ஜெனீவின் நகர்வில் அடுத்து நடக்கப்போவது என்ன ?
இலங்கை மனித உரிமை விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கான விசாரணைக் குழுவின் விசேட நிபுணர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கம் இந்த விடயத்தில் மாற்று வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால், அரசாங்கம் எவ்வாறான மாற்றுத்திட்டங்களை ஐக்கிய நாடுகளின் விசாரணை செயற்பாட்டில் மேற்கொள்ள முயற்சிக்கின்றது என்ற விடயம் இதுவரை தெரியவரவில்லை. மாறாக திட்டங்கள் உள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் தற்போது விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணை செயற்பாடுகளும் ஆரம்பமாகப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி எழுகின்றது. அதாவது அரசாங்கத்தின் மாற்றுத்திட்டம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதும் அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற விடயமும் இங்கு எழுப்பப்படுகின்ற – ஆராயப்படுகின்ற விடயமாகவுள்ளது.
சர்வதேச விடயத்தில் அரசாங்கம் வெறுமனே இருக்கவில்லை என்றும் தேவையான மாற்றுத்திட்டங்கள் குறித்து ஆராய்ந்துவருவதாகவும் ஐக்கிய நாடுகளின் விசாரணை செயற்பாடு முன்னெடுக்கப்படும்போது அதற்குரிய மாற்றுத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கிறார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் 3 விசேட நிபுணர்களை நியமித்துள்ளார்.
விசாரணைக் குழுவில் மொத்தமாக 12 உறுப்பினர்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்த மூன்று விசேட நிபுணர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்டி அத்திசாரி, நியூசிலாந்தின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சில்வியா கட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹான்கீர் ஆகியோர் இந்த விசாரணைக்குழுவின் நிபுணத்துவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டேம் சில்வியா கார்ட்ரைட் கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின் நீதிபதி பொறுப்பிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேம் சில்வியா கார்ட்ரைட் இந்த அனைத்துலக தீர்ப்பாயத்தின், இரண்டு நீதிபதிகளில் ஒருவராக செயலாற்றிவந்த நிலையிலேயே அவர் அந்தப் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை நியமித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை நேர்மையும், சுயாதீனத் தன்மையும், பக்கச்சார்பற்ற நிலையையும் கொண்ட சிறந்த நிபுணர்களை ஆலோசனைக் குழுவில் நியமிக்க கிடைத்தமை மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இந்த விசாரணைக்குழு நிறுவப்பட்டுள்ளதுடன் அடுத்தக்கட்ட நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் விசாரணைக் குழுவை நவநீதம்பிள்ளை எவ்வாறு நியமிக்கப்போகின்றார் என்று அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். அதாவது இலங்கையானது இலங்கைக்கு எதிரான பிரேரணையை முற்றாக நிராகரித்திருந்த நிலையிலும் விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று கூறிவந்த நிலையிலும் நவிபிள்ளை எவ்வாறு குழுவை நியமிப்பார் என்பது கேள்வியாக இருந்து வந்தது.
இந்தியா கூட ஜெனிவா வாக்கெடுப்பின்போது பிரேரணையை ஆதரிக்காமல் நடுநிலை வகித்திருந்தது. எவ்வாறெனினும் தற்போது விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைச் செயற்பாடுகளும் ஜுலை மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
விசாரணைக் குழு வட அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு சாட்சியங்களை திரட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைக் குழு உறுப்பினர்களின் விசாரணை செயற்பாடுகளுக்கான ஆவணப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
வட அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கான விஜயங்கள் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 10 மாதங்கள் விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையே விசாரணை காலப்பகுதி அமைந்துள்ளது.
ஆனால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியாகும்போது விசாரணைக் குழுவின் செயற்பாடுகள் முடிவடைந்து முழுமையான அறிக்கை தயார் செய்யப்படவுள்ளதுடன் அதனை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி பிரதீபா மஹானாம ஹேவா, விசாரணைகளை நடத்தி முடித்த பின்னர் விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு 2015 ஆம் ஆண்டு மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது அமர்வுக்கு சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின்னர் அறிக்கையை எங்கு சமர்ப்பிப்பது என்பதனை மனித உரிமைப் பேரவை தீர்மானிக்கும்'' என்று கூறியிருந்தார். ஒருவேளை இந்த அறிக்கை பாதுகாப்புச் சபைக்கு வழங்கப்பட்டால் அங்கு எமக்கு சீனாவும் ரஷ்யாவும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அத்துடன், இவ்வாறான அழுத்தம் ஒன்றை சமாளிப்பதற்கான வழி குறித்தும் மஹானாம ஹேவா இவ்வாறு கூறுகின்றார். அதாவது, கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றவேண்டும். இந்த விடயத்தில் நாங்கள் முன்னேற்றத்தை வெளிக்காட்டவேண்டியது அவசியமாகும்'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த செயற்பாட்டை சிறப்பாக முன்னெடுத்து தீர்வை அடையவேண்டும். இவ்வாறு உள்ளக செயற்பாட்டை உரியமுறையில் முன்னெடுத்தால் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள விசாரணைக் குழுவின் விசாரணை அறிக்கையை வலுவிழக்கச் செய்ய முடியும் என்று அவர் அறிவுரையும் கூறியிருந்தார்.
ஆனால், அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே இலங்கைக்கு எதிரான பிரேரணையையும் விசாரணைச் செயற்பாட்டையும் முழுமையாக நிராகரித்திருந்தது. பிரேரணை நிறைவேற்றப்பட்ட தினத்தன்று உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க, விசாரணைக் குழுவினரின் பரந்துபட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், இலங்கைக்கு எதிரான பிரேரணையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அரைவாசிக்கும் குறைவான உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளின் இறைமையை மீறுவதாக அமைந்துள்ளது. அத்துடன், சர்வதேச சட்டங்களின் விதிமுறைகளை மீறுவதாகவும் அமைந்துள்ளது என்றும் ரவிநாத ஆரியசிங்க திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் இலங்கை பாராளுமன்றத்திலும் உரையாற்றியபோது இலங்கைக்கு எதிரான பிரேரணையை திட்டவட்டமாக நிராகரித்திருந்தார். அதேவேளை அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல, மஹிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி. சில்வா ஆகியோரும் பிரேரணையையும் விசாரணையையும் நிராகரிப்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் விசாரணைக் குழுவுக்கான நிபுணர்கள் குழு நியமனத்துக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் வரவேற்பு வெளியிட்டுள்ளன. குறிப்பாக இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான விசாரணைக் குழுவிற்கு, ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளையினால் மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் நல்லாட்சி, மனித உரிமை விவகாரம், நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்பில் நிலுவையாக உள்ள பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கம் காத்திரமானதும் நிலையானதுமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை நிபுணர்கள் நியமனத்தை வரவேற்றுள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறும் இலங்கையை தொடர்ச்சியாக நான் வலியுறுத்துகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசியல் தீர்வு, நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவை குறித்தும் கவனம் செலுத்துமாறும் கோருகின்றேன். இந்த விடயங்களில் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு பிரிட்டன் தயாராகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சர்வதேசத்தினால் கோரிக்கை விடுக்கப்படுகின்ற நிலையில் இராஜதந்திர நகர்வுகள் எவ்வாறான அணுகுமுறைமையை கையாளப்போகின்றன என்று பார்க்கவேண்டும்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை பொறுத்தமட்டில் நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணையை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் கொண்டுவந்திருந்தன. இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தன.
கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்த இந்தியா இவ்வருடம் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சில வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஜெனிவா பிரேரணைக்கு எதிராக பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்த ஆளும் கட்சியின் எம்.பி. க்கள் அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினர். அதாவது ஜெனிவா மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் விசாரணைகளை முன்னெடுக்கக்கூடாது என்று கோரியே இந்த பிரேரணை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 144 வாக்குகள் பாராளுமன்றத்தில் கிடைத்தன. எதிராக 10 வாக்குகள் கிடைத்திருந்தன. ஜெனிவா பிரேரணையையும் ஐக்கிய நாடுகளின் விசாரணையையும் அரசாங்கம் எதிர்ப்பதற்கு இராஜதந்திர ரீதியில் மேற்கொண்ட முயற்சியாக இதனை குறிப்பிடுகின்றனர். ஆனால், அதற்கு அப்பாலான அரசாங்கத்தின் மாற்றுத்திட்டம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதே தற்போதைய விடயமாகும்.
குறிப்பாக, சர்வதேச அழுத்தங்களை வலுவிழக்கச் செய்யவேண்டுமாயின் உண்மையில் அரசாங்கம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதே யதார்த்தமாகும். இதனை பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்தகால யுத்த வடுக்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஒன்றின் மூலமே ஆறுதல் அளிக்க முடியும் என்பதனையும் யாரும் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக நியாயமான அரசியல் தீர்வு ஒன்றுக்காக தமிழ் பேசும் மக்கள் பல தசாப்தங்களாக முயற்சித்துவருகின்றனர். ஆனால், தீர்வுத்திட்டம் என்னவோ தொடர்ந்து தமிழ் மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்துவருகின்றது.
எனவே எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் அது தமிழ் மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பாதையை திறப்பதாக அமையவேண்டும். மாறாக, தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத் தீர்வுப் பிரச்சினையானது பூகோள அரசியல் சித்து விளையாட்டில் சிக்கிவிடக்கூடாது என்பதில் அனைத்துத் தரப்பினரும் கவனமாக இருக்கவேண்டும்.
காரணம் கடந்தகாலங்களில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து ஏமாற்றமடைந்த சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளன. அவ்வாறான நிலைமைகள் இதற்கு பின்னரும் ஏற்பட்டுவிடக்கூடாது. அரசியல் தூரநோக்குடன் தீர்வுத்திட்டத்துக்கான முயற்சிகள் இடம்பெறவேண்டும் என்பதனை இந்த இடத்தில் வலியுறுத்துவது பொருத்தமாக இருக்கும்.
-ரொபட் அன்ரனி-
தொடர்புடைய செய்தி
ஐ.நா, அமெரிக்கா இரு அதிகாரிகள் திடீர் விஜயம் எதற்கு ?
சிறிலங்கா ஒத்துழைக்க மறுப்பது குறித்து நவநீதம்பிள்ளை ஆழ்ந்த வருத்தம்