Breaking News

இரண்டு தேசங்களின் அபிவிருத்திகள் - ஓர் ஒப்பீடு (படங்கள்)


போருக்கு பின்னரான தமிழா் தாயக அபிவிருத்தியும் இராணுவப்
பிரசன்னமும் என்பது ஓா் பாரிய அச்சுறுத்தலையும் அதனூடான செய்திகளையும் எங்களுக்கு வெளிக்காட்டி நிற்கின்றது. போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக சிறீலங்கா அரசால் பிரகடனப்படுத்தப்பட்டு 5 வருடங்களை கடந்துள்ள நிலையில் தமிழா் தாயக பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வாழ்வாதார முன்னேற்றம் என்பது பாரிய கேள்வியையும் அச்சுறுத்தலையும் வழங்குவதாக உள்ளது.
கீழ்காணும் ஆதாரத்தில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு புகைப்படங்களும் தமிழா்கள் எதிர்காலம் தொடா்பாகவும் இன நல்லிணக்கம், அபிவிருத்தி, அதிகாரபகிர்வு சம்பந்தமாக கருத்துரைக்கும் ஒவ்வொருவரும் கவனிக்கவேண்டிய செய்தியாகும். இங்கு அபிவிருத்தி என்ற போர்வையில் சிறீலங்கா அரசால் தென்பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகளும் அதனோடிணைந்த அரசின் அபிவிருத்தி நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கும் பகுதிகளான வடக்கு கிழக்கில் அரசால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகளையும் இங்கு காணலாம்.
தலைமைத்துவ வகுப்புகள் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தின் பிரபலமான கல்லூரி ஒன்றின் மாணவர்கள் இராணுவமுகாமில் வைத்து ஆயுதங்களுடன் நடமாடவிடப்படுகின்றனர். இதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை பேணி அனைவரையும் தமது நாட்டின் பற்றாளர்களாக மாற்றிவிடுவதாக நம்புகிறார்கள்
இங்கு முக்கியமாக அரசால் பிரதானமாக பிரச்சாரப்படுத்தப்பட்ட ஏ9 வீதி, மற்றும் புகையிரதப்பாதை புனரமைப்பு என்ற பிரதான கட்டமைப்பை தவிர அரசால் சொல்லப்பட்ட மீள்குடியேற்றம் பூா்த்தி செய்யப்பட்டதாக பிரச்சாரப்படுத்தப்பட்டபோதும் இதுவரை அரசால் அவா்களுக்கான ஒரு வீட்டுத்திட்டத்தையேனும் அமுல்படுத்த முடியவில்லை. ஆனால் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டத்தை காட்டி பிரச்சாரம் செய்து அது அரசின் அபிவிருத்தியாக காட்டிக்கொள்கின்றது. ஆனால் இந்தியன் வீட்டுத்திட்டம்கூட ஒருபகுதி மக்களின் தேவைகளையே பூா்த்திசெய்ய போதுமானது.
இந்தியா 50ஆயிரம் வீடுகள் என்று சொல்லப்பட்டபோதும் இதுவரை அதில் மூன்றில் ஒரு பகுதியைக்கூட அவா்களால் பூா்த்திசெய்ய முடியவில்லை என்பதோடுஅந்த வீடுகள்கூட அமைச்சா்களின்,பாதுகாப்பு செயலகத்தின் தலையீட்டினால் வடக்கு கிழக்கு எல்லையோர சிங்கள ,முஸ்லீம் கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. வடக்கு கிழக்கில் இடம்பெயா்ந்து மீள்குடியேறிய வடக்கு கிழக்கு மக்களுக்கு என்று சொல்லி உலக நாடுகளிலிருந்து பெறும் கடன்கள் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு என்ற போர்வைவையில் கோத்தபாய ராஜபக்சேயின் கீழ் கொண்டுவரப்பட்டு அது தென்பகுதியிலுள்ள சிங்களவா்களுக்கும்,படையினருக்குமாக செலவிடப்படுகின்றன.
2009ஆம் ஆண்டிற்கு பின்னா் தெற்கில் இதுவரை 80000வீடுகள் வரை திட்டமிடப்பட்டு பெருமளவான வீடுகள் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு படையினருக்கும் சிங்கள மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அபிவிருத்தி என்ற போர்வைவையில் கொழும்பிலும் அம்பாந்தோட்டையிலும் பல அதிவேக நெடுஞ்சாலைகளும் சிங்கள மாதிரி குடியேற்ற திட்டங்களும், விமான நிலையங்களும்,துறைமுகங்களுமாக அரசு தனது மக்களின் தேவைகளை மாத்திரம் பூா்த்தி செய்து வருகின்ற நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.
அவா்களுக்கு அரசால் மீள்குடியமரும்போது சில பகுதிகளில் வழங்கப்பட்ட 12 தகரங்கள் மற்றும் உலகவங்கியால் வழங்கப்பட்ட இருபத்தைந்தாயிரம் ரூபா பணத்தினை தவிர எந்த உதவிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. இராணுவத்தினா் வீடமைத்து கொடுப்பதாக கூறி சில இடங்களில் தரமற்ற வகையில் 3இலட்சம் பெறுமதியான வீடுகள் அமைக்கப்பட்டு இராணுவஅதிகாரிகளின் பெயா்கள் அவ்வீதிகளுக்கு சூட்டப்படுகின்றது. விதவைகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்குவதாக கூறி அவா்களின் வீடுகளுக்கு படையினா் அடிக்கடி செல்லும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
உண்மையிலேயே வடக்கில் முப்பத்தைந்தாயிரம் விதவைகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. அவா்களுக்கான வாழ்வாதார உதவிதிட்டங்கள் எதுவும் இதுவரை அரசாலோ அல்லது வடமாகாணசபையை பொறுப்பேற்றுள்ள த.தே.கூட்டமைப்போ இதுவரை முன்மொழிவையோ திட்டத்தையோ நடைமுறைப்படுத்தவில்லை. இவா்களில் சிலரை இராணுவத்திற்கு இணைக்கும் திட்டம் மட்டும் திட்டமிட்டு அரசால் மேற்கொள்ளப்படுகின்றது. 
பாடசாலைகள்கூட சில அரச சார்பற்றநிறுவனங்கள் உதவுகின்றபோதும் அதில் அரசின் பங்களிப்பு என்பது பாரிய வேற்றுமை காட்டப்படுகின்றது. பாடசாலை சிறுவா்களுக்கு அப்பியாச கொப்பிகள் வழங்கும் போர்வையில் மகிந்த ராஜபக்சேயின் மகன் நாமல் ராஜபக்சேயின் புகைப்படம் இருபக்கமும் பொறிக்கப்பட்டவாறு லமினேற் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. தலைமைத்துவ பயிற்சி என்ற வகையில் மாணவா்களுக்கு ஆயுதப்பயிற்சி வழங்கப்படுகின்றது. பாடசாலையில் மருத்துவ முகாம் என்ற வகையில் பாடசாலையில் இராணுவத்தினா் அத்துமீறி விபரங்களை பெற்றுவருவதால் மாணவா்கள் அச்சமடைகின்றனா். சகல விழாக்களுக்கும் அவா்கள் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளும் சம்பவங்கள் நடந்தேறுகின்றன.
இவ்வாறு ஒரு தேசத்தின் மீதான அழிவுகளையும் அடக்குமுறைகளையும் கூர்மைப்படுத்திக்கொண்டு இரண்டு தேசங்களாக பிளவுபட்டுப்போயுள்ள நாட்டை செயற்கைத்தனமாக அடாவடித்தனமாக ஒட்டவைக்கும் முயற்சிகள் எந்தளவிற்கு பயனளிக்கும்? இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோவையை பார்வையிடுவதன் மூலம் எவ்வாறு தமிழர் தேசம் சிதைக்கப்பட்டுவருகின்றது என்பதை காணலாம்.

-சக்கரவர்த்தி-

தமிழில் பார்வையிட

ஆங்கிலத்தில் பார்வையிட

காலத்தின் தேவைகருதி பிரசுரமாகும் இப்பதிவு ஒரு மீள்பிரசுரமாகும்