Breaking News

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வவுனியாவில் பேரணி


காணாமல்  போனோரின் உறவுகளும் சமூக அமைப்புக்களும்
இணைந்து முன்னெடுத்த காணாமல் போனோரைக் கண்டறிதல் தொடர்பிலான மாநாட்டுக்கு நெருக்கடி ஏற்படுத்திய பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச காணாமல் போதலுக்கு எதிரான தினமான இன்று வவுனியாவில் வட மாகாணத்தின் ஐந்து மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரின் உறவுகளின் இணையம் இணைந்து பேரணியும் அதன் தொடராக மனுக் கையளித்தலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை காணாமல் போதலுக்கு எதிரான சர்வதேச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன் போது அரசியல் பிரமுகர்களின் உரைகள் உட்பட பல்வெறு நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ன.
இதனையடுத்து ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் அனுப்பி வைப்பதற்காக வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜரொன்று கையளிப்பதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன். வினோ நோகதாரலிங்கம், எம். சுமந்திரன், எஸ். சரவணபவன், வட மாகாணசபை அமைச்சர்களான ப. சத்தியலிங்கம், பா. டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்கள் இ. இந்திரராஜா, எம். தியாகராஜா, து. ரவிகரன், சி. சிவமோகன், அனந்தி சசிதரன், சிராய்வா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக இணைப்பாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சி. பாஸ்கரா மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோ உட்பட பலரும் கலந்து கொண்டடிருந்தனர்.

இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் ஊர்வலமாக வவுனியா மாவட்ட செயலகம் வரை செல்வதற்கு தீர்மானித்து நகரசபை மண்டபத்திற்கு வெளியில் வந்ததும் பொலிஸார் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரனிடம் ஊர்வலமாக செல்ல அனுமதி இன்மையால் அவ்வாறு செல்ல வேண்டாம் எனக் கூறினர்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் நாம் எவருக்கும் தொந்தரவின்றி வீதியோராமாக எமது காரியமொன்றிற்காக செல்லப்போகின்றோம் என தெரிவித்து நடந்து சென்றனர்.
இவருடன் அரசியல் பிரமுகர்கள் காணாமல் போனோரின் உறவுகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பலரும் சென்ற சமயம் நகரசபை வாயிலுக்கு அருகாமையில் கலவரத்தடுப்பு பொலிஸாரினால் தடைகள் போடப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதன்போது ஊhவலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கலவரத்தடுப்பு பொலிஸாரை தள்ளியவாறு சிலர் பொலிஸாரை கடந்து சென்றனர்.
எனினும் ஏனையோரை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் ஒவ்வொருவராக செல்லுமாறு பணித்தனர். இதன் பின்னர் பகுதி பகுதியாக வந்தவர்கள் மீண்டும் ஏ9 வீதிக்கு அருகாமையில் வைத்து ஒன்று திரண்டு பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக செல்ல முற்பட்டனர்.
இதனையடுத்து மீண்டும் பொலிஸார் தடை விதித்ததுடன் எக் காரணம் கொண்டும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என தொவித்தனா. இதனால் மீண்டும் ஊர்வலமாக சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
இந் நிலையில் ஊர்வலமாக சென்றவர்கள் வீதியின் குறுக்காக அமர்ந்து கொண்டதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் போக்குவரத்து தடைப்பட்டுக்கொண்டது.
இவ்வாறு வீதியில் அமர்ந்தவர்கள் ஜனாதிபதிக்கு எதிராகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸாருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.
இவ்வாறான நிலையில் பொலிஸாருடன் பேச்சுக்களை நடத்திய செபமாலை அடிகளார் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கருத்து ஒருமைப்பாட்டுக்கு வந்து வீதியில் இருந்தவர்களிடம் இங்கு பல்வேறானவர்கள் நுழைந்துள்ளனர். எவ்விதமான பாரதூரமான நிகழ்வுகள் ஏறபடுவதற்கான வாய்ப்புகள் வரலாம் என்பதனாலும் இன்று மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் உட்பட யாரும் அற்ற நிலை காணப்படுவதனாலும் நாம் சமர்ப்பிக்கவுள்ள மகஜரை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனா.
எனினும் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் முன்னின்று நிகழ்வினை நடத்துவதற்கு செயற்பட்ட பலரும் சம்மதம் தெரிவித்ததையடுத்து ஏ9 வீதியில் நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டன் பின்னர் அனைவரும் கலைந்து செனறிருந்தனர்.