Breaking News

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நாவலடி மக்கள்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வாழைச்சேனை நாவலடி பிரதேசத்தில் பல கால்நடை வளர்ப்பாளர்களின் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டும், இறந்தும் போயுள்ளது.


இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் விவசாயம் மற்றும்  கால்நடை வளர்ப்பில் பெரும்பாலும் ஈடுபடுபவர்கள்.அதனால் தற்போதைய அடைமழை காரணமாக இவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, இது இவர்களின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் வசிப்பிடத்தில் செய்யும் தொழில்கள் காரணமாக மழையினால் பாதிப்புக்குள்ளான குடியிருப்புகளிலேயே கால்நடைகளுடன் வசிக்கின்றனர்.
கால்நடைகளுக்கு நோய்கள் தாக்கியுள்ளதாலும், திருடர்கள் பயம் காரணமாகவும் இடம்பெயற முடியாது இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கின்றனர்.அவ்வாறே நலன்புரி நிலையங்கள் வசதிகளும் இங்கில்லை.

அத்துடன் தேங்கி நிற்கும் மழை நீரினால் சேனைப்பயிர்ச் செய்கைகளும் அழிந்துள்ளன. தூரப்பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டிருப்பதால் கூலித்தொழில் செய்யகூடிய தொழிலாளர்களும் வருமான பாதிப்புக்குளளாகியுள்ளனர்.

இப்பகுதியில் கொழும்பு வீதியால் செல்லும் வாகனங்கள் தடைப்பட்டதால் பல ஹோட்டல்களும் மூடப்பட்டிருக்கின்றன.ஹோட்டல் தொழிலை நம்பி வாழும் சிறு கைத்தொழிலாளர்களும் ஹோட்டல் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களும் வருமானமற்ற நிலையில் பட்டினி வாழ்க்கையை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த காலங்களில் அதிக வறட்சியால் பாதிக்கப்பட்டதும் குடிநீர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதும், இந்த நாவலடி மக்களே ஆயினும் இப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு வறட்சி நிவாரணமும், பொருளாதார அமைச்சின் உதவிகளும் உரியவர்களால் முறையாக வழங்குவதில் ஊழல்கள் கணப்பட்டன.

தற்போதும் இப்பகுதி வாழ் மக்கள் அரசு அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்களின் பொருளாதார உதவிகளை பெரும் ஏக்கத்துடன் எதிர் பார்கின்றனர். இப்பிரதேசத்தின் நிர்வாக மோசடிகள் காரணமாக ஏற்கனவே அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் உரியவர்களை முறையாக உரிய நேரத்தில் சென்றடைவதில்லை என்பது இப்பகுதி வாழ் ஏழைகளின் நிரந்தர குற்றச்சாட்டு.

இது சம்பந்தமாக பலமுறை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.இம்முறையாவது இப்படியான சூழ்நிலையிலும் உரிய அரச அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயற்படாது அரச உதவி நிவாரணங்களை உடனடியாக வழங்க முன்வருவார்களா? மேலும் இப்பகுதி வாழ் ஏழை மக்களை பொருளாதார அழிவிலிருந்து காப்பாற்றுவார்களா?