Breaking News

அனந்தி மற்றும் சிவகரனின் இடைநிறுத்தம் கண்டனத்துக்குரியது - தமிழரசுக்கட்சியின் வட்டுக்கோட்டை இளைஞர் அணியினர்


வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ் .சிவகரன் போன்றோர் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை கண்டனத்துக்குரியது என்று   இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி இளைஞரணியினா் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான கண்மூடித்தனமான செயற்பாடுகள்  மேலும் அதிருப்திக்குள்ளாக்கினால் கட்சியில் இருந்தும் இளைஞரணியில் இருந்தும் வெளியேற வேண்டி வரும் என்ற எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அறிக்கையின் முழு வடிவம்

இலங்கைத் தமிழரசுக் கட்சி
இளைஞர் அணி வட்டுக்கோட்டை

22.01.2015


கௌரவ.கி.துரைராஜசிங்கம்
பொது செயலாளர்-கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
இலங்கை தமிழரசு கட்சி
மட்டக்களப்பு.


வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவரகள் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமையையும் கட்சியின் இளைஞரணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் அவர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமையையும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி இளைஞரணியினராகிய நாங்கள் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வாறான கண்மூடித்தனமான செயற்பாடுகள் எம்மை மேலும் அதிருப்திக்குள்ளாக்கினால் கட்சியில் இருந்தும் இளைஞரணியில் இருந்தும் வெளியேற வேண்டி வரும் என்ற எச்சரிக்கையையும் தெரியப்படுத்துகின்றோம்.


இலங்கை தமிழரசு கட்சி என்பது உட்கட்சி ஜனநாயக பாரம்பரிய கட்டமைப்பில் மிக நீண்ட காலம் செயற்பட்டு வந்தமையினாலும் கடந்த காலங்களில் வாலிபர் முன்னணி இளைஞர் பேரவை மற்றும் சுயாதீனமாக பலர் கடசிக்காக கட்சி நலனுக்காகவும் கட்சியின்இகட்சி தலைமையின் எதேச்சதிகார போக்கை கண்டித்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளார்கள் அவ்வாறான போராட்டங்களில் இன்றைய தலைவர்கள் கூட பங்குபற்றியிருக்கிறார்கள் குறிப்பாக அமிர்தலிங்கம் தொடக்கம் மாவை.சேனதிராசா வரை பலர் என்ற வரலாறுகளும் உண்டு.


எனவே உட்கட்சி ஜனநாயக கோட்பாட்டில் கருத்துரைக்கின்றவர்கள் மீது இவ்வாறு காழ்ப்புணர்ச்சி ரீதியாக அபாண்டமாக நடவடிக்கை எடுக்க முற்படுவது என்பது வருந்தத்தக்க விடயங்கள் ஆகும்.


தமிழ் தேசிய கோட்பாட்டிலும் அதன் அடிப்படை நிலையில் இருந்தும் விலகாமல் பல்வேறு சோதனைகளையும் விளைவுகளையும் எதிர்கொண்டு அரசியல் பணியாற்றுகிறவர்கள் மீது இவ்வாறான இடைநிறுத்த நடவடிக்கைகள் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.


எனவே இவ்வாறான நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தும் தமிழரசு கட்சியில் இருந்தும் இடைநிறுத்தும் செய்தியானது ஒவ்வொரு தமிழ் தேசிய உணர்வாளர்களின் உள்ளங்களிலும் மிகுந்த வேதனையையும் ஒரு ஜனநாயக கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் தொடர்பிலும் கேள்வியையும் விசனத்தையும் ஏற்படுத்தி நிற்கிறது.


எனவே இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர்களை உடனடியாக விடுவித்து கட்சிக்குள் உள்வாங்க வேண்டும்.


கடந்த காலங்களில் பல்வேறுவிதமானவர்கள் இவ்விதமான பாரிய விளைவுகளை ஏற்படுத்தியும் அவர்களுக்கு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டு இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்திருப்பதும் மேலதிக நடவடிக்கை எடுக்க முற்படுவதும் வேறு விதமான ஒரு நிலைப்பாட்டை தமிழரசுக்கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் எடுத்திருப்பதும் வேறுவிதமான கருத்தியலை உருவாக்க முற்படுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் இது இவர்கள் மீதான ஒரு முன்விரோத செயற்பாட்டுக்கான நடவடிக்கையாகவே எம்மை சிந்திக்க தலைப்படுத்துகிறது


எனவே இதிலிருந்து இவர்கள் இருவரையும் விடுவிக்க வேண்டும் அவ்வாறு விடுவிக்க மறுக்கும் பட்சத்தில் வட்டுக்கோட்டை இளைஞரணியினராகிய நாங்கள் அனைவரும் இலங்கை தமிழரசு கட்சியில் இருந்தும் இளைஞரணியிலிருந்தும் விலகிக்கொள்ள வேண்டி வரும் என்ற துர்ப்பாக்கியமான செய்தியையும் எச்சரிக்கையுடன் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.


க.துளசிதாசன்
தலைவர்


செ.பாபுஜி
செயலாளர்