Breaking News

முற்றுப்பெறாத சிவாஜியின் பிரேரணை

வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை அடுத்த அமர்வில் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்படும் என அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். 


 வடக்கு மாகாண சபையின் 23ஆவது அமர்வு நேற்று கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது. அதன்போது உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்வைக்கப்பட்ட தனது பிரேரணை குறித்து சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.   அதற்குப் பதிலளிக்கும் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,    

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதனை இங்குள்ள முதலமைச்சர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம். எங்களிடம் மாற்றுக் கருத்துக்களும் இல்லை.    எனினும் அதிகார பூர்வமாக ஆதாரத்துடன் நிரூபித்தால் எமக்கு சாதகமாகவே அமையும். எனவே இனப்படுகொலை நடைபெற்றமையினை  நாம் ஆதாரத்துடன் நிரூபிப்போம்.    

எனவே எதிர்வரும் அமர்விற்கு குறித்த இனப்படுகொலை தொடர்பிலான பிரேரணை எடுக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.    இதேவேளை , உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் இனப்படுகொலை தொடர்பான பிரேரணை ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ளப்படும் என அவைத்தலைவர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் உறுதி அளித்திருந்தனர்.   

இந்த நிலையில் இனப்படுகொலை நடைபெற்றமைக்கான ஆதாரங்களை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முதலமைச்சரிடம் வழங்கியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.   எனவே பிரேரணை இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    24 ஆவது சபை அமர்வு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.