கெய்ல் அதிரடி ஆட்டம்! மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலாவது ‘டுவென்டி–20’ போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 03 போட்டிகள் கொண்ட சர்வதேச ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது.இதன் முதல் போட்டி கேப்டவுனில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்ரிக்கா களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
தென் ஆப்ரிக்க அணிக்கு ஹென்டிரிக்ஸ் (12), வாக் விக் (17) ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த கேப்டன் டுபிளசி, 20 பந்தில் 38 ஓட்டங்கள் எடுத்தார். டேவிட் மில்லர் (24) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரோசவ் அரைசதம் கடந்தார்.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. அவ்வணி சார்பா ரோசவ் 51, பெகார்டியன் 18 ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மேற்கிந்திய தீவு அணிக்கு டுவைன் ஸ்மித், கிறிஸ் கெய்ல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அதிரடியாக ஆடிய கிறிஸ் கெய்ல், சிக்சர் மழை பொழிந்தார். பர்னல் வீசிய 6வது ஓவரில், 3 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கெய்ல், 17 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார்.
முதல் விக்கெட்டுக்கு 78 ஓட்டங்கள் சேர்த்த போது டுவைன் ஸ்மித் (20) ஆட்டமிழந்தார். தொடர்ந்து அசத்திய கெய்ல், 31 பந்தில் 77 ஓட்டங்கள் (8 சிக்சர், 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்பாக ஆடிய சாமுவேல்ஸ், 32 பந்தில் 41 ஓட்டங்கள் எடுத்து கைகொடுத்தார். ரசல் (6), ராம்தின் (2) ஏமாற்றினர்.
கடைசி ஓவரில், 2 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, போலார்டு பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி, 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 168 ஓட்டங்கள் எடுத்து வென்றது.தென் ஆப்ரிக்கா சார்பில் இம்ரான் தாகிர் 3, பர்னல் 2 விக்கெட் வீழ்த்தினர்.இந்த வெற்றியின்மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1–0 என முன்னிலை வகிக்கிறது.








