Breaking News

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை-மைத்திரி

தனது தேர்தல் அறிக்கையில் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு யோசனைகள் எதுவும் உள்ளடக்கப்படமாட்டாது என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை செயலிழக்கச் செய்தல், அவசரமான அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட, 100 நாள் திட்டத்துக்கே தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்தப்படும்.100 நாள் செயற்திட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் அமையும் புதிய அரசாங்கம் தான், தமிழர் பிரச்சினை பற்றிய விவகாரங்களைக் கவனிக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பொது எதிரணி பேச்சுக்களை நடத்தியுள்ளது. ஆனால் அவர்களுடன் உடன்பாடு எதுவும் செய்து கொள்ளப்படவில்லை.தேர்தல் பரப்புரைகளின் ஒரு பகுதியாக வடக்கிலும் பேரணிகளில் கலந்து கொள்வேன்.

அடுத்த வாரம் தேர்தல் அறிக்கை தயாராகி விடும். அதில் தகவல் அறியும் உரிமைச் சட்டமும், ஊடக சுதந்திரமும் உள்ளடக்கப்படும்.நிறைவேற்று அதிகார ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட பின்னரும், அதிபராக பதவியைத் தொடர்வேன். ஆயுதப்படைகளின் தளபதியாக இருப்பேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.