கிழக்கு மாகாணத்திற்கும் புதிய ஆளுநர் விரைவில் நியமிக்கப்படுவார் - சம்பந்தன்
வடக்கு மாகாணத்தைப் போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுநர் மாற்றத்தை தமது கட்சி கோரியிருப்பதாகவும் அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் இராணுவ அதிகாரியான ஜெனரல் சந்திரசிறி ஆளுநருக்குப் பதிலாக, மூத்த சிவில் அதிகாரியான பலிஹக்காரவை புதிய ஆளுநராக நியமிக்கும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கையை வடக்கில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆளுநரை மாற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி விட்டதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றவுடன், அவரைச் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆளுநர் மாற்றம் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்வெளியுறவுச் சேவையிலும் ஐநாவின் பணிகளிலும் நீண்டகால அனுபவம் கொண்டவரும் நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினருமான எச்.எம்.ஜி.எஸ் பலிஹக்கார வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவதை தாம் வரவேற்பதாகவும் அவர் கூறினார்.
வடக்கைப் போலவே கிழக்கு மாகாணசபையிலும் ஆளுநர் மாற்றத்தை தமது கட்சி கோரியிருப்பதாகவும் அந்த மாற்றமும் விரைவில் நடக்கும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.இதனிடையே, ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும், அதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இரா. சம்பந்தன் கூறினார்.
மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறியின் நடவடிக்கைகள் மாகாணசபையின் நிர்வாகத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாகவும் வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு தொடர்ந்து நிலவுவதாகவும் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குற்றம்சாட்டி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்வாறே, முன்னாள் கடற்படை அதிகாரியான மொஹான் விஜேவிக்ரம கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக தொடர்ந்தும் பணியாற்றுவது சுதந்திரமான சிவில் நிர்வாகத்துக்கு தடையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








