Breaking News

இரும்புக் கடைக்கு போகவேண்டிய ஆயுதங்களை இந்திய அமைதிப் படையிடம் ஒப்படைத்த தலைவர்!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி
ஓர் சம்பிரதாய பூர்வமான போர்நிறுத்தம் அமுல் படுத்தப் பட்டது..நான் முந்திய அத்தியாயம் ஒன்றில் சொன்னவாறு,இலங்கையின் அபயக் குரலுக்கு அடிபணிந்த இந்தியா,எதற்காக இலங்கை வந்தார்களோ,அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமாயின், புலிகளிடம் உள்ள ஆயுதங்களை களைய வேண்டும்.

அப்படிக் களைந்தால்தான் எதிர் காலத்தில் இலங்கைக்கு புலிகளால் எதுவித தாக்குதல் பாதிப்பும் ஏற்படாது..என்பதால், போர் நிறுத்த ஒப்பந்தப்படி புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு இந்தியா நிர்பந்தித்தது.. அதற்கு தலைவர் பிரபாகரன் என்ன செய்தார் தெரியுமா? "சரி..ஒப்படைக்கிறோம் " என்று நேரடியாக இந்தியப் படைத் தளபதியிடம் சொன்னார்.

தலைவரின் அறிவிப்பை கேட்ட புலிகளின் உறுப்பினர்களுக்கு ஒரு கணம் மனம் உடைந்துவிட்டது என்பது உண்மைதான்..ஆயுதங்களா..அவை?அல்ல! ஒவ்வொரு போராளியும் தன் உயிரை விலையாக கொடுத்து எடுத்த பொக்கிஷங்கள் அவை! 1983 ஆனியில் ,சீலன் ஆனந்தன் போன்றவர்கள் தென்மராச்சிப் பகுதியில் நடைபெற்ற ஓர் சுற்றி வளைப்பின்போது உலகில் எந்த விடுதலைப் போராட்டங்களில் உள்ளவர்களும் செய்திராத மாபெரும் தியாகத்தைச் செய்து காப்பாற்றிய மிகச் சாதாரண தானியங்கிகள் அவை.

அதுபற்றி சுருக்கமாக இக் கட்டுரை தொடரை வாசிக்கும் அன்பர்கள் அறிந்து வைத்திருப்பது நல்லது!சாவகச்சேரிக்கு அண்மையில் 1983இல் புலிகளின் சிறிய முகாம் ஒன்று ஒரு வீட்டில் இருந்தது.அதில்,சாள்ஸ் அன்ரனி என்னும் போராளியும்,ஆனந்தன் என்னும் போராளியும்,பிற் காலத்தில் மட்டு-அம்பாறை தளபதியாக இருந்து,கடலில் ஓர் சண்டையின்போது தப்பி இராணுவத்திடம் பிடிபட்டு, கோட்டைச் சிறையில் இருந்து,

பின்னர் கைதிகள் பரி மாற்றத்தின்போது, தளபதி கிட்டுவால் விடுவிக்கப் பட்ட அருணாவும்,இன்னும் ஓரிருவரும் இருந்தனர்.. யாரோ ஓர் தமிழ்த் துரோகி கொடுத்த தகவலின்படி அந்த முகாம் இராணுவத்தால் சுற்றி வளைக்கப் பட்டது. அந்தச் சுற்றி வளைப்பிலிருந்து தப்ப, போராளிகள் பின்வாங்கி ஓடினர்.

அப்போது சீலனுக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுவிட்டது.சீலனின் கையில் ஓர் சிறிய தானியங்கி இருந்தது. சீலன் விழுந்துவிட்டான்.இராணுவம் தூரத்தில் சுட்டுக் கொண்டே அவர்களை நெருங்கி வந்தது..அந்த புலிகளின் சிறு படையணிக்கு சீலன்தான் பொறுப்பாளர். அப்போது சீலனை தூக்கி கொண்டு ஓட அருணா முயன்றார்.அப்போது சீலன், "அருணா..என்னை தூக்கி கொண்டு ஓடினால் நீயும் சுபடுவாய். அப்போது எவ்வளவோ கஷ்டப் பட்டு எடுத்த இந்த தானியங்கியை சிங்கள இராணுவம் கைப் பற்றி விடும்..எனவே..என்னைச் ..சுட்டுவிட்டு..தானியங்கியைக் கொண்டுசென்று அண்ணியிடம் கொடு "-என்றார்.

அருணா தயங்கி நின்றார்.ஒன்றாக ,ஒரே தட்டில் உண்டு,ஒரே பாயில் படுத்து , போராட்டத்தில் இணைந்து போராடிய உயிர் நண்பனை எந்தக் கையால் சுடுவது?-என்று அருணா சிந்திக்கும்போது,சீலனின் குரல் கடுமையாக ஒலித்தது.."அருணா..நான் கட்டளை இடுகிறேன்..

என்னைச் சுடு ..ஆயுதத்தை அண்ணையிடம் கொடு"-ஒரு புலியின், மேலதிகாரியின் கட்டளைக்கு எந்த வேளையிலும்,அது எப்படி இருந்தபோதும் அடிபணிந்து பழக்கப் பட்ட, ஓர் ஒப்பற்ற புலிவீரனால் -தலைவனால், வளர்க்கப்பட்டவர்கள் அல்லவா? கட்டளைக்கு அடிபணிந்தான் அருணா.

சீலன் துவண்டு விழுந்து வீரச் சாவடைந்தான்.அதுபோல் ஆனந்தனுக்கும் ஓட முடியாத பெருங்காயம் ஏற்பட்டதால் ,.அவனும் தன்னை சுட்டுவிட்டு ஆயுதத்தை கொண்டு போகுமாறு வேண்டினான்.அருணாவுக்கு வேறு வழி தெரியவில்லை. இரு உயிர்களைப் பலிகொடுத்து,இரு ஆயுதங்கள் காப்பாற்றப் பட்டன.

போராட்ட வரலாற்றின் புதிய பரிமாணம் ஒன்று உருவாகிய மண் ஈழத் தமிழ் மண்! எந்த மண்ணிலும் கண்டிராத,கேட்டிராத,தியாக வரலாறு அது.தமிழனுக்கே உரிய தனிக்குணம் என்றுகூடச் சொல்லலாம்....அப்படிப்பட்ட ஆயுதங்களை இந்திய ராணுவத்திடம் எப்படிக் கொடுப்பது? சில கடுமையான விளைவுகளை தவிர்க்கவும்,எமது மக்களை ஓர் போர் அபாயத்தில் இருந்து காக்கவும், தலைவருக்கு வேறு வழி தெரியவில்லை.


அன்று புலிகளும்,எமது மக்களும் உறங்கவில்லை..விம்மி விம்மி வெடித்தன தமிழர்களின் இதயங்கள்! ஆனால்,பின்னர் போராளிகளுக்கான ஓர் ஒன்று கூடலின்போது,தலைவர் போராளிகளுக்கு சொன்ன ஓர் முக்கிய மகிழ்ச்சியான செய்தி என்ன தெரியுமா?.


இந்திய இராணுவத்திடம் கையளிக்கப் பட்ட ஆயுதங்களில் பெரும்பாலானவை இரும்புக் கடைக்கு போகவேண்டிய,ஆயுதங்கள்..பிடி முறிந்த,குழல் உடைந்த ஆயுதங்களே! நல்ல ஆயுதங்கள் புலிகளின் மறைவிடத்தில் பத்திரமாக உள்ளன..அட! தலைவர் போரில் மட்டும் பெரு வீரனல்ல..போர்த் தந்திரோபாயங்களை வகுப்பதில் மட்டும் வீரனல்ல ..ராஜ தந்திரத்திலும் பெரு வீரன்!

ஏமாந்தவர்கள் இந்திய இராணுவத்தினர்தான்!. பெரும்பாலான ஆயுதங்களை இரும்புக் கடை முதலாளி வாங்கி கொண்டு,என்ன விலை கொடுத்திருப்பார்?பிளாஷ்டிக் வாளிகளா? அலுமினியச் சட்டிகளா? அல்ல!

வன்னிக் காடுகளில் பிற் காலத்தில் புலிகளுடன் ஏற்பட்ட சண்டையின்போது, இந்திய இராணுவம் அள்ளி அள்ளி புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது! நினைவில் இருந்து என்றும் அழியாத நினைவலைகளில் இதுவும் ஒன்று!

(தொடரும்)

-மு.வே.யோகேஸ்வரன் -