ரீ.ஐ.டி விசாரணையின் பின்னர் - தனக்குத்தானே தாக்கியதாக ஒப்புக்கொண்டாராம் மாணவன்
தினங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவன் தன்னைத்தானே தாக்கி தனக்குக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாக இப்போது கூறியிருக்கின்றார் என்று காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருக்கின்றார்.
முகமூடி அணிந்த இருவர் பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கழிப்பறையில் வைத்துத் தன்னைத்தாக்கி வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் தன்னை விடுதிக்கு அருகில் உள்ள பற்றையில் போட்டிருந்ததாகவும் மயக்கம் தெளிந்து எழுந்து தான் வந்ததாகவும் அவர் இம்மாதம் மூன்றாம் தேதி காவல்துறையிடம் முறையிட்டிருந்தார்.
அவர் தாக்கப்பட்ட கழிப்பறையில், தமிழ் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று உயிரச்சுறுத்தல் விடுத்த எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் இரண்டாவது தடவையாகக் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையிலும் பின்னர் இரத்தினபுரி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வெளியேறிய அந்த மாணவனை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர், பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்த அவர் அங்கு வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அப்போது தனக்குத் தானே காயங்களை எற்படுத்திக்கொண்டு கைகளையும் தானே கட்டிக்கொண்டதாக அவர் கூறியிருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண பிபிசியிடம் கூறினார்.
ஆயினும் காவல்துறையினர் இப்போது கூறியுள்ள இந்த விடயம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனுடைய தரப்பில் கருத்து எதனையும் அறிய முடியவில்லை. இந்த மாணவன் தொடர்ந்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருக்கின்றார்.
முன்னதாக ஜனாதிபதியின் செல்லப்பிள்ளையான மேவின் சில்வாவினால் கட்டிவைத்து தாக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் பின்னர் தானே கட்டிகொண்டதாகவும் மற்றும் அண்மையில் தாக்குதலுக்குள்ளாகி சுன்னத்து செய்ய முயற்சித்ததாக தெரிவித்த வட்டரக்க விஜித தேரர் கூட தன்னை தானே தாக்கிகொண்டதாகவும் இலங்கை பொலீசார் நாடகமாடியது குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற பல சம்பவங்களில் முதலில் தாக்குவதும் பின்னர் ரீ.ஐ.டி இனரின் கொடுமையான விசாரணையின் பின்னர் தம்மை தாமே தாக்கியதாக ஒப்புக்கொள்ள வைப்பதும் சிறீலங்காவின் ஜனநாயக நடைமுறையாகும் என்பதோடு இம் மாணவன் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.