Breaking News

பொதுவேட்பாளர் விவகாரத்தில் ரணில் இணக்கம் – மனோ தெரிவிப்பு!


எதிர்வரும் உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்
வேட்பாளர் ஒருவரை பொது சின்னத்தில் பொது வேட்பாளராக களம் இறக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீதிக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டால் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக் கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க இந்த சந்திப்பின் போது முன்வைத்துள்ளார்.
அதனை நீதிக்கான தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் ஏற்றுக் கொண்டதோடு பொது வேட்பாளர் யானை சின்னத்தில் அன்றி பொது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று முன்வைத்த கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டதாக இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, சிங்கள மக்கள் ஒடுக்கப்பட்டு வரும் நிலையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சிங்களவர்கள் இணைந்து பேரினவாதத்திற்கு எதிராக ஐக்கயத்துடன் செயற்பட வேண்டும் என மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்ட பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்றின் ஊடாக நாட்டில் நிலவும் தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ் – சிங்களத் தரப்பு வரலாற்று பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு தீர்வு காண முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை மனோ கணேசன் தரப்பு முன்வைத்துள்ளது.
அத்துடன் விருப்பு வாக்கு அகற்றம், வட்டார முறை தேர்தல் போன்ற மாற்றம் கொண்டுவரப்படும் போது வடகிழக்கு பகுதிக்கு வெளியே வாழும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு அமைய வேண்டும் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளரை நிறுத்தி தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய யுக்தியாக இருக்க வேண்டும் என்று மனோ கணேசன் கூறியுள்ளார்.
இலங்கையில் அடுத்த ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளும், அந்தத் தேர்தலுக்கான தமது ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரான ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அசாத் சாலி போன்ற பலர் கலந்துகொண்ட சந்திப்பு ஒன்று மாதுளுவாவே சோபித தேரரின் நீதிக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நடந்துள்ளது.
அங்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அதில் முதலில் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவதையும், நிறைவேற்று அதிகார ஆட்சி முறைமையை நீக்குவதையும் மையமான நோக்கமாகக் கொண்டு ஒரு வேட்பாளரை நிறுத்துவது பற்றி ஆராயப்பட்டதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதன் அடுத்தக் கட்ட பேச்சுவாத்தை மேலும் சில கட்சிகள் மற்றும் அமைப்புக்களை இணைத்ததாக எதிர்வரும் நவம்பர் 07 ம் திகதி நடைபெறவுள்ளதாக மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.