Breaking News

பழம்பெரும் நடிகர் வி.எஸ் ராகவன் காலமானார்

தென்னிந்தியாவின் புகழ்பூத்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார்.


அவர் வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலன் இன்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1925ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். 1954-ஆம் ஆண்டு வெளிவந்த வைரமாலை என்ற தமிழ்ப்படத்தில் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.முதலில் நாடகத்திலும் பிறகு சினிமாவிலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நடித்து வந்த வி.எஸ்.ராகவன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.

1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வி.எஸ்.ராகவன் ஆல் இன் ஆல் அழகுராஜா, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.சாகும் வரையிலும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர் கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், உடல் நலக் குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார்.இவரின் பூதவுடலுக்கு திரையுலகினர் அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.மறைந்த பழம்பெரும் நடிகரின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மயானத்தில் இன்று நடைபெறவுள்ளது.