டவர்களுக்கு - அமைதி கிட்டப் போகிறது.
இந்தப் பிந்திய கட்டத்திலும் கூட, மனித உரிமைகள் ஆணையாளரின் அழைப்பை ஏற்று, சாட்சியங்களையும், சட்ட மருத்துவ சான்றுகளையும் விசாரணையாளர்கள் தொடர்புகொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் விசாரணைகளில் அரசு ஆக்கபூர்வமாகப் பங்குபற்றும் என்று நாம் தொடர்ந்தும் நம்புகின்றோம். விசாரணையோடு ஒத்துழைக்க அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை அரசு மறுக்குமானால், சபாநாயகர் அவர்களே இலங்கையை அது மேலும் தனிமைப்படுத்தும் பாதைக்கே இட்டுச் செல்லும்.
இலங்கையைப் பொறுத்தவரை இது ஒரு விசித்திரமான பாதையாக இருக்கும். சர்வதேச கிரிமினல் சட்டக் களத்தைப் பொறுத்தவரை, இலங்கை, இதுபோன்ற சூழ்நிலைகளில் அமைந்த ஏனைய நாடுகளை விட மேன்மையான பெருமை மிகு சரித்திரத்தைக் கொண்டது. உண்மையில் இலங்கையின் நீதிபதிகளும், சட்டமா அதிபர் திணைக்களச் சட்டத்தரணிகளும் சர்வதேச நீதி ஆயங்களின் எல்லா மட்டங்களிலும் நீதிபதிகளாகவும் வழக்குத் தொடுநர்களாகவும் பணியாற்றியிருக்கின்றனர்.
முன்னாள் யூக்கோஸ்லாவியா, ருவாண்டா, கிழக்குத் திமோர் போன்ற நாடுகளின் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், இராணுவத் தளபதிகள், புரட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு எதிரான வழக்குகளை முன்னெடுப்பதற்கு தற்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உட்பட இலங்கைச் சட்டத்தரணிகள் உதவியாக இருந்திருக்கின்றனர். அதேவேளை, முன்னாள் பிரதம நீதியரசர் அசோகா டி சில்வா, பிரிட்டனுக்கான முன்னாள் தூதுவர் நீதியரசர் நிஹால் ஜெயசிங்க, நீதியரசர் அமரர் ராஜா பெர்னாண்டோ உட்பட இலங்கையின் நீதிபதிகள் ருவாண்டா, கம்போடியா, ஸியாரோ லியோன் ஆகியவை தொடர்பான ஆயங்களில் பணியாற்றியிருக்கின்றார்கள்.
மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் இஸ்ரேலியர்களின் நடைமுறைகளினால் பலஸ்தீனியர்கள் மற்றும் ஏனைய அரபுக்களின் மனித உரிமைகள் பாதிக்கப்படுகின்றமை தொடர்பாக விசாரித்த விசேட குழுவின் தலைவராக ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹன்ன தலைமை வகித்தார். அத்தகைய பங்குபற்றலை அந்தந்த நாடுகளின் இறைமை மீதான மீறலாக அரசு கருதவில்லை. உண்மையில் ஐ.நா. பொதுச் சபைக்கு கோஹன்ன அளித அறிக்கை பாலஸ்தீன சிவிலியன்களை இஸ்ரேல் நடத்தும் முறையைக் கடுமையாக விமர்சித்திருந்தது.
இன்று அரசாங்கத்தின் இந்தத் தனிமைப்பட்ட நிலையானது, ஏனைய நாடுகளின் விடயத்தில் சர்வதேச நீதித்துறை செயற்பாடுகளில் அது உற்சாகமாகப் பங்குபற்றிய போக்குக்கு முற்றிலும் முரணானதாகும்.
சபாநாயகர் அவர்களே!
அரசின் தற்போதைய போக்கு, அதன் தலைவர்களின் முன்னைய செயற்பாடுகளுக்கும் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. உரிமைகள் பாதிக்கப்பட்டோருக்காகக் குரல் எழுப்பும் வெற்றி வீரராக முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திகழ்ந்தார். விருப்புக்கு மாறாக, பலவந்தமாகக் காணாமற்போகச் செய்தோர் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்ற 31 ஆவது ஐ.நா. செயலணிக் குழுக் கூட்டத்தில் 1990 செப்டெம்பர் 11 ஆம் திகதி அவர் பங்குபற்றினார்.
காணாமற்போனோர் தொடர்பான விடயங்களைக் கொண்ட 533 ஆவணங்களையும் காணாமற்போனோர் மற்றும் சட்ட முறையற்ற விதத்தில் கொல்லப்பட்டோர் தொடர்பான படங்களைக் கொண்ட 19 பக்கங்களையும் பொலிஸார் அவரிடமிருந்து பறிமுதல் செய்தமையினால் அவற்றை அந்தச் செயலணிக் குழுக் கூட்டத்துக்கு அவரால் எடுத்துச் செல்ல முடியாமல் போயிற்று. நாடு திரும்பியதும் கருத்து வெளியிடுவதற்கும், சட்டவிரோதமாகக் கைது செய்யப்படாமல் இருப்பதற்குமான தனது அடிப்படைச் சுதந்திரம் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை அவர் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இந்தச் சபையில் குறிப்பிடத்தக்க பல உரைகளை அவர் நிகழ்த்தினார். அந்த நேரத்தில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தை ஈடுபடுமாறு தாம் விடுத்த அழைப்பை அவர் 1990 ஒக்டோபர் 25ஆம் திகதி நியாயப்படுத்தினார். அவர் கூறினார் :- "நான் இந்த நாட்டின் தாய்மாரின் அழுகையை எடுத்துச்சென்றேன். அவர்கள் பற்றிப் பேச எனக்குச் சுத்திரம் இல்லையா? அந்த மக்களின் அழுகுரல்தான் அந்த 12 நாடுகளினாலும் செவிமடுக்கப்பட்டன" (25 ஒக்ரோபர் 1990 ஹன்சார்ட் 366 ஆவது பக்கம்). அந்த நேரத்தில் அவரது மிகத் தாக்கமான பேச்சு அந்த சமயத்தில் அவர் சபையில் மேற்கொண்ட சூளுரைதான். அது :- "மனித உரிமைகளை அரசு மறுக்க முயலுமானால் ஜெனீவாவுக்கு மாத்திரமல்ல, உலகின் எந்த இடத்துக்கும், தேவைப்பட்டல் நரகத்துக்கும் கூடச் செல்வோம், அரசுக்கு எதிராகச் செயற்படுவோம்" (ஹன்சார்ட் - 424 பக்கம். 1991 ஜனவரி 25)
சபாநாயகர் அவர்களே! 
ஐ.நா. மனித உரிமைகள் பொறிமுறையுடன் ஆக்கபூர்வமாகச் செயற்பட்ட நாடுகள் அந்த நடவடிக்கைகளில் இருந்து நன்கு மீண்டு, சர்வதேச சமூகத்தினால் மதிப்பார்ந்த உறுப்புநாடுளாக மதிக்கப்பட்டு, மனித உரிமைகளைப் பேணுவதற்கான உள்நாட்டு நிறுவனங்களுடன் மிளிர்ந்து நிற்பதை அண்மைக்கால சரித்திரம் காட்டுகின்றது. ஸியாராலியோன், கொலம்பியா, மெக்ஸிக்கோ, நேபாளம், மாலி, டோகோ, ஜவரிகோஸ்ட் மற்றும் பல நாடுகள் அரசுக்கு உதாரணம் காட்ட உள்ளன.

அதற்குப் பதிலாக இந்த ஆட்சிப்பீடம், சந்தர்ப்பவசமாக பாதுகாப்புச்சபையின் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கும் வடகொரியா மற்றும் சிரியாவின் சர்வாதிகாரப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. சபாநாயகர் அவர்களே! பாடம் மிகத் தெளிவானது. - தனிமைப்படுத்தல் மேலும் தனிமைப்படுத்தலையும் சர்வதேச கண்டனத்தையுமே விளைவாகத் தரும். அதற்கு மாறாக இலங்கை அதன் தோற்றத்தை மீளச் சரிபண்ண வேண்டுமானால் அது சர்வதேசத்துக்கு வழங்கிய தனது உறுதிமொழிகளை நிறைவுசெய்யவேண்டும் - அதிகாரத்தை அர்த்தமுள்ள வகையில் பகிர்தல், மோசமான குற்றங்களுக்கு பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தல் ஆகிய இரண்டு வழிகளிலும்.
சபாநாயகர் அவர்களே! 
தனிமைப்பட்டு நின்று எதிர்ப்புக்காட்டும் மன நிலையில் அரசு இருப்பது போல் தெரிகிறது. ஆனால் ஒருநாள் இந்த ஆட்சிப் பீடத்தின் தெரிவிலிருந்து நாடு கட்டாயம் மீளத் திருப்ப வேண்டியிருக்கும், அந்த நாள் விரைவில் வரும் என நாம் நம்புவோம். அந்த நாள் வரும்போது அந்த மீள் திரும்புகை இந்த நாட்டின் எல்லா மக்களுக்கும் நலன் பயப்பதாக இருக்கும். தண்டனை விலக்களிப்பு என்ற கசை தமிழர்களை விசேடமாகப் பாதித்துள்ளது. எனினும் அமைதியை விரும்பும் தெற்கு மக்களுக்கும் அது அந்நியமானதல்ல.

தெற்கில் இளைஞர்களின் கிளர்ச்சி நம்பகமான மதிப்பீடுகளின்படி பல பத்தாயிரம் பேர்களின் காணாமல்போதலுடன் கொடூரமாக அடக்கப்பட்டது என்பது எமக்கு நினைவில் உண்டு. இந்த நடத்தை பின்னர் வடக்கில் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. இப்போது இனவாத சக்திகள் தங்களின் வன்முறைத் திட்டத்தை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகத் தொடங்கியிருக்கின்றன. பல்லாயிரம் பேர் காணாமற்போய், கொல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டமை, எரிக்கப்பட்டமை மற்றும் அரச வன்கொடூரம் ஆகியன நினைவில் இருந்து தூரச்சென்றுவிட்டவை அல்ல.
இன்று அஹிம்சை ரீதியான எதிர்ப்பாளர்கள் தெற்கிலும் சுடப்படுகின்றார்கள். ஊடகவிலாளர்கள் கொல்லப்படுகின்றனர் அல்லது நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். அதிருப்தியாளர்கள் வரவேற்கப்படுவதில்லை. வடக்கில் நிலைமை இன்னும் மோசமானது. மக்கள் தங்களின் மறைந்த உறவுகளை நினைவுகூரக் கூட அனுமதிக்கப்படுகின்றார்கள் இல்லை. விமர்சன ஊடகங்களின் பத்திரிகையாளர்கள் ஒழுங்கு முறையாக - பட்டப் பகல் வெளிச்சத்தில் கூட தாக்கப்படுகின்றார்கள்.
'சித்திரைவதையை நிறுத்து' என்ற அண்மைய அறிக்கை, 2014 ஜனவரியில் வந்த அறிக்கைகளையும் உள்ளடக்கி, தமிழ்ப் பெண்கள், ஆண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் தொடர்வதை மருத்துவ, சட்ட மருத்துவ ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகின்றது. மேலும், அந்தச் சாட்சியங்கள், தமிழ் மக்களின் அரசியல் உரிமையை அடக்கும் நோக்கத்துடன் இந்தப் பாலியல் வன்முறை நடவடிக்கைகள் இலக்கு வைக்கப்படுகின்றன என்பதைத் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் அவர்களே! 
மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் நட்புத் தரப்புகள் வெளிப்படுத்தும் சர்வதேச ஒத்துழைப்புச் சிரத்தைகளையும் வாய்ப்புக்களையும் உதவிகளையும் நிராகரிப்பதற்கு அரசு தேசிய இறைமை என்பதைப் பயன்படுத்துகின்றது. ஆனால் அரசின் இறைமை பற்றிய சிந்தனை தவறானது. இறைமை என்பது தனித்தல் என்று அர்த்தம் அல்ல. தனிமைப்பட்டு இருத்தலுக்கான உரிமை என்று அதற்குப் பொருள் அல்ல. இறைமை என்ற எண்ணக்கருவின் சரியான புரிந்துணர்வு யாதெனில் அது நாட்டு மக்களுக்கு உரியது, பூகோள சமூகத்தில் ஏனைய உறுப்பினர்களுடன் சமமாக மதிக்கப்படவும் உலகுடன் திடமாக ஈடுபடவும் அவர்களுக்கு உரிமை அளிப்பதாக அது அமையவும் வேண்டும்.

இன்று, மக்கள் தமது இறைமையைப் பிரயோகிப்பதற்கு வெளிப்படையான பெரும் தடையாக இருப்பது இந்த ஆட்சிப்பீடமே. இந்த ஆட்சிப் பீடம், இந்த மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களின் நாட்டைத் தனிமைப்படுத்தி, நண்பர்களிடமிருந்து தள்ளி வைத்து, இறைமையை அவர்களிடமிருந்து அந்நியமாக்கியிருக்கின்றது. குறுகிய மனமுடைய சிலரின் நலனைப் பேணுவதற்காக எங்களின் இறைமையை இவ்வாறு கீழ்மைப்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆகவே, இன்று மக்களின் இறைமையைக் கீழ்மைப்படுத்துவதற்காகக் கேள்விக்கு உள்ளாகியிருக்கும் இந்த அரசு, இறைமை குறித்து குற்றம் சுமத்துவதற்கு உரிமையுடையது அல்ல. உண்மையில் சர்வதேச சமூகம் வெளிப்படுத்தும் சிரத்தையும், நடவடிக்கைகளும் நாட்டு மக்களின் இறைமையை மேலும் வலுப்படுத்துபவையாகவே உள்ளன.
வரவிருக்கும் ஐ.நா.வின் விசாரணை இலங்கைக்கு எதிரானதல்ல. அது மனிதாபிமான, மனித உரிமை சட்டங்களை ஒரேயடியாக மீறிச் செயற்பட்டவர்களுக்கு எதிரானது. முழு நாட்டையுமே பாதிப்புற வைத்த சட்ட விலக்களிப்புக். கலாசாத்துக்கு எதிரானது. அது வடக்கில் இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டமைக்கும் தெற்கில் இளைஞர்கள் காணாமல் போனமைக்கும் எதிரானது. வெல்வெரிய, முள்ளிவாய்க்கால், மிக அண்மையில் எனின் தர்க்காநகரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரானது.
இந்தக் காரணங்களினால் இரண்டு தரப்புகளினாலும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான இந்த விசாரணையை சந்தேகத்துக்கு இடமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.
எங்களைப் பொறுத்தவரை தமிழ்மக்களின் பெயரால் இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இதனைப் பார்க்கின்றோம். கடந்தகாலப் போக்கைத் தகர்த்து இலங்கை மக்களிடையே நீதி, மீள் நல்லிணக்கம், புரிந்துணர்வு கொண்ட புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இந்த விசாரணையை அருமையான வாய்ப்பாகப் பயன்படுத்துமாறு அரசைக் கோருகின்றோம். என்றார்.