Breaking News

நெஞ்சை உறைய வைத்த குமுதினிப் படுகொலை

குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985
ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 29 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. 

பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. 

ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது. இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். 

இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நேரில் கண்ட ஒருவர் இவ்வாறு கூறுகிறார்.: “எனது தலையில் அடித்தார்கள். 

நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.” சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பன்னாட்டு மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது.71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 

பன்னாட்டு மன்னிப்பு அவையினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை இலங்கை அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது. இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் “ “இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை,” ” இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது. 

நெடுந்தீவு மக்களின் வாழ்வில் குமுதினிப்படுகொலை மறக்க முடியாதது. ஆண்டுதோறும் இந்தப் படுகொலையை நினைவுகூறும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத வடுவாக நிலைத்துள்ள குமுதினிப்படுகொலையை நெடுந்தீவு மக்கள் மாத்திரமின்றி உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களும் நினைவுகூறுகின்றனர். கடலம்மா கடலம்மா… நீயே சொல் குமுதினி ஏன் பிந்தி வந்தாள்? எம்மவரின் அவலங்களைச் சடலங்களாய்ச் சுமந்துகொண்டு ‘குமுதினி’ குருதி வடிய வந்தாள். 

கடலம்மா கண்டாயோ 

கார்த்திகேசு என்னவானான்? 
எந்தக் கரையில் உடலூதிக் கிடந்தானோ? 
ஓ…! சோழகக் காற்றே நீ,
வழம்மாறி வீசியிருந்தால்… 
‘குமுதினி’ வரமாட்டாள் என்று 
நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய். 

பாவம் மரணங்களின் செய்தி 
கூடக் கிட்டாத தொலைதீவில், 
ஏக்கங்களையும் துக்கங்களையும் 
கடலலைகளிடம் சொல்லிவிட்டுக் 
காத்திருக்கும் மக்கள்… 
கடலம்மா நீ மலடி 
ஏனந்தத் தீவுகளை அனாதரவாய்த் 

தனியே விட்டாய்? கடலம்மா… 
உன் நீள் பரப்பில் அனாதரவாய் 
மரணித்த எம்மவரை புதிய கல்லறைகளை எழுப்பி 
‘அனாதைக் கல்லறைகள்’ 
என நினைவூட்டு. ஆனால், 
இனிவருங் கல்லறைகள் 
வெறும் இழப்புக்களின் நினைவல்ல, 
எமது இலட்சியங்களின் நினைவாகட்டும்!

 -நிலாந்தன் 

 "துவம்சம்" அல்லது நினைவறா நாள். ( 15-05-1985 ) 
 குமுதினி ......... 
இந்தப் பெயரை, உச்சரிக்கும் உதடுகள்- 
இன்றும் கூட துக்கத்தால் ஒரு 
கணம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!! 
 காகம் கத்தித் துயிலெழும் - என் இனிய தீவினை ........ 
பட்டணத்தோடு இணைத்த பாலம் அவள்! 
 அவள் மடிமீது ஏறிய பின்புதான், 
எங்களின் பனாட்டும், பாயும்....... 

ஓலையும், ஒடியலும் ......... 
பண நோட்டுக்களாக மாறின !! 
 பிரபஞ்ச உருண்டைக்குள் தான், 
எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும் 
அந்தப் பாவைமீது காலை வைத்த - 
பின்புதான் நாம் கண்டுணர முடிந்தது !!! 
 ஆயிரம் பேதம் சொல்லி, பனம்கிழங்குக் கூறுகளாய்........ 

கிழிபட்டுக் கிடந்த என் மக்களை "மனிதமே, 
நேயமென்று" தன் மடிமீது சுமந்து ...... 
பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய 
புண்ணியவதி அவள் ! பலனை எதிர்பாராமல், 
கடமையை மட்டும் செய்த கீதை படிக்காத கோதை ! 
 என் கையில் சுமந்த புத்தகங்கள் ..... 
காலில் நசிபடும் செருப்பு ........ 

தீபாவளிப் புத்தாடை ..... 
பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை ....... 
அப்புவையும்,ஆச்சியையும், 
கிடத்திவைத்த சவப்பெட்டிகள் ....... 
எல்லாமே ...... எல்லாமே .......... 
அவள் சுமந்தவை ! 
 கட்டுமரங்களுக்கும் கைவலி-
வள்ளங்களுக்கும் கல்தாக் கொடுத்துவிட்டுக் 
கடும் வேகக் கப்பலாய் - 

என் துறைமுகத்தில் மிதந்த அழகுராணி ! 
 புள்ளிமானாய் துள்ளிக் குதித்து - 
அவள் ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது ....... 
மலைபோல் உயரும் அலைகளும் - அவளிடம் 
கைகட்டிப் பணிந்து, மௌன 
நுரையாய் சிதறுண்டு போகும் !! 
 அதிகாலையின் பனிச்சிதறலோடு ...... 
அன்றும் அவள் - தன் அரும்புத்திரர்களோடு 
புறப்பட்டுப் போனாள் !! 
 பிரளயம் என்பதை அறியா - அவளையே 

பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !! 
 வெடித்து வீசியெறிந்த பட்டாசுத் 
துண்டுகளாய் .......... காலறுபட்டு ........
கையறுபட்டு ........ துடிக்கத் துடிக்க ......... 
அவள் மடியில் உயிர் போன, 
என்னுயிர்த் தங்கைகளின் 
அழகான கனவுகள் பற்றி ....... 
இன்னமும் ....... அவர்கள் ........ 

வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி ....... 
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி 
கணப்பொழுதில் கருவுடனேயே ........ 
சிதையில் எரிந்த என் 
நண்பனின், மனைவி பற்றி ........ 
 பதைக்கப்,பதைக்க கொலையுண்டு 
கிடந்த பச்சை மழலை பற்றி ..... 
 மரணிக்கும் போதும், எதிரியிடம் 
மண்டியிடாது உயிர் விட்ட என்னூர்- 
வீர அன்னைகள் பற்றி ...... 

என்னினிய உணர்வில் தமிழைக் கலந்து, 
தன்னுயிரைக் கூலிப்படைக்கு காவு 
கொடுத்திட்ட தமிழாசிரியன் பற்றி ....... 
எவரைப்பற்றி ....... எவரைப்பற்றி ........ 
நான் புலம்பி அழ ????? வெல்லை, 
பெருந்துறை ....... குடவிலி, குவிந்தா ....... 
எத்திசை நோக்கினும் எங்கும் அழுகுரல் !! 
 கீழ்த்திசையிருந்து ........ பெருந்துறையீறாய்......... 
ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள். 
 என்னூர்க் கொண்டைச் சேவலும், 
காக்கையும், கூட மார்பில் அடித்த மரண நாளது !! 

 வீகாமனும்,வெடியரசனும், ஆண்ட 
திருத்தீவு விம்மல்களால் நிறைந்த நாளது ! 
 பூதத்தைக் கொண்டு பொழிந்த - கிணறுகளில் 
நன்னமுத நன்னீர் குடித்த - மனிதர்களின் 
கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது . 
 இந்து மாக்கன்னியின், பொட்டெனப் போற்றிடும் ....... 
நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி - 
கேவலம் காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ?? 
 ஈழதேசத்து மூளையாய்த் திகழும் - 
அழகிய தமிழின் இலக்கணத்தீவு ........ 

அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ??? 
 கூவியெழும் அலைகளின் கூக்குரல் - 
இக் காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது. 
மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !! 
மண்ணின் மடிவெடித்து மறுபடியும் 
பிறப்பீர்கள். ஆழ்கடலிருந்து ..... 
அலைகடலின் மடியிருந்து ...... 
வெட்டத் தளைக்கும் மரங்களாய் .....-
நீங்கள் விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!! 

"மா.சித்திவினாயகம்" ("மாவிலி" மலரிலிருந்து )


குமுதினிப் படுகொலை - நீதி மறுக்கப்பட்ட ஒரு துயரத்தின் கதை:

குமுதினிப் படுகொலையானதுமனித உரிமை அமைப்புக்களின் சான்றுகளில் இருந்து மறைக்கப்பட்டு, நீதி மறுக்கப்பட்டதாக, அல்லது நீதி வழங்கப்படாததாக இருபது தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. இத்தனை ஆண்டுகள் கழிந்தபின்னரும் குமுதினிப் படுகொலையில் உயிர் தப்பிய படகுப்பணியாளரையும் மற்றும் உயிர் தப்பிய பயணிகளையும் சிறிலங்கா கடற்படைதேடி வருகிறது. ஊர்காவற்துறை, இறங்குதுறை சிறிலங்கா கடற்படை முகாமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் அருகேதான் குமுதினி தரையேற்றப்பட்டு திருத்தப் பணிக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. 

அங்கு குமுதினியின் சில பணியாளர்கள் தங்கியிருந்தனர். இவர்களிடம் சென்ற சிறிலங்கா கடற்படையினர் 1985ஆம் ஆண்டு குமுதினி படுகொலையில் தப்பிய பயணிகள் எங்கே இருக்கிறார்கள் என விசாரிக்கின்றனர். அதேபோல் குறிகட்டுவான் இறங்குதுறையிலும், நயினாதீவு சிறிலங்காக்கடற்படை இறங்குதுறையிலும் தப்பிய படகுப்பணியாளரைப்பற்றியும்,தப்பிய பயணிகள் பற்றியும் தொடர்ந்தும் சிறிலங்கா படையினர் விசாரித்தே வருகின்றனர். இது ஏன்?. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் காலை ஏழு மணிக்கு நெடுந்தீவு மாவிலி துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டபோது, பொதுவேலைகள் திணைக்களத்திடம் இருந்து இப்போதைய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழுள்ள குமுதினிப்படகு அரை மணி நேர பயணத்தின் பின் சிறிலங்காக கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டது. 

இரு சிறிய பிளாஸ்ரிக் படகில் வந்த சிறிலங்கா கடற்படையினர் குமுதினிப் படகை நிறுத்தச்சொல்லி அதை நிறுத்தியபின்னர் 6 கடற்படையினர் முக்கோணக் கூர்க்கத்திகள், கண்டங் கோடாரிகள், இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினிப்படகில் ஏறினர். படகின் பின்புறம் இருந்த பயணிகளை படகின் முன்பக்கம் செல்லுமாறும் மிரட்டினர் அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். படகின் பின்புறம் இரு புற இருக்கைகளுக்கு நடுவே இயந்திரத்திலிருந்து பின்புறம் புறப்புளருக்குச் செல்லும் ஆடுதண்டுப்பகுதி மூடப்பட்டிருந்த பலகைகளை படையினர் களற்றி (இருக்கைகளிலிருந்து 4 அடி ஆழம் உள்ளதாக இது இருந்தது) அதன் பின் படகுப் பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். 

குமுதினி இருபக்க வாசல்களிலும் உள்ளும், வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக வந்த பயணிகளை அழைத்து கத்தியால் குத்தியும், கண்டம் கோடரிகளால் வெட்டியும், இரும்புக் கம்பிகளால் தாக்கியும் அந்த படகின் நடுப்பள்ளத்தில் போடப்பட்டனர். கொல்லப்பட்டவர் போக குற்றுயிராய்ப்போனவர்கள் குரல் எழுப்ப முடியாது செத்தவர்கள்போல் கிடந்தனர். இச்சம்பவத்தில்,தாக்குதல் நடக்குதென குரல் கொடுக்க முனைந்தவர்கள் அதிகாரிகளால் தாக்கப்பட்டு இறந்தார்கள். உள்ளே பள்ளமாக இருந்த பகுதியில் மக்கள் போடப்பட்டதால் முன்புறமிருந்து செல்லும் பயணிகளுக்கு ஒவ்வொருவராக முன்பு சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியாதிருந்தது. 

இதனையறிந்தஒருவர் கடலில் குதித்துக் கொண்டார். அதன் பின் படகில் இருந்த சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட படையினர் துப்பாக்கிகளால் அவர்களைச் சுட்டுக் கொன்றனர். ஏழுமாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமற்றமுறையில் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் இறந்தவர் போல கிடந்த சிலர் உயிர்தப்பிக் கொண்டார்கள். இப்படுகொலையின் பின் காயம் அடைந்தவர்கள் புங்குடுதீவு வைத்தியசாலைக்கும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கொல்லப்பட்ட விடயத்தை மருத்துவமனையால் சிறிலங்கா காவல்துறையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. 

பதிலாக சில நாட்களில் தப்பியவர்களை மருத்துவமனைக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் தேடத்தொடங்கினர். நோயாளிகள் உடனடியாக மருத்துவமனையிலிருந்து விடுதிகளுக்கு இடம் மாற்றப்பட்டு மறைக்கப்பட்டனர். உயிர் தப்பிய படகுப் பயணிகளை படையினர் புங்குடுதீவு மருத்துவமனையில் தேடிச்சென்ற போது சிலர் மறைக்கப்பட்டு தலை மறைவாகியே சிசிச்சை பெற்றனர். சிலரைத் தவிர ஏனையோர் வெளிநாடுகளுக்குத்தப்பிச் சென்றுவிட்டனர். அரசப் படைகள் படகுப்பயணிகள் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்களைத்தேடித்திரிந்தனர். இன்றும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். எதுவிதவிசாரணைகளும் மேற்கொள்ளப்படாது இக் கடற்படுகொலை மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் சாட்சிகளை தேடியழிக்கச் சிறிலங்காக்கடற்படையினர் தீவிர அக்கறைகாட்டி வருகின்றனர். விசாரணைகளற்று மறைக்கப்பட்ட குமுதினி கடற்படுகொலை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவேண்டும். சிங்கள தேசக் காடையர்களால் நிகழ்த்தி மறைக்கப்பட்ட கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும்.உலக நாடுகளின் மனச்சாட்சிகளை தட்டி உலுப்ப வேண்டும். இதற்கு இதில் உயிர் தப்பி மனித உரிமைச் சபைக்குச் சாட்சியமளித்து இன்று அச்சம் காரணமாக தலைமறைவாகியுள்ள சாந்தலிங்கம், குமாரசாமி, கணேசபிள்ளை போன்ற பலரும் உண்மைகளை உலகுக்கு இனியாவது வெளிப்படுத்த வேண்டும்.