Breaking News

பதுளையில் மண் சரிவு

இலங்கை தலைநகர், கொழும்புவில் இருந்து 200 கி.மீட்டருக்கு கிழக்கே பதுளை மாவட்டம் உள்ளது. மலையகப் பகுதியான இங்கு ஏராளமான தேயிலை தோட்டங்கள் உள்ளன.

இந்த தோட்டங்களில் இந்திய கம்பெனி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கால்முழுல்லா நகரம் அருகேயுள்ள மீரியா பெட்டா கிராமத்தில் மலை அடிவாரத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 150 வீடுகள் அமைத்து தங்கியிருந்தனர்.

நேற்று முன்தினம் முதல் இங்கு தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் திடீரென அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அங்கு இருந்த 120 வீடுகள் மண்ணில் புதைந்தன. சேறும் சகதியும் அவற்றை மூடிக் கொண்டன.


எனவே, வீட்டில் இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் உயிருடன் மண்ணில் புதைந்தனர். ஒரு கிராமமே மண்ணில் புதைந்ததை அறிந்தும் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இருந்தும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 150 பேர் பலியாகி விட்டனர். இதற்கிடையே பல்வேறு பகுதிகளில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணிகளை தொடங்கினர்.
இப்பணியில் 500 ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் வரவழைக்கப்பட்டனர். மீட்பு பணியை துரிதப்படுத்த அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே மீட்பு பணியில் உதவ தயார் என இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய தூதர் வாயிலாக மத்திய வெளியுறவு துறை செயலாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.