சுன்னாகம் கழிவுஎண்ணெய் விவகாரம்! 9பேர் கொண்ட குழு நியமனம்
சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் மின்னிலைய கழிவு ஒயில் கலக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு 9பேர் கொண்ட குழுவொன்று வடக்கு அவையால் நியமிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே .சிவஞானம் தெரிவித்தார்.
23ஆவது மாகாண சபை அமர்வு கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதன்போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரன் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் நேரடி கண்காணிப்பில் சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கான 9பேர் கொண்ட விசேட குழு ஒன்று அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவினர் தங்களது செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பார்கள். இவ்வாறு ஆய்வினை மேற்கொள்ளும் குழுவினர் தங்களுடைய அறிக்கையினை அமைச்சரவையில் வழங்குவார்கள். அவர்களது பரிசீலனையினை அடுத்து சபையில் சமர்ப்பிக்கப்படும். இந்தக் குழுவில் மாகாண சபையின் உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை. நிபுணத்துவம் கொண்டவர்களே இவ்வாறான ஆய்வுகளில் மேற்கொள்ளவுள்ளனர் என்றார்.
இதேவேளை, சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணமாக, சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணெய் கசிவானது, தற்போது தெல்லிப்பழை வரை பரவியுள்ளது.
இதனால் பல்வேறு நோய்த்தாக்கங்கள் ஏற்படும் என மருத்துவ வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. எனவே பிரச்சினையினை முடிவுக்கு கொண்டு வருவதற்கே குறித்த குழு வடக்கு மாகாண சபையினால் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








