மைத்திரிக்கு ஆதரவளித்தமை ஏன்? கூட்டமைப்பு விளக்கம் - THAMILKINGDOM மைத்திரிக்கு ஆதரவளித்தமை ஏன்? கூட்டமைப்பு விளக்கம் - THAMILKINGDOM
 • Latest News

  மைத்திரிக்கு ஆதரவளித்தமை ஏன்? கூட்டமைப்பு விளக்கம்


  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொதுஎதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

  அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும், பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு,

  இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜைகளையும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமுள்ளது.


  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஜனநாயகமும், சட்டமும் ஒழுங்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீரழிக்கப்பட்டுள்ளன. இதனால் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகள் பின்வருமாறு:


  1. நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, அரசின் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருக்கும் சர்வாதிகாரியாக மாறிவருகின்றார். அத்தோடு தான் நினைத்தபடி சட்டத்திருத்தங்களைச் செய்து மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்வதானது இந்த அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தெளிவாகக் காட்டுகின்றது.

  2. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் சுதந்திரமாகச் செயற்படமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

  பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடக்கம் இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறையற்ற சட்டத்திருத்தங்கள் வரை அனைத்து நிகழ்வுகளும் நீதித்துறையின் வீழ்ச்சியையே காட்டுகின்றன.

  த.தே.கூ. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 18வது சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததையிட்டு பெருமைகொள்கின்றது. அன்று 18வது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துத் தவறு செய்தவர்களுக்கு தமது தவறை திருத்திக் கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குகின்றது.


  3. ராஜபக்ஷ அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது. பணத்தைக் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி நாட்டிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக இன்று எமது பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கைபொம்மையாக மாறிக்கிடக்கின்றது.

  4. அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்களை, நேர்மையாகச் செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 17வது சட்டத்தை மாற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச்சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணையம், அரசசேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர்பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார். இது நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


  5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதேச்சதிகாரமானது சுதந்தர ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தகவல் பரிமாறும் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கானது ஜனநாயகத்தை நலிவுறச் செய்து நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே த.தே.கூ. வின் துல்லியமான கருத்தாகும்.ராஜபக்ஷ அரசு எப்பொழுதும் தமிழ்பேசும் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டு வந்துள்ளது.

  இந்நிலையில் தமிழர் பிரச்சினைகளுக்கு பிளவுபடாத இலங்கைக்குள் நேர்மையானதும், நியாயமானதும், நடைமுறைச் சாத்தியமானதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஒரு அரசியல் தீர்வினைக் காண த.தே.கூ. அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.

  அத்தீர்வு பற்றிய எமது நிலைப்பாட்டை எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் நாம் பகிரங்கமாக நாட்டுக்குத் தெரியப்படுத்திவந்துள்ளோம். யுத்தத்திற்குப் பின்னர் ராஜபக்ஷ அரசானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத்தர முயலாது காலத்தை வீணடிக்கும் கபடத்தனமான செயல்களையே செய்துவந்துள்ளது.

  யுத்தம் காரணமாக வடக்குக் கிழக்கில் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ்பேசும் மக்கள் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. வீடுகளோ, வாழ்வாதாரங்களோ, பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக வடக்குக் கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகளை ராஜபக்ஷ அரசு ஆக்கிரமித்துள்ளது.

  உச்ச நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பொருட்படுத்தாது ராஜபக்ஷ அரசு இப்பொழுது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டபடி காணிகளைச் சுவீகரித்து வருகின்றது.பாதைகளையும், பாலங்களையும் கட்ட கண்மூடித்தனமாகச் செலவிடப்பட்ட பெரும்தொகைக் கடன் பணம், வரி என்ற பெயரில் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

  யுத்தம் முடிந்து நீண்டகாலமாகியும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த ராஜபக்ஷ அரசு உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.இன்றும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு தகுந்த வாழ்வாதாரமோ, வீடுகளோ இல்லை. போதுமான உணவோ, சுய மரியாதையோ, பாதுகாப்போ இன்றி அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். குறிப்பாகப் பெண்களும், பிள்ளைகளும் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகின்றனர்.

  யுத்தத்தால் இறந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்கும் தடுப்பில் உள்ளவர்களுக்கும் எவ்வித இழப்பீடும் நீதியும் இன்னும் கிடைக்கவில்லை. ராஜபக்ஷ அரசு தமிழ்பேசும் மக்களுக்கு மோசமான துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே வழங்கியுள்ளது.

  இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வணக்கஸ்தலங்கள்மீது தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களுக்கு இடமளித்தது. அத்தோடு நில்லாமல் தாம் அரங்கேற்றிய இன, மத வன்செயல் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கவும் முயன்றது.

  இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து, 18வது திருத்தத்தை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு களம் இறங்கியுள்ள பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம்.

  பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாய், சமத்துவமாய், சுய கௌரவத்துடன் வாழ ஆரோக்கியமான ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படுவதற்கு சகல இன மக்களுடனும் முறையாக ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பது த.தே.கூ. வின் கருத்தாகும்.

  எனவே சர்வாதிகாரத்திலிருந்து நமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும்,நமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பவற்றை மீளப் பெறுவதற்காகவும் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.

  இதற்காக அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களும் தமது வாக்குகளை அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மைத்திரிக்கு ஆதரவளித்தமை ஏன்? கூட்டமைப்பு விளக்கம் Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top